வால்பாறை 13வது கொண்டை ஊசி வளைவில் இருக்கும் ஆபத்து.. பதைபதைக்கும் விபத்து பின்னணி
கோவை: கோவை மாவட்டம் வால்பாறை மலைப்பாதையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் கேரளாவைச் சேர்ந்த 9 சுற்றுலாப் பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். 4 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்திற்கு காரணம் என்ன, அந்தப் பகுதி எப்படிப்பட்டது என்கிற தகவல் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்கள், பணியாளர்கள் சுற்றுலா சென்றுள்ளனர். மொத்தம் 8 பெண்கள், 5 ஆண்கள் என 13 பேர், திருச்சூர் மாவட்டத்தில் உள்ள அதிரப்பள்ளி அருவிக்குச் சென்றுள்ளனர். பிறகு அங்கிருந்து அவர்கள் வால்பாறைக்கு சென்றுள்ளனர்.

வால்பாறை விபத்து
வால்பாறையில் அவர்கள் பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்துள்ளனர். பிறகு பொள்ளாச்சி வழியாக கேரளா திரும்ப முடிவு செய்துள்ளனர். அவர்கள் வந்த சுற்றுலா வேனை முகமது ஃபாசித் (21) என்ற ஓட்டுநர் இயக்கியுள்ளார். அந்த வேன் மாலை 5 மணியளவில் வால்பாறை 13வது கொண்டை ஊசி வளைவு அருகே வந்தபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது.
அங்கிருந்து தடுப்புச் சுவரில் மோதி வேன் மலையில் இருந்து கவிழ்ந்தது. சுமார் 800 அடி பள்ளத்தில் வேன் உருண்டு 9வது கொண்டை ஊசி வளைவு சாலையில் தலைகீழாக விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் அஜிதா (54), ரம்லா (52), ஜூஹ்ரா (43), ஆஷா (41), மஜீத் (43), சஜிதா (45), ஷகிலா (37), ருகியா (39), ஹிஷாம் (12) ஆகிய 7 பெண்கள், 2 ஆண்கள் உள்ளிட்ட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அதிகாரிகள் ஆய்வு
ஓட்டுநர் முகமது ஃபாசித், நெவ்ஷாத் (39), ஷாஜிதீன் (11), மஸ்னீன் (10) ஆகிய 4 பேர் கோவை மற்றும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைகளில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், பொள்ளாச்சி சார் ஆட்சியர் ராமகிருஷ்ணசாமி, காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர்.
கேரளா மின்வாரிய அமைச்சர் கிருஷ்ணன் குட்டி மற்றும் அதிகாரிகளும் பொள்ளாச்சி மருத்துவமனைக்கு வந்த காயமடைந்தவர்கள், , உயிரிழந்தவர்களின் உறவினர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். விபத்திற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் வால்பாறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
13வது வளைவில் ஆபத்து
இதுகுறித்து பொள்ளாச்சியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பாலகுமரன் கூறுகையில், "வால்பாறை செல்லும் சாலையில் உள்ள 13 வது கொண்டை ஊசி வளைவு மிகவும் குறுகலான வளைவுகளில் ஒன்று. நன்றாக தெரிந்தவர்கள் மேலிருந்து கீழே வரும் பொழுது மிக கவனமாக தான் இந்த வளைவில் திரும்புவார்கள். தெரியாதவர்கள் மிக அலட்சியமாக மிக வேகமாக திருப்புவதை நாங்கள் பலமுறை பார்த்து இருக்கிறோம்.
இந்த வளைவு திரும்பும் இடத்தில் தடுப்பு சுவரை தாண்டி தவறி விழுந்தால் நேராக 9 வது வளைவில் தான் விழுவோம். 4 வது கொண்டை ஊசி வளைவில் இருந்து 13 வது கொண்டை ஊசி வளைவு வரும் வரையிலான மலை சாலையில் வேகமாக தான் பலர் வண்டி ஓட்டுகிறார்கள். வளைவுகள் பெரிதாக இல்லாத நேரான சாலை இருப்பதால் தீடீரென வளைவு வந்தவுடன் பிரேக் பிடித்து வண்டியின் வேகத்தை மட்டுப்படுத்தினால் மட்டும் தான் திருப்ப இயலும்.
கவனம்.. நிதானம்
அப்போது ப்ரேக் சரியாக பிடிக்கவில்லை எனில் நிச்சயம் தடுப்பை தான் வாகனம் விபத்திற்கு உள்ளாகும். விபத்தின் போது என்ன நிகழ்ந்தது என்பது தற்போது தெரிய வரவில்லை என்ற போது இப்படி தான் நிகழ்ந்து இருக்கும் என யூகிக்க முடிகிறது. வாகனம் ஓட்டுபவர்கள் மிக கவனமாக, நிதானமாக ஓட்ட வேண்டும்" என்று கூறியுள்ளார்.













Click it and Unblock the Notifications