ஆன்லைன் பைன் செல்லாது.. எங்க மெஷின்ல கட்டு - ஆட்டோ ஓட்டுநரை அசிங்கப்படுத்திய காவலர்.. வைரல் வீடியோ
கோவை: கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம் மேம்பாலம் அருகே சரக்கு ஆட்டோவில் தனது குடும்பத்தினரை ஏற்றி வந்த ஓட்டுநருக்கு அபராதம் விதித்த போலீஸார், அபராதத்தை தங்களுடைய மெஷினில் தான் கட்ட வேண்டும், ஆன்லைன் பைன் செல்லாது என்று கூறி ஓட்டுநரை ஒருமையில் தரக்குறைவாக பேசியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம் மேம்பாலம் அருகே இன்று காலை போக்குவரத்து காவல் துறையினர் வழக்கமான வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அந்த வழியாக தனது குடும்பத்தினரை சரக்கு ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு ஓட்டுநர் ஒருவர் வந்துள்ளார். அப்போது, அவரை மறித்த போலீஸார், விதி மீறலுக்காக அபராதம் விதித்துள்ளனர்.

தரக்குறைவாக பேசிய போலீஸ்
அப்போது, அந்த ஓட்டுநர் அபராதத் தொகையை ஆன்லைன் மூலம் செலுத்திக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். இதில், ஆத்திரம் அடைந்த ஒரு காவலர், "வாய மூடிட்டு போடா... கோபம் வந்துரும், நான் சொல்றத நீ கேக்குறியா? நீ சொல்றத நான் கேட்கவா?" என்று ஒருமையில் எகிறி அதிகாரத் தோணியில் மிரட்டி உள்ளார். இதனை அங்கிருந்த நபர் ஒருவர் செல்போனில் ரகசியமாக வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
அபராதத்தை கட்டு
அந்த வீடியோவில், அபராதத்தை நீதிமன்றத்திலோ அல்லது ஆன்லைனிலோ கட்ட சட்டத்தில் இடமிருக்கிறது. ஆனால் இந்த காவலர் நாங்கள் வைத்திருக்கும் மெஷினில் தான் கட்ட வேண்டும் என்று அடாவடி செய்கிறார் என்று அந்த நபர் பதிவிட்டுள்ளார். தன்னுடைய குடும்பத்தினருடன் சரக்கு ஆட்டோவில் வந்த ஓட்டுநரை அவர்கள் முன்பே ஒருமையில் மிரட்டிய காவலரின் செயலுக்குப் பலரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். காவலரின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பொதுமக்கள் கோரிக்கை
ஏழை மக்களிடம் சட்டம் பேசும் காவல் துறையினர், தங்களுடைய அதிகாரத்தை மிகத் தவறாகப் பயன்படுத்துகின்றனர் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்தக் காவலர் மீது காவல் துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications