உருவாகுது ஸ்பெஷல் பிளான்.. களமிறக்கப்பட்ட பிடிஆர்.. கோவைக்கு மெகா பிளானை இறக்கும் தமிழ்நாடு அரசு
கோவை: தமிழ்நாட்டில் இருக்கும் டெக் நகரங்களை மேம்படுத்தத் தனியாக ஒரு சிறப்புச் செயல்திட்டத்தைத் தமிழ்நாடு அரசு வகுக்க உள்ளதாக ஐடி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
கோவையில் கனெக்ட் கோயம்புத்தூர் 2023 என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் பிடிஆர் இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார். மேலும், கோவையில் திட்டத்தைச் செயல்படுத்த நிலம் கண்டறியப்பட்டுள்ளதாகவும் தனியார் பங்களிப்புடன் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

நேற்று வியாழக்கிழமை நடந்த 'கனெக்ட் கோயம்புத்தூர் 2023' நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் பிடிஆர், "தமிழ்நாட்டில் இருக்கும் டெக் நகரங்களை மேம்படுத்தத் தமிழ்நாடு அரசு புதிய செயல்திட்டத்தைத் தமிழக விரைவில் வகுக்க உள்ளது.
புது திட்டம்: இந்த திட்டத்திற்காக நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இது கோவையில் குடியிருப்பு, வணிகம், சில்லறை விற்பனை, பொழுதுபோக்கு இடங்கள் என அத்தனையும் கொண்ட ஒரு தன்னிறைவான வளாகமாக இருக்கும். இந்த டெக் நகரங்களைத் தனியார் நிறுவனங்கள் இணைந்து அரசு பிபிபி முறையில் ( public-private partnership) முறையில் உருவாக்க உள்ளது. இதற்காகவே தனியாக ஒரு செயல் திட்டத்தை நாங்கள் மிக விரைவில் கொண்டு வர இருக்கிறோம்." என்றார்.
ஐடி துறையில் கோவை மின்னல் வேகத்தில் வளர்ந்து வருகிறது. பல டாப் நிறுவனங்களும் இங்கே தங்கள் அலுவலகங்களைத் திறக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இருப்பினும், தேவைக்கு ஏற்ப அலுவலகத்திற்கான நிலம் மற்றும் கட்டிடங்கள் இல்லாமல் பற்றாக்குறை இருப்பதாகக் கூறப்படுகிறது. புதிதாக அலுவலகங்களைத் திறக்க விரும்பும் நிறுவனங்களுக்கு இது பெரிய பிரச்சினையாக இருக்கிறது. இதைத் தீர்க்கும் வகையில் மிக விரைவில் இங்கு 2 லட்சம் சதுர அடியில் எல்காட் கட்டிடம் அமையும் நிலையில், இங்கும் பல நிறுவனங்கள் வரவுள்ளது.
கோவை ஏர்போர்ட் விரிவாக்கம்: தொடர்ந்து நீண்ட காலமாகக் கிடப்பில் இருக்கும் கோவை ஏர்போர்ட் விரிவாக்கம் குறித்துப் பேசிய அமைச்சர் பிடிஆர், "கோவை விமான நிலையம் விரிவாக்கத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணி முடிந்துவிட்டது. நிலத்தை ஒப்படைக்க ஒப்பந்தம் கையெழுத்தாக வேண்டும்.. அதுதான் இப்போது நிலுவையில் இருக்கிறது.. 1970களில் இந்திய விமான நிலைய ஆணையத்தால் மட்டுமே ஏர்போர்ட்களை ஏற்படுத்த முடியும் என்ற நிலை இருந்தது..
அப்போது தமிழ்நாட்டில் விமான நிலையத்தை ஏற்படுத்தினால் அதற்கு நிலத்தை இலவசமாகத் தருவதாக முதல்வர் மு. கருணாநிதி அறிவித்தார். ஆனால், இப்போது நிலைமை மாறிவிட்டது. நிலத்தின் மதிப்பு என்பது விமான நிலையத்தைக் கட்ட ஆகும் செலவைக் காட்டிலும் அதிகரித்துள்ளது. எனவே, இந்த கொள்கையை நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
என்ன பிரச்சினை: மேலும், நாம் ஏர்போர்ட் விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்துகிறோம்.. ஆனால், திருச்சி மற்றும் கோவை உள்ளிட்ட விமான நிலையங்களைத் தனியார் வசம் கொடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. எனவே, இலவசமாக நிலத்தைக் கொடுக்கும் கொள்கை குறித்து நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

ஏர்போர்ட் விரிவாக்கத்திற்குத் தனியார் மற்றும் அரசு நிலங்கள் மட்டுமின்றி, பாதுகாப்பு நிலங்களையும் சந்தை விலையில் நாம் வாங்குகிறோம். இதை நாம் மத்திய அரசிடம் இருந்து வாங்கி மத்திய அரசின் கீழ் வரும் இந்திய விமான நிலைய ஆணையத்திற்கே வழங்குகிறோம். ஆனால், இப்போது ஏர்போர்ட்களை தனியார் வசம் ஒப்படைக்கிறார்கள்... இதனால் வரும் காலத்தில் ஏஏஐ விமான நிலையத்தை நிர்வகித்தால் மட்டுமே நிலத்தை அவர்களுக்கு நிலத்தைக் குத்தகைக்கு விடுவது என்று மாநில அரசு முடிவு செய்துள்ளது.
தீர்வு என்ன: விமான நிலையம் தனியாருக்குக் கொடுக்கப்பட்டால்.. அந்த நிலம் மக்களுக்கும் அரசுக்கும் சொந்தமானது என்பதால் அதற்கான இழப்பீட்டைக் கோர முடிவு செய்துள்ளோம். இந்த விவகாரத்தில் எங்களுக்குத் தேவையானது எல்லாம் நியமான ஒரு ஒப்பந்தம். அனைத்து மட்டங்களிலும் வளர்ச்சியை ஊக்குவிக்க நிலம் மக்களிடமோ அல்லது அரசிடமோ இருப்பதை உறுதி செய்ய வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.
கோவையில் விரைவில் 3.94 ஏக்கரில் எல்காட் ஐடி பூங்கா அமையவுள்ள நிலையில், அமைச்சர் பிடிஆர் அங்கு நடந்து வரும் பணிகளையும் நேரில் சென்று பார்வையிட்டார். ₹114.16 கோடி செலவில் எல்காட் ஐடி பூங்கா கட்டுமான பணிகள் நடைபெறும் நிலையில், இது கோவையில் ஐடி துறையின் வளர்ச்சியை நிச்சயம் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications