எந்த அடிப்படையில், தகுதியான குடும்பத் தலைவிகள் தேர்வு செய்யப்படுவார்கள்? வானதி சீனிவாசன் கேள்வி
குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 வழங்க வேண்டும் என கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவும், பாஜக தேசிய மகளிரணி தலைவியுமான வானதி சீனிவாசன் வலியுறுத்தி உள்ளார்.
கோவை: குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 வழங்க வேண்டும் என கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவும், பாஜக தேசிய மகளிரணி தலைவியுமான வானதி சீனிவாசன் வலியுறுத்தி உள்ளார். எந்த அடிப்படையில், தகுதியான குடும்பத் தலைவிகள் தேர்வு செய்யப்படுவர் என்றும் வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பி உள்ளார்.
குடும்பத்தலைவிகளுக்கான 1000 ரூபாய் உரிமைத் தொகை குறித்து தமிழக பட்ஜெட்டில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறுகையில் "தகுதி வாய்ந்த குடும்பங்களின் குடும்பத் தலைவிகளுக்கு வரும் நிதியாண்டில் மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்பட இருக்கிறது" என்பதை பெரும் மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன்.
ஒன்றிய அரசால் பெருமளவு உயர்த்தப்பட்டுள்ள சமையல் எரிவாயு விலை, விலைவாசி உயர்வால் அதிகரிக்கும் குடும்பச் செலவுகள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களின் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூபாய் ஆயிரம் என்பது அவர்களின் அன்றாட வாழ்க்கைக்குப் பேருதவியாக இருக்கும்.

திட்டம் எப்போது
வரலாற்று சிறப்பு மிக்க இந்தத்திட்டம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டான இந்த ஆண்டில் திராவிட இயக்க மாதம் என சொல்லத்தக்க செப்டம்பர் மாதத்தில் தாய் தமிழ்நாட்டின் தலைமகன் பேரறிஞர் பெருமகன் அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் மாதம் 15 ஆம் நாள் முதல் இத்திட்டம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட இருக்கிறது. இத்திட்டத்தின் கீழ் மகளிர் பயன்பெறுவதற்கான வழிமுறைகள் விரைவில் வெளியிடப்படும். தமிழ்நாட்டு மகளிரின் சமூக பொருளாதார வாழ்வில் ஒரு புரட்சியை ஏற்படுத்தக்கூடிய இத்திட்டத்திற்காக இந்த வரவு செலவுத் திட்டத்தில் 7000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" இவ்வாறு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.

1000 உரிமைத் தொகை
இந்நிலையில் பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் உள்ள குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ. 1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என, 2021 சட்டப்பேரவைத் தேர்தலின் போது திமுக வாக்குறுதி அளித்தது. ஆட்சிக்கு வந்து இரண்டாண்டுகள் ஆகியும், அதனை நிறைவேற்றவில்லை. எதிர்க்கட்சிகளும், பொதுமக்களும் இது குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பி, திமுக அரசுக்கு நெருக்கடி கொடுத்ததால் வேறு வழியின்றி, வரும் செப்டம்பர் 15-ம் தேதி முதல், குடும்பத் தலைவிகளுக்கு 1,000 ரூபாய் வழங்கப்படும் என, பட்ஜெட்டில் அறிவித்துள்ளனர்.

பாதிபேருக்கு மட்டுமே கிடைக்கும்
ஆனால், அனைவருக்கும் வழங்காமல், தகுதி உள்ள குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எந்த அடிப்படையில், தகுதியான குடும்பத் தலைவிகள் தேர்வு செய்யப்படுவர் என்பது தெரியவில்லை. இத்திட்டத்திற்கு ரூ. 7,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் சரிபாதி குடும்பத் தலைவிகளுக்கு ரூ. 1,000 உரிமைத் தொகை கிடைக்காது என்று கூறப்படுகிறது. இது நடுத்தர மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியாக இருக்கும். எனவே, அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் ரூ. 1,000 உரிமைத் தொகை வழங்க வேண்டும். தமிழகத்தில் வளர்ச்சி என்பது அனைத்து மாவட்டங்களிலும் சமச்சீராக உள்ளது. எனவே, பின்தங்கிய மாவட்டங்கள், விவசாயத்தை மட்டும் நம்பியிருக்கும், விவசாயத் தொழிலாளர்கள் நிறைந்த மாவட்டங்களின் வளர்ச்சிக்கென தனி திட்டங்கள் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.

கோயில்கள்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை, இந்து சமய அறநிலையங்கள் துறை, வனத்துறை போன்ற பல்வேறு துறைகளின்கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளும், பள்ளி கல்வித்துறையின்கீழ் கொண்டுவரப்படும் என, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. திருக்கோயில் நிலத்தில், திருக்கோயில் நிதியில், இந்து அறநிலையத்துறை சார்பில் தொடங்கப்பட்ட பள்ளிகள், இந்து சமய கல்வி இருக்க வேண்டும். மற்ற மத நிறுவனங்கள் நடத்தும் பள்ளிகளில், அந்தந்த மதங்களில் பிரார்த்தனை பாடல்களுடன் பள்ளிகள் துவங்குகின்றன. அதுபோல இந்து கோயில் நிதியில் தொடங்கப்பட்ட பள்ளிகளில், இந்து சமய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்.

தொலைநோக்கு இல்லை
பத்திரப் பதிவு, சொத்து வரி, கலால் வரி, சாலை வரி என, தமிழகத்தின் வரி வருவாய் அதிகரித்துள்ளது. ஆனாலும், நிதி, வருவாய் பற்றாக்குறையை குறைத்து காட்டுவதற்காக, அரசு திட்டங்களுக்கான நிதியை குறைத்துள்ளது தெரிகிறது. 2023-24-ல் தமிழக அரசு ரூ. 1 லட்சத்து 43 ஆயிரத்து 197 கோடியே 93 லட்சம் அளவுக்கு மொத்த கடன் பெற திட்டமிட்டுள்ளதாகவும், இதனால், 31-3-2024-ல், தமிழக அரசின் மொத்த கடன் ரூ. 7 லட்சத்து 26 ஆயிரத்து 28 கோடியே 83 லட்சமாக இருக்கும் என, பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. கடன்களை குறைக்க நடவடிக்கை எடுப்பது தான் சிறந்த நிர்வாகத்தின் அடையாளம். அதனை திமுக அரசு செய்யவில்லை. மொத்தத்தில் மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கும், தொலைநோக்கு இல்லாத பட்ஜெட்டை திமுக அரசு தாக்கல் செய்துள்ளது" இவ்வாறு வானதி சீனிவாசன் அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications