தமிழகத்தில் 4 லோக்சபா தொகுதிகள் வென்று வரலாறு படைத்த பாஜக! "ஹிஸ்டரி" தெரியுமா? கோவை மீது ஃபோகஸ் ஏன்?

Subscribe to Oneindia Tamil

கோவை: தமிழ்நாட்டில் பாஜக குறி வைக்கும் தொகுதிகளில் ஒன்று கோவை... அங்கே பாஜக கடந்த காலங்களில் எப்படிச் செயல்பட்டு இருக்கிறது.. பாஜக வாக்கு வங்கி எப்படி இருக்கிறது என்பது குறித்துப் பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடக்கிறது. இந்த முறை தமிழ்நாட்டில் பல முனை போட்டி நிலவுகிறது. குறிப்பாக பாஜக இங்கு சில தொகுதிகளைக் குறிவைக்கும் நிலையில், அதில் முக்கியமானது கோவை.

Why Bjp is betting big in Coimbatore With Annamalai can they pull off

பாஜக: கோவையில் கடந்த சில ஆண்டுகளாகவே பாஜக வளர்ந்துள்ளதாக அக்கட்சியினர் நம்புகிறார்கள். இதற்காகவே கோவையில் கடந்த சில ஆண்டுகளாக மத்திய அரசு பல திட்டங்களைக் கொண்டு வந்துள்ளன. மாநிலத்தில் முதல் வந்தே பாரத் கூட சென்னை கோவை இடையே தான் அமைக்கப்பட்டது. இப்படிப் பல திட்டங்களைச் சொல்ல முடியும்.

கோவை தெற்கு தொகுதியில் இருந்து ஏற்கனவே பாஜகவின் வானதி சீனிவாசன் எம்எல்ஏவாக இருக்கும் நிலையில், கோவை லோக்சபா தொகுதியைக் கைப்பற்ற முடியும் என பாஜக நம்புகிறது. இதன் காரணமாகவே கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அங்கே நேரடியாகக் களமிறங்கியுள்ளார். கோவையை பாஜக ஏன் தனது கோட்டையாகக் கருதுகிறது.. கடந்த காலங்களில் பாஜக அங்கே எப்படிச் செயல்பட்டுள்ளது என்பது குறித்துப் பார்க்கலாம்.

கோவை லோக்சபா தொகுதி: அதற்கு முன்பு கோவை தொகுதி குறித்து கொஞ்சம் பார்க்கலாம். தமிழ்நாட்டில் சென்னைக்குப் பிறகு நகர்மயமாதலில் முக்கிய நகரம் என்றால் அது கோவை தான். தொழில்துறை நகரமான கோவையில் ஏகப்பட்ட தொழிற்சாலைகள் கொட்டி கிடக்கிறது. அதேநேரம் விவசாயமும் அங்கு இன்னும் கணிசமாக இருக்கிறது. இது தவிர ஐடி துறையிலும் மிக முக்கிய இடத்தை கோவை பெற்றுள்ளது. இப்படிப் பல துறைகளின் ஒருங்கிணைந்த வளர்ச்சியைக் கொண்ட நகரமாகக் கோவை இருக்கிறது.

1952 முதல் கோவைக்கு இதுவரை 19 லோக்சபா தேர்தல்கள் நடந்துள்ள நிலையில், அதில் அதிகபட்சமாக இடதுசாரிகள் 8 முறை இங்கு வென்றுள்ளன. அடுத்து காங்கிரஸ் 6 முறை வென்றுள்ளன. திமுக மற்றும் பாஜக தலை இரண்டு முறை வென்றுள்ள நிலையில், அதிமுக ஒரு முறை வெற்றி பெற்றுள்ளது.

பாஜக வெற்றி: கோவையில் 1989ஆம் ஆண்டு முதல் பாஜக போட்டியிட்ட நிலையில், அவர்கள் வாக்கு வங்கி கணிசமாக அதிகரித்தது. ஆனாலும், 1998 தேர்தலில் தான் திருப்பம் கிடைத்தது. அந்தத் தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட பாஜக மொத்தம் 3 தொகுதிகளில் வென்று இருந்தது. அதில் முக்கியமானது கோவை. பாஜக சார்பில் போட்டியிட்ட சிபி ராதாகிருஷ்ணன் அந்தத் தேர்தலில் 4.49 லட்சம் வாக்குகளைப் பெற்று சுமார் 1.44 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இந்தத் தேர்தல் சமயத்தில் தான் கோவையில் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. அத்வானியைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்த சம்பவம் பாஜகவுக்கு அனுதாப வாக்குகளைப் பெற்றுத் தந்ததாக வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். அப்போது இருந்த மத்திய அரசு, ஜெயலலிதாவின் ஆதரவு வாபஸ் நடவடிக்கையால் ஓராண்டில் கவிழ்ந்துவிடவே 1999இல் மீண்டும் தேர்தல் நடந்தது. இந்த முறை, திமுக கூட்டணியில் போட்டியிட்ட பாஜக, கோவை உட்பட 4 இடங்களில் வென்றது. இதுதான் லோக்சபா தேர்தல் வரலாற்றிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் பாஜக வென்ற தேர்தலாகும்.

சிபி ராதாகிருஷ்ணன்: பாஜக சார்பில் கோவையில் மீண்டும் களமிறங்கிய சிபி ராதாகிருஷ்ணன் 4.3 லட்சம் வாக்குகள் பெற்று சுமார் 54 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். இப்படி அடுத்தடுத்து இரு தேர்தல்களில் வென்றது பாஜகவுக்கு மிகப் பெரிய ஒரு நம்பிக்கையைக் கொடுத்தது. அதன் பிறகு அங்கே களத்தில் இறங்கி வலதுசாரி அமைப்புகள் வேலை செய்ய ஆரம்பித்தன.

இருப்பினும், அதன் பிறகு நடந்த தேர்தல்களில் பாஜகவால் வெல்லவே முடியவில்லை. 2004 லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக சார்பில் மீண்டும் சிபி ராதாகிருஷ்ணன் போட்டியிட்டார். இருப்பினும், அவரை 1.64 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் திமுக கூட்டணியில் இருந்த இடதுசாரி வேட்பாளர் கே.சுப்ராயன் வீழ்த்தினார்.

வாக்கு வங்கி: வாக்கு விகிதத்தைப் பொறுத்தவரை 1998இல் 55% வாக்குகளைப் பெற்ற பாஜக, 1999இல் சுமார் 50% வாக்குகளைப் பெற்றது. ஆனால், 2004 லோக்சபா தேர்தலில் பாஜக வாக்கு வங்கி 38%ஆக குறைந்து விட்டது. அடுத்து நடந்த 2009 தேர்தலில் பாஜகவுக்கு நிலை மேலும் மோசமானது. அந்தத் தேர்தலில் பாஜகவின் செல்வக்குமார் 5ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டார். அவரால் வெறும் 4% வாக்குகள் அதாவது 38 ஆயிரம் வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது.

2014இல் நாடு முழுக்க மோடி அலை வீசிய நிலையில், கோவையில் வெல்ல முடியும் என்றே பாஜக கருதியது. இதன் காரணமாகவே அங்கு மீண்டும் சிபி ராதாகிருஷ்ணனைக் களமிறக்கியது. அந்தத் தேர்தலில் கடுமையான போட்டி நிலவிய போதிலும் அதிமுக வேட்பாளரே வென்றார். சிபி ராதாகிருஷ்ணன் வெறும் 42 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். அவர் பெற்ற வாக்கு வங்கி 33% சதவிகிதம் ஆகும்.

அதிகரித்த வாக்கு சதவிகிதம்: இதில் தோல்வி அடைந்தாலும் பாஜகவுக்கு இது ஒரு கம்பேக் என்றே சொல்லலாம். ஏனென்றால் வாக்கு வங்கி சுமார் 30% அதிகரித்துள்ளது. இந்த தேர்தலில் அதிமுக, பாஜக, திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள் எனப் பல முனை போட்டி நிலவியது. அதில் திமுக உட்பட பல கட்சிகளை பின்னுக்குத் தள்ளி பாஜக 2ஆவது இடத்திற்கு வந்தது.

2019 லோக்சபா தேர்தலைப் பொறுத்தவரை அதிமுக கூட்டணியில் பாஜக இறங்கிய நிலையில், சிபி ராதாகிருஷ்ணன் மீண்டும் இரண்டாவது இடத்தையே பெற்றார். அவர் 31% வாக்கு வங்கி அதாவது 3.92 லட்சம் வாக்குகளைப் பெற்றார். அங்குக் குறிப்பிடத்தக்க வகையில் மக்கள் நீதி மய்யம் 1.45 லட்சம் வாக்குகளைப் பெற்று 3ஆவது இடத்திற்கு வந்தது கவனிக்கத்தக்கது.

கடும் போட்டி: இப்படி அங்கே பாஜக தொடர்ந்து போட்டியைக் கொடுத்து வருகிறது. இதன் காரணமாகவே இந்த முறை அவர்கள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையைக் களத்தில் இறக்கி உள்ளனர். இருப்பினும் அங்கே கடும் போட்டியே நிலவி வருகிறது. அதிமுகவுக்கு பொதுவாகவே கோவையில் செல்வாக்கு அதிகம் இருக்கும் நிலையில், அங்குச் சிங்கை ராமச்சந்திரன் போட்டியிடுகிறார். திமுக சார்பில் முன்னாள் மேயர் கணபதி ராஜ்குமார் போட்டியிடுகிறார். இதனால் அங்குப் போட்டி கடுமையாக இருக்கிறதது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+