தோட்டத்தில் தெரிந்த கருப்பு உருவம்.. உலா வந்த ‘வேட்டையன்’.. சின்னதடாகம் மக்களுக்கு எச்சரிக்கை
கோவை: கோவை சின்னதடாகம் அடுத்த நஞ்சுண்டாபுரத்தில் தோட்டத்திற்குள் 'வேட்டையன்' காட்டு யானை நேற்று முன்தினம் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து விரைந்த வனத்துறையினர் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்ட நிலையில், சின்னதடாகம் சுற்றுவட்டார மக்கள் மற்றும் அப்பகுதிக்கு செல்வோர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தின் அழகே அதன் குளு குளு காலநிலையும், இயற்கை எழில் கொஞ்சும் மேற்குத் தொடர்ச்சி மலையும்தான். மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள வனப் பகுதிகளில் ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன. குறிப்பாக, ஏராளாமான யானைகள் வசித்து வருகின்றன. இதனால், உணவு, குடிநீர் தேடி வரும் யானைகள் ஊருக்குள் புகும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவது வழக்கம்.

யானைகள் நடமாட்டம்
குறிப்பாக, சின்னதடாகம், தடாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள மலையடிவாரப் பகுதிகளில் யானைகள் அவ்வப்போது குடியிருப்பு மற்றும் விவசாயப் பகுதிகளுக்குள் புகுந்து வருகின்றன. இதன் காரணமாக விவசாயத் தோட்டங்கள், வீடுகள் சேதமடைவது, மனித விலங்கு மோதல்களும் ஏற்பட்டு வருகின்றன. உணவு, தண்ணீர் தேடி அவ்வப்போது மலையடிவாரப் பகுதிகளில் உள்ள கிராமங்களுக்குள் புகும்போது, வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனாலும், யானைகளின் வருகை குறையவில்லை. இதனால், பொதுமக்கள் மத்தியில் அச்சமும் ஏற்பட்டு வருகிறது.
தோட்டத்தில் புகுந்த யானை
இந்நிலையில், கோவை சின்னதடாகம் அடுத்த நஞ்சுண்டாபுரம் பகுதியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாலதி நடராஜ் தோட்டத்தில் வேட்டையன் என்று அழைக்கப்படும் காட்டுயானை நேற்று முன்தினம் இரவு புகுந்தது. இரவு நேரத்தில் காட்டு யானை தோட்டத்திற்குள் புகுந்ததைப் பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து வனத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத் துறையினர் காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இந்த காட்டு யானை ஏற்கனவே அப்பகுதியில் நடமாடி வரும் நிலையில் மீண்டும் தோட்டத்திற்குள் புகுந்த சம்பவம் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வனத்துறை எச்சரிக்கை
குறிப்பாக இரவு நேரங்களில் யானைகள் நடமாட்டம் இருக்கக்கூடும் என்பதால், விவசாயிகள் மற்றும் மலையடிவாரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுள்ளது. தற்போது சின்னதடாகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகளவில் இருப்பதால் பொதுமக்கள் தேவையின்றி இரவு நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், யானைகள் தென்பட்டால் அவற்றை புகைப்படம் அல்லது வீடியோ எடுக்க அருகில் செல்லாமல் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
