அன்னப்பூர்ணாவிற்கு முன்பே.. வெங்காயம் முதல் ஸ்லீப்பிங் பார்ட்னர் வரை.. நிர்மலா சீதாராமன் சர்ச்சைகள்

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவையில் அன்னப்பூர்ணா ஓட்டல் உரிமையாளர் சீனிவாசன் ஜிஎஸ்டி குறித்து, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கேட்ட விவகாரமும், அதற்கு பின்னர் நடந்ததும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது, முன்னதாக நான் வெங்காயம் சாப்பிட மாட்டேன், தமிழகத்தில் ஒருவர் வங்கியில் கடன் தரமாட்டோம் என்கிறார்கள் என மேடை ஏறி சொன்னதற்கு கொடுத்த ரியாக்ஷன், ஒரு தொழிலதிபர் அரசு ஸ்லீப்பிங் பார்ட்னர் சும்மா உட்கார்ந்து வரி பெறுகிறது என்று சொன்னது என நிர்மலா சீதாராமன் தொடர்பான சர்ச்சைகள் பற்றி பார்ப்போம்.

கோவையில் அன்னப்பூர்ணா ஓட்டல் உரிமையாளர் சீனிவாசன் ஜிஎஸ்டி குறித்து எழுப்பிய கேள்விகள் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. கோவை கொடீசியா வளாகத்தில் தொழில் அமைப்பினர் மற்றும் தொழில் வர்த்தக சபையினருடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த செப்டம்பர் 11ம் தேதி ஆலோசித்தார்.

nirmala sitharaman gst vanathi srinivasan

அந்த கூட்டத்தில் தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளர்கள் கூட்டமைப்பின் தலைவரும், கோவை அன்னபூர்ணா உணவக குழும தலைவருமான சீனிவாசன் பேசும் போது, "உங்கள் பக்கத்தில் அமர்ந்துள்ள கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் எங்கள் கடையின் ரெகுலர் கஸ்டமர். அவர் வர்றப்ப எல்லாம் எங்களோட சண்டை போடுறாங்க. இனிப்புக்கு ஐந்து சதவீதம். உணவுக்கு 5 சதவீதம், காரத்திற்கு 12 சதவிகிதம் ஜிஎஸ்டி. பிரட் பன்னுக்கு ஜிஎஸ்டி இல்லை.. ஆனால் உள்ளே வைக்குற கிரீமுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி இருக்கிறது.

அவங்க வர்றாங்க.. ஜிலேபி சாப்பிடுவது, அப்புறம் காபி காரம் சாப்பிடுவது, அப்புறம் காரத்துக்கு 12 சதவிகிதம் ஜிஎஸ்டி என்றால் சண்டைக்கு வருவது என தினசரி நடக்கிறது. ஒரே பில்லில் ஒரு குடும்பத்திற்கு வெவ்வேறு மாதிரி கொடுப்பது கஷ்டமாக உள்ளது. பன்னுக்கு ஜிஎஸ்டி கிடையாது அதற்குள் கிரீம் வைத்தால் அதற்கு 18% ஜிஎஸ்டி என்பதை பார்க்கும் வாடிக்கையாளர்கள் பன்னை வாங்கி கொள்கிறார்கள் அதில் ஜாமையும் கொடுத்து விடு நானே வைத்துக் கொள்கிறேன் என்கிறார்கள். கடை நடத்த முடியவில்லை மேடம்.

இனிப்புக்கு குறைவாக ஜிஎஸ்டியும், காரத்திற்கு அதிகமாக ஜிஎஸ்டியும் விதிக்கப்படுகிறது. எல்லாவற்றுக்கும் ஜிஎஸ்டியை ஏற்றி விட்டாலும் பரவாயில்லை ஒரே மாதிரியா பண்ணுங்க மேடம். ஒரு ஃபேமிலி வந்து உணவு சாப்பிட்டு விட்டு திரும்பினால் பில் போடுவதற்கு கம்ப்யூட்டரே திணறுதுங்க. எனவே தயவு செய்து இதனை பரிசீலனை செய்யுங்கள்” என்று தனக்கே உரிய பாணியில் ஜனரஞ்சனமாக பதில் அளித்தார். இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியது. பலரும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் சூப்பராக கேள்வி கேட்டதாக கூறினார்கள்.

எதிர்க்கட்சியினரோ, இதை வைத்து நிர்மலா சீதாராமனை எந்த அளவிற்கு விமர்சிக்க முடியுமோ, அந்த அளவிற்கு விமர்சித்தனர். இது தவிர ஜிஎஸ்டியில் உள்ள குறைகள் பற்றி பலருக்கும் மனக்குறைகள் உள்ளதால், அன்னப்பூர்ணா ஓட்டல் உரிமையாளரின் பேச்சுக்கு வரவேற்பும் அதிகமாக இருந்தது. இதனிடையே தனது பேச்சு அரசியலாக்கப்படுவதாக கவனித்த அன்னப்பூர்ணா ஓட்டல் உரிமையாளர் சீனிவாசன் நிர்மலா சீதாராமனை சந்தித்து நேற்று மன்னிப்பு கேட்டார். இந்த வீடியோ வெளியானது தான் இப்போது பெரும் சரச்சையாகி உள்ளது. தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்ட வீடியோ எப்படி சமூக வலைதளங்களில் வெளியானது என்று பலரும் விமர்சித்து வருகிறார்கள். இது ஒருபுறம் எனில் இதற்கு முன்னரும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பேட்டி மற்றும் ரியாக்சன்கள் மற்றும் பதில்கள் சர்ச்சையாகி உள்ளது. அவற்றில் சிலவற்றை பார்ப்போம்.

