அமரன் படத்தை ரசித்த முதல்வர்.. மாணவர்கள் இலவசமாகப் பார்க்க ஏற்பாடு பண்ணுங்க.. வானதி கோரிக்கை
கோவை: ஒரே நாடு, ஒரே தேர்தலை திறந்த மனதுடன் தவெக தலைவர் விஜய் பரிசீலிக்க வேண்டும். அரசியல் கட்சிகள் ஒரு விஷயத்தை சொல்லுகின்றனர் என்பதற்காக அதையே விஜயும் பேச வேண்டும் என்று அவசியம் இல்லை. அவர்கள் அதை ஸ்டடி பண்ண வேண்டும் என்று பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கோவை, காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே புதிதாக கட்டப்பட்ட பேருந்து நிறுத்தத்தை கோவை தெற்கு சட்ட மன்றத் தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன் திறந்துவைத்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோவை தெற்குத் தொகுதியில் அங்கன்வாடி மையங்கள் அதிக அளவில் திறக்கப்பட்டுள்ளன.

பழைய அங்கன்வாடி மையங்கள் அனைத்தும் அகற்றப்பட்டு புதிய அங்கன்வாடி மையங்கள் கட்டப்பட்டு வருகின்றன. கூடுதலாக இரண்டு அங்கன்வாடி மையங்களை இன்று திறந்து வைக்க இருக்கிறோம். நாளையும் நாளை மறுதினமும் தமிழக முதல்வர் கோவை வருகிறார். ஏற்கனவே அவர் கோவை வந்த பொழுது கோவை தொடர்பான கோரிக்கைகள் அவரிடம் கொடுத்திருந்தோம். அதில் ஒரு சில விஷயங்களுக்கு அரசின் சார்பில் பதில் கொடுக்கப்பட்டுள்ளது.
கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தி அரசிடம் ஒப்படைக்கப்படும்போது, ஒரு சில இடங்கள் முழுமையாக காலி செய்யப்படாமல் இருக்கின்றன. நில உரிமையாளர்கள் அதில் இருக்கின்றனர். அதனால் பணிகளை ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்படுகிறது. நிலத்தை ஒப்படைக்கின்ற போது முழுமையாக காலி செய்து ஒப்படைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை வரும் முதல்வரிடம் கேட்க இருக்கிறோம்.
அங்குள்ள மக்களை மத்திய அரசு வெளியேற்ற முடியாது. மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பாக மாநில அரசு நிறைய தகவல்களை மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டி இருக்கிறது. உடனடியாக கேட்கின்ற தகவல்களை தமிழக அரசு கொடுக்க வேண்டும். இந்தப் பேருந்து நிறுத்தத்தில் முதல்வர் படம் புறக்கணிக்கப்படவில்லை. எந்தெந்த இடத்தில் வைக்க வேண்டுமோ அதை செய்து இருக்கின்றனர்.
விஜய் குறித்து சீமான் கூறியுள்ள கருத்துக்கு நாங்கள் பதில் சொல்ல முடியாது. இன்னொரு தலைவரின் கருத்துக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று துணை முதல்வர் சொன்னார். அந்த ரகசியம் தெரியும் என்றும் சொன்னார். மூன்றரை ஆண்டுகளாகியும் இன்னும் மக்களுக்கு தெரியவில்லை.
எது சாத்தியம் இருக்கிறது என்பதை நாங்கள் மக்களிடம் சொல்வோம். அரசியல் கட்சி மக்களிடம் கொடுக்கும் வாக்குறுதிகளை அவர்களால் நிறைவேற்ற முடியுமா என்பதைப் பார்கக வேண்டும். மொழி சார்ந்த விஷயங்களில், உணவு சார்ந்த விஷயங்களில் எல்லாம் மத்திய அரசு தலையிடுவதில்லை. வேற்றுமையில் ஒற்றுமை என்பதுதான் பாஜகவின் லட்சியம்.
திருவள்ளுவருக்கு வர்ணம் பூசுவது அவரவர் விருப்பம். நூறு ஆண்டுகளுக்கு முன்பு வள்ளுவரின் புகைப்படம் எப்படி இருந்தது என்பதை நாம் பார்க்கிறோம். நாளை மறுதினம் நேரில் வரும்பொழுது முதல்வரை நேரில் சந்திக்க இருக்கிறோம். கடந்த முறை சந்தித்த பொழுது வைக்கப்பட்ட கோரிக்கைகளை பொறுமையாக முதல்வர் கேட்டார். கோரிக்கைகளை முதல்வர் செய்வார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.
ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது மக்களிடம் கருத்து கேட்டு அதற்கு என்று அமைக்கப்பட்ட குழு அரசிடம் அறிக்கை கொடுத்திருக்கிறது. இதில் இருக்கும் சாதக, பாதகங்களை ஒரு அரசியல் கட்சி யோசித்து பார்க்க வேண்டும். எல்லாரும் சொல்கின்றனர் என்று பேசக்கூடாது. விஜய் இதை எதிர்க்கிறார். அவரைப் போலவே பல கட்சியினரும் சொல்கின்றனர்.
மத்திய அரசு இதை எப்படி மக்களிடம் எப்படி தெளிவாக சொல்கின்றது என்பதை பார்க்கலாம். விஜய் அவர்களும் ஒரே நாடு ஒரே தேர்தல் விஷயத்தை திறந்த மனதுடன் பரிசீலிக்க வேண்டும். அரசியல் கட்சிகள் ஒரு விஷயத்தை சொல்லுகின்றனர் என்பதற்காக அதையே விஜயும் பேச வேண்டும் என்று அவசியம் இல்லை. அவர்கள் அதை ஸ்டடி பண்ண வேண்டும்.
கோவைக்கு முதல்வர் வருவதால் சாலை போட்டால் அது நல்லது தான். அடிக்கடி முதல்வர் கோவை வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். அப்படியாவது கோவை மக்களுக்கு சாலை வசதிகள் கிடைக்கும். 200 கோடிக்கு அவர்கள் கணக்கு கொடுக்க வேண்டும். பட்டியல் இனத்தை சார்ந்தவர்கள் மீது ஒரு விஷயத்தை வைத்தால் அவர்களுக்கு பாதுகாக்க சட்டம் இருக்கிறது.
பிராமண சமுதாயத்திற்கு இல்லை. பிராமணருடைய மொழியை கேவலப்படுத்துவது, பிராமண சமூகத்தை அவதூறு படுத்துவது என தொடர்ந்து இருக்கிறது. அவர்கள் கேட்பது நியாயமான கோரிக்கை. அரசு நிகழ்ச்சியில் கட்சி சின்னங்களை பயன்படுத்துவது என்பது சரியானது அல்ல. விமர்சனங்களை சரியான முறையில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பெண்களுக்கு மாதம் தோறும் உதவித் தொகை வழங்குவது மத்தியப்பிரதேச அரசு. நாட்டிலேயே முதல்முறையாக வழங்கியது பாஜக அரசு. ஜார்கண்டில் வாக்குறுதி கொடுத்திருக்கிறோம் அதை கொடுக்கப் போகிறோம். ஜார்கண்டில் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் நல்லபடியாக போய் கொண்டிருக்கிறது. மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மாநிலங்களில் பாஜக அரசு தான் அமையப் போகிறது.
வயநாடு இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. மத்திய ரயில்வே அமைச்சரிடம் கோவை ரயில்வேக்கு தேவையான திட்டங்கள் குறித்து நேரில் வலியுறுத்தப்பட்டுள்ளது. டிசம்பர் அல்லது ஜனவரியில் ஒரு நாள் முழுவதும் கோவைக்கு நேரம் ஒதுக்கி பார்ப்பதாக கூறியுள்ளார்.
அமரன் திரைப்படம் நன்றாக இருக்கிறது. ராணுவம் தொடர்பாக தெரிந்து கொள்ள இது இளைஞர்களுக்கு வசதியாக இருக்கும். படக் குழுவினருக்கு வாழ்த்துகள். இதில் கூடுதல் சந்தோசம் என்னவென்றால் இது போன்ற படங்களை கமல்ஹாசன் தொடர்ந்து தயாரித்து ரெட் ஜெயன்ட் மூவி மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
அவர்களுக்கு வியாபாரம் நல்லா ஆகட்டும், அதே வேளையில் நல்ல விசயம் மக்களுக்கு செல்லட்டும். இந்த படத்தை பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக போட்டு காட்ட வேண்டும். மாநில முதல்வர் ரசித்த படத்தை தமிழகத்தின் மாணவச் செல்வங்கள் ரசிக்க வேண்டும், வரி விலக்கு கொடுக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications