மோடி கூட்டத்தில் ஆப்சென்ட்.. புதிய தமிழகம் கிருஷ்ணசாமி ட்விஸ்ட்.. இதுதான் மேட்டரா
கோவை: 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது. திமுகவை வீழ்த்துவதற்கு அதிமுக - பாஜக தீவிரம் காட்டி வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழ்நாடு வந்துள்ளார். மதுராந்தகத்தில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார். அதில் அதிமுக - பாஜக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளையும் மேடையேற்ற திட்டமிட்டுள்ளனர். இதில் புதிய தமிழகம் கட்சி கலந்து கொள்வதாக தகவல் வெளியானது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள அந்தக் கட்சியின் தலைவர் மருத்துவர் கிருஷ்ணசாமி, மதுராந்தகம் கூட்டத்தில் நாங்கள் கலந்து கொள்ளவில்லை. எங்கள் நிலைப்பாட்டை ஒருவாரத்தில் அறிவிப்போம். புதிய தமிழகம் கட்சி இல்லாமல் தென் தமிழகத்தில் யாரும் வெற்றி பெற முடியாது என கூறியுள்ளார்.
புதிய தமிழகம் கட்சித்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "சட்டமன்றத்தில் எங்கள் பிரதிநிதிகளை அனுப்புவதற்கும், ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்கும் வகையில் தேர்தலுக்கு வியூகம் அமைத்துள்ளோம். தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே தேர்தல் பரபரப்பு தொற்றியுள்ளது.

புதிய தமிழகம் கட்சி நிலைப்பாடு குறித்து ஊடகங்களில் செய்தி வந்தபடி வெளியாகி கொண்டிருக்கிறது. மதுராந்தகத்தில் நடைபெறும் கூட்டத்தில் புதிய தமிழகம் கட்சி பங்கேற்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. இதைப்பற்றி தன்னிலை விளக்கத்தை அளிக்க கடமைப்பட்டுள்ளேன். எங்கள் கட்சி கூட்டணி குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை.
யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து நிர்வாகிகளுடன் கலந்தாலோசனை செய்து வருகிறோம். சட்டமன்ற தேர்தலில் வென்று கொள்கை ரீதியான ஆட்சி அமைக்கும் வகையில் திட்டங்களை வகுத்து வருகிறோம். 2026 சட்டமன்ற தேர்தல் கூட்டணியில் புதிய தமிழகம் கட்சியின் நிலைப்பாட்டை ஒரு வாரத்திற்குள் அதிகாரபூர்வமாக அறிவிப்போம்.
கருணாநிதி, ஜெயலலிதா போன்றவர்கள் கூட்டணிக்கு என்று சில வழி முறைகளை வைத்திருத்தனர். தற்போது அப்படி இல்லை. தற்போதுவரை புதிய தமிழகத்தை அதிகாரபூர்வமான முறையில் எந்த கட்சிகளும் அணுகவில்லை. அரசியலில் வழக்கமான அணுகுமுறைகள் மாறிவிட்டன. ஆட்சியில் பங்கு என்ற நிலைப்பாடுகளுக்குள் தற்போது நாங்கள் போகவில்லை,
நாங்கள் திறந்த மனப்பான்மையுடன் இருக்கிறோம். புதிய தமிழகம் கட்சியின் மதுரை மாநாட்டின் 13வது தீர்மானத்தில் இருந்து நாங்கள் விலகவில்லை. மதுராந்தகத்தில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்ட மேடைக்கு நாங்கள் கலந்து கொள்கிறோம் என்று கடந்த 2 நாட்களாக பரவி வரும் செய்திகள் உண்மை இல்லை.
எங்கள் கூட்டணி நிலைப்பாடு குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. நாங்கள் எந்த விதமான குழப்பத்திலும் இல்லை. தமிழகத்தில் 100 தொகுதிகளில் நாங்கள் வலுவாக இருக்கிறோம். புதிய தமிழகம் கட்சி இல்லாமல், தென் தமிழ்நாட்டில் யாரும் வெற்றி பெற முடியாது. எங்களை யாரும் அழைக்கவில்லை என்பதை பற்றி கவலையில்லை.
மதுவிலக்கு, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உள்ளிட்ட நிலைபாட்டுடன் உள்ளோம். தமிழ்நாட்டில் அனைத்துத் துறைகளிலும் ஊழல், கனிம வளங்கள் திருடப்பட்டு வருகிறது. எங்கள் கொள்கையுடன் உடன்பாடு உள்ள கட்சியுடன் கூட்டணி அமைப்போம். கடந்த காலங்களில் இருந்த நிலைப்பாடு இந்தமுறை இருக்காது.
புதிய தமிழகம் கட்சி தனி சின்னம் கேட்டு போட்டியிடுவோம். ஒரு சில பகுதிகளில் மட்டும் போட்டியிடுகிறோம் என்பதால் தேர்தலுக்கு 5 நாட்கள் முன்புதான் சின்னம் கொடுப்பார்கள்" என்றார்.












Click it and Unblock the Notifications