வெங்காயம் அவ்வளவாக சாப்பிட மாட்டேன்: கடந்த 2019ம் ஆண்டில் ஒரு சமயம் வெங்காய விலை உச்சத்தில் இருந்தது. இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் மேற்கொள்ளப்பட்டது. அப்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், நான் அந்த அளவுக்கு நிறைய பூண்டு, வெங்காயத்தை சாப்பிட மாட்டேன் என்று கூறினார். மேலும் வெங்காயத்தின் விலை உயர்வு குறித்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் நிர்மலா சீதாராமன் அப்போத தெரிவித்தார். மேலும் இடைத்தரகர்கள் அல்லாமல் நேரடி விற்பனை திட்டத்தின் மூலம் வெங்காயம் கிடைக்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது என்றும் தெரிவித்தார். இதில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெங்காயம் அவ்வளவாக சாப்பிட மாட்டேன் என்று கூறியதை மட்டும் கெட்டியாக பிடித்துக் கொண்ட எதிர்க்கட்சிகள் வெங்காய விலை குறித்து கேட்டால் , வெங்காயம் சாப்பிட மாட்டேன் என்று கூறுகிறார் என்று விமர்சித்தன.

வீட்டில் சமைத்து சாப்பிடலாமே: ஜொமாட்டோ, ஸ்விக்கி உள்ளிட்ட ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்கள் மூலம் உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிடுவதற்கு 2017ம் ஆண்டு வாக்கில் ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டது. அப்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 'ஹோட்டலில் விலை அதிகமாக இருக்கிறது என்றால் வீட்டிலே சமைத்து சாப்பிட வேண்டியதுதானே' என்று பதில் அளித்தார். இதுவும் அப்போது விமர்சனத்தை ஏற்படுத்தியது.

கடன் தருவதில்லை என பொங்கிய தொழில் அதிபர்: கோவை கொடீசியா வளாகத்தில் தொழில் முனைவோருக்கு மாபெரும் கடன் வழங்கும் விழா கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்தது. இந்த விழாவில் கலந்து கொண்ட தொழில் அதிபர் ஒருவர், வங்கிகள் கடன் வழங்க மறுப்பதாக கையை உயர்த்தி ஆவேசமாக குரல் எழுப்பினார். இதையடுத்து அவரிடம் பேட்டி எடுக்க பத்திரிக்கையாளர்கள் முயன்றார்கள். அப்போது அங்கிருந்த பாஜக நிர்வாகிகள் மற்றும் வங்கி நிர்வாகிகள் அவரை சந்திக்க விடாமல் தடுக்க பார்த்தனர். ஒரு கட்டத்தில் அவர் பேட்டி அளித்தார். இதை மேடையில் இருந்து கவனித்த நிர்மலா சீதாராமன், அவரை மேடைக்கு அழைத்து குறைகளை கேட்டார். அவரும் வங்கிகளை குற்றம்சாட்டி பேசியதுடன், நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார். அப்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கொடுத்த ரியாக்சனையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.

ஸ்லீப்பிங் பார்ட்னர்: மும்பை பங்குச் சந்தையில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த மே மாதம் கலந்துகொண்டு பங்குச் சந்தை முதலீடுகள் குறித்து பேசினார். அப்போது பங்குச்சந்தை புரோக்கர் ஒருவர் மத்திய அரசின் வரி விதிப்பு குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார். அவர் நிர்மலா சீதாராமனிடம், "மக்கள் தங்கள் பணத்தை முதலீடு செய்து ரிஸ்க் எடுக்கிறார்கள். ஆனால் அரசாங்கமோ 'ஸ்லீப்பிங் பார்டனர்' போல மாறி, ஜிஎஸ்டி, ஐஜிஎஸ்டி, முத்திரை வரி, பத்திர பரிவர்த்தனை வரி (எஸ்டிடி) போன்ற வரிகளை விதித்து சம்பாதித்துக் கொண்டிருக்கிறது.

எங்களுடைய லாபத்தின் ஒரு பகுதியை அரசு எடுத்துக்கொள்கிறது. ஒரு வீட்டை வாங்குவதற்கு செலுத்த வேண்டிய வரிகள் என்னனென்ன. ஸ்டாம்ப் டியூட்டி, ஜிஎஸ்டி போன்ற வரிகள் மூலம் ஒரு வீடு வாங்கினால் எவ்வளவு வரி கட்ட வேண்டும். சாமானியர்கள் வீடு வாங்க அரசு எப்படி உதவுகிறது. அரசு போடும் வரிகளை கடந்து ஒரு முதலீட்டாளர் எப்படி செயல்பட முடியும்” என்று அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த நிர்மலா சீதாராமன், இதற்கு என்னிடம் பதில் இல்லை. 'ஸ்லீப்பிங் பார்ட்னரால்’ இங்கே உட்கார்ந்து பதில் சொல்ல முடியாது.” என்று சிரித்துக்கொண்டே தெரிவித்தார். நிர்மலா சீதாராமனின் இந்தப் பதில் அப்போது விமர்சிக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+