இதுதான் கோவை குசும்பு.. குப்பை எடுக்காத நகராட்சி ஆணையருக்கு குப்பையை பரிசாக தந்த மக்கள்
கோவை: கோவை மாவட்டம், சூலூர் அருகேயுள்ள கருமத்தம்பட்டி நகராட்சியில் குப்பைகள் சரிவர அகற்றப்படாமல் இருந்துள்ளது. நீண்ட நாட்களாகியும் அகற்றப்படாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், நகராட்சித் தலைவர் நித்தியா மனோகர் மற்றும் ஆணையர் பாரதிக்கு குப்பைகளை பார்சலாக பரிசளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி நகராட்சிப் பகுதியில் வீதிகளில் குப்பைகள் குவிந்து காணப்படுகின்றன. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாகவும், இங்கு தூய்மைப் பணிகள் முறையாக நடைபெறவில்லை என்றும் பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர். இதுதொடர்பாக கடந்த ஜனவரியில் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

ஆனாலும், அப்பகுதியில் குப்பைகள் அகற்றப்படாமலேயே இருந்துள்ளது. இப்பிரச்சினை தொடர்ந்து வந்ததால் கருமத்தம்பட்டி நகராட்சிப் பொதுமக்கள் தங்கள் பகுதியிலிருந்து குப்பைகளை சேகரித்து, பரிசுப் பொருளை சுற்றிவைக்கும் காகிதத்தில் சுற்றி, நகராட்சி தலைவர் மற்றும் ஆணையருக்கு பரிசாக வழங்கினர்.
இதில் கோபமடைந்த ஆணையர் பாரதி குப்பை பார்சலை வாங்க மறுத்தார். மேலும், வெறுமனே குப்பைகளை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுவதால் மட்டும் பயனில்லை. பழைய குப்பை அகற்றும் ஒப்பந்ததாரரை நீக்கிவிட்டு, புதிய டெண்டர் விடும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் நிலைமை சீராகும் என்று தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து, நகராட்சித் தலைவர் நித்தியா மனோகரனிடம் குப்பை பார்சலை பொதுமக்கள் வழங்கினர். தங்களுடைய பகுதியில் உள்ள குப்பை அகற்றும் பணிகளை மேற்கொள்ள வலியுறுத்தினர். இதற்கு பதிலளித்த நகராட்சி தலைவர் நித்யா மனோகரன், இதுபோன்ற செயல்கள் என்னை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும்.
சாலை வசதி 95 சதவீதமும், குடிநீர் வசதி 90 சதவீதமும் நிறைவடைந்துள்ளன. குப்பைகளை தரம் பிரித்து உரமாக்கும் பணிகள் 70 சதவீதம் நிறைவடைந்துள்ளன. குறைகளை கூறுவோர் எங்களுடன் இணைந்து பணியாற்றினால் 100 சதவீதம் இலக்கை அடையலாம். குறை கூறுவோர் எப்போதும் இருப்பர், தவறு இருந்தால் தேர்தலில் பார்த்துக் கொள்ளலாம் என்றார்.
புகார் அளிக்க வந்த பொதுமக்களை நகராட்சி தலைவர் மற்றும் ஆணையர் வெகுநேரமாக நிற்க வைத்து மட்டுமே பேசியது மிகுந்த வருத்தத்தை ஏற்படுதியதாக மக்கள் கூறினர். மேலும், தங்கள் பகுதி பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.












Click it and Unblock the Notifications