அதிமுக.. அதிருப்தி.. ஆறுகுட்டி! திமுகவுக்கு தாவிய கொங்கு ரத்தத்தின் ரத்தம்! அணிகள் மாறி வந்த வரலாறு!
கோவை : அதிமுகவில் கோவை மாவட்டத்தில் இரு முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறுகுட்டி ஓபிஎஸ் இபிஎஸ் என இருவர் மீதும் அதிருப்தியில் இருந்த நிலையில் இன்று திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்துள்ளார் அவர் திமுகவில் இணைவதற்கான பின்னணி என்ன? அதிமுகவில் அவர் சந்தித்த சறுக்கல்கள் என்னென்ன? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்
முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான செல்வி ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர், தமிழக அரசியலில் அசாதாரண சூழல் ஏற்பட்டது. அவர் மறைந்து கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் ஆகப் போகும்நிலையில் அது இன்னமும் முடிந்தபாடில்லை.
அவரது மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாக பிளவடைந்த நிலையில், அதில் மேலும் ஒரு பிளவு ஏற்பட்டது. தற்போது இபிஎஸ், ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் என அதிமுக முன்னாள் நிர்வாகிகள் தலைமையில் பல அணிகளாக செயல்பட்டு வருகிறது.

அதிமுக
தற்போது எடப்பாடி பழனிச்சாமி ஓ.பன்னீர்செல்வம் மோதல் காரணமாக பலர் இரு தரப்பிலும் மாறி மாறி தாவி வரும் நிலையில் இனிமேல் அதிமுகவில் இருந்தால் தங்கள் அரசியல் எதிர்காலம் கேள்விக்குரியதாகிவிடும் எனக் கருதி பாஜக, திமுக உள்ளிட்ட கட்சிகளில் இணைந்து வருகின்றனர். இன்று கூட கோவை மாவட்டம் பொள்ளாச்சிக்கு வந்த முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

ஆறுகுட்டி
அதில் முக்கியமானவர் கோவை மாவட்டத்தை சேர்ந்தவரும் கவுண்டம்பாளையம் தொகுதியில் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவருமான ஆறுகுட்டி. 2011 மற்றும் 2016 சட்டமன்றத் தேர்தல்களில் அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவில் பிளவு ஏற்பட்ட போது முதன்முதலாக ஓபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்தவர்களில் முக்கியமானவர்.

தீவிர ஆதரவாளர்
கொங்கு மண்டலத்தை சேர்ந்தவராக இருந்தாலும் ஓபிஎஸ்க்கு அவர் ஆதரவளித்தது அப்போது தமிழக அரசியல் வரலாற்றில் பேசுபொருளாக இருந்தது. பின்னர் அதிமுக அணிகள் இணைப்புக்கு பிறகு மூன்றாவது முறையாக கவுண்டம்பாளையம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த நிலையில் அது கை கூடாமல் போனது. இதனால் கடும் அதிர்ச்சியில் இருந்த அவர் அதனை வெளிக்காட்டி கொள்ளாமல் அதிமுகவிலேயே தொடர்ந்து வந்தார். 2017ஆம் ஆண்டுக்குப் பிறகு அதிமுகவில் தீவிர திமுக எதிர்ப்பை கைவிட்டு மறைமுக ஆதரவை வெளிப்படுத்தி வந்தார்.

ஏமாற்றம்
ஒருபுறம் ஓபிஎஸ் ஆதரவு மறுபுறம் எடப்பாடி பழனிச்சாமிக்கும் ஆதரவு என மாறி மாறி ஆதரவு தெரிவித்து வந்தவரை இரு தலைவர்களுமே 2021 சட்டமன்ற தேர்தலில் கைவிட்டனர். தன்னை யாருமே கூப்பிடவில்லை அதனால் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறேன் என கூறினாலும் அதிமுகவில் தனக்கான அங்கீகாரம் இல்லை என்பதனை உணர்ந்த அவர் திமுகவில் இணைய இருப்பதாக அப்போதே கூறப்பட்டது. ஆனாலும் சசிகலா டிடிவி தினகரன் மீதான பற்றுதல் காரணமாக அவர்கள் வருகைக்காக நீண்ட காலம் காத்திருந்தார்.

சசிகலா ஆதரவு
தற்போது மீண்டும் அதிமுகவில் மோதல் வெடித்துள்ள நிலையில் சசிகலா டிடிவி தினகரன் தரப்புக்கு அவர் செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. அதனை உறுதிப்படுத்தும் விதமாகவே கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தியாளிடம் பேசிய அவர், ஓபிஎஸ் இபிஎஸ் ஆகிய இருவருமே ஒருங்கிணைப்பாளர் பதவிகளை விட்டு விலகி சசிகலா டிடிவி தினகரன் கட்சி பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என பேசி இருந்தார். இது கோவை மாவட்டத்தில் சற்று சலசலப்பை ஏற்படுத்தினாலும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

திமுகவில் ஐக்கியம்
இதையடுத்து தினகரன் அணியில் அவர் இணைவார் என தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் தற்போது அதனை பொய்யாக்கி திமுகவில் இணைந்து இருக்கிறார். அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் இணைய வாய்ப்பே இல்லை என்பது அவர்கள் தரப்பிலிருந்து கூறப்பட்டு வரும் நிலையில் மீண்டும் இணைந்தாலும் கட்சியில் தனக்கு உரிய முக்கியத்துவம் கிடைக்குமா? மீண்டும் அதிமுக சார்பில் போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு கிடைக்குமா? என பல்வேறு கேள்விகள் அவர் முன் இருந்த நிலையில் தான் 'காற்றுள்ள போதே தூற்றிக்கொள்' என்ற பழமொழி அடிப்படையில் திமுகவுக்கு தாவி இருப்பதாக கூறப்படுகிறது. திமுகவில் ஆறு குட்டியின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!












Click it and Unblock the Notifications