மோடிக்கு நிச்சயம் கருப்புக் கொடி தான்.. ரெடியா இருக்கு… திட்டவட்டமாக அறிவித்த வைகோ
கோவை:கன்னியாகுமரி வரும் பிரதமர் மோடிக்கு நிச்சயம் கருப்புக் கொடி காட்டப்படும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திட்டவட்டமாக கூறியிருக்கிறார்.
கோவை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது வைகோ கூறியதாவது:தூத்துக்குடி நடைபெற்ற கலவரம், வன்முறை ஆகிய சம்பவங்களுக்கு முழு காரணம் போலீசும், இந்த அரசும் தான் என்பதை காணொலி ஆவணங்களுடன் முகிலன் வெளியிட்டு இருக்கிறார்.
இது தவிர... மேலும் பல புகைப்பட ஆவணங்கள் இருப்பதாக முகிலன் கூறியிருக்கிறார். சென்னையில் நண்பர் ஒருவரை சந்தித்துவிட்டு... சொந்த ஊருக்கு ரயிலில் புறப்பட்ட அவர் இன்று வரை காணவில்லை.

தள்ளி வைப்பு
அவர் எங்கியிருக்கிறார் என்றும் தெரியவில்லை. அவரை கண்டுபிடித்து தருமாறு வலியுறுத்தி வரும் 2ம் தேதி அனைத்து தரப்பினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. அதற்காக... அன்றைய தினம் மதிமுக அறிவித்திருந்த உயர்நிலை செயல்திட்ட கூட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

முதல்வர்தான் பொறுப்பு
தற்போது 12 நாட்கள் கடந்தும் முகிலன் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. அவர் காணாமல் போனதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொறுப்பு.

ஆட்கொணர்வு மனு
முகிலனை கண்டுபிடித்து தரவேண்டுமானால் காவல்துறையில் புகார் தர வேண்டும் என்று தமிழக அரசு கூறுகிறது. முகிலன் குடும்பத்தின் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் அவரை கண்டுபிடிக்குமாறு ஆட்கொணர்வு மனுவும் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.

தமிழகத்துக்கு துரோகம்
முல்லை பெரியாறு விவகாரம், நீட் தேர்வு, காவிரி டெல்டா மண்டலத்தை விவசாயத்தை அழிக்க முயற்சி என்று மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்துக்கு துரோகம் செய்து வருகிறது. சமூக நீதியை குழி தோண்டி புதைக்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு இறங்கி இருக்கிறது.

கருப்புக்கொடி நிச்சயம்
கஜா புயல் விவகாரத்திலும் தமிழகத்துக்கு மோடி அரசு துரோகம் இழைத்திருக்கிறது. எனவே, தொடர்ந்து தமிழகத்துக்கு தொடர்ந்து துரோகம் இழைத்து வரும் பிரதமர் மோடி... கன்னியாகுமரி வரும் போது கருப்புக் கொடி காட்டுவோம். அறவழியில் இந்த போராட்டம் நடைபெறும் என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications