பொள்ளாச்சிக்கு விசித்திரமான சிக்கல்.. சேலம், பாலக்காடு, மதுரை.. திசை தெரியாத ரயில் பயணம்
கோவை: பொள்ளாச்சி மக்கள் ரயில் வசதிகளை பெறுவதற்கு வித்தியாசமான சிக்கலை எதிர்கொண்டுள்ளனர். சேலம், பாலக்காடு, மதுரை ஆகிய 3 கோட்டங்களில் அனுமதி பெற வேண்டிய நிலை இருப்பதால் ரயில் வசதிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக கோவையின் முக்கிய பகுதியான போத்தனூரில் இருந்து பொள்ளாச்சிக்கு புதிய ரயில்களை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்ட கோட்ட அனுமதி தான் காரணமாக ரயில்வே ஆர்வலர்கள் சொல்கிறார்கள்.
பொள்ளாச்யில் இருந்து கோவைக்கு தினமும் காலை 7.50, 10.40, இரவில் 8.55க்கு ரயில் வசதி கோவை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு உள்ளது. இதில் காலை 7.50க்கு செல்லும் ரயில் சாதாரண பயணிகள் ரயில் ஆகும். 10.40க்கு புறப்படும் ரயில் எக்ஸ்பிரஸ் ரயில் ஆகும். அதேபோல் இரவு 8.55க்கு செல்லும் ரயிலும் சாதாரண பயணிகள் ரயில் ஆகும். இதுதவிர திங்கள்கிழமை அதிகாலை 4.47க்கு ஒரு ரயில், திங்கள் கிழமை அதிகாலை 5.10க்கு ஒரு ரயில், ஞாயிறு அதிகாலை 5.20க்கு ஒரு ரயில் என வாராந்திர ரயில்களும் கோவைக்கு செல்கின்றன.

மறுமார்க்கமாக கோவையில் இருந்து தினமும் காலை 5.20க்கு பயணிகள் ரயில் வருகிறது. மதியம் 2.20க்கு கோவையில் இருந்து புறப்படும் மதுரை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் பொள்ளாச்சி வழியாக செல்கிறது. அதேபோல் தினமும் 6.40க்கு ஒரு பயணிகள் ரயில் புறப்பட்டு கோவைக்கு செல்கிறது. இது தவிர நாகர்கோவில் அம்ரித் பாரத் ரயில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பொள்ளாச்சி வழியாக செல்கிறது. தூத்துக்குடி ரயில் ஞாயிறு மற்றும் வெள்ளிக்கிழமைகளில் செல்கிறது. அதேபோல் திங்கள்கிழமை மட்டும் பொள்ளாச்சி வழியாக திருநெல்வேலி ரயில் செல்கிறது.
ஆனால் பொள்ளாச்சி-போத்தனூர் இடையே ரயில்கள் இயக்க முடியாத நிலை இருக்கிறது. இந்த ரயில் பாதை கடந்த 1915-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அமைக்கப்பட்டது. அதன்பிறகு 1928-ம் ஆண்டு திண்டுக்கல் வரை நீட்டிக்கப்பட்டது. மேலும் பொள்ளாச்சியில் இருந்து பாலக்காடு வரை 1932-ம் ஆண்டு ஏப்ரல் முதல் ரயில் பாதை இணைக்கப்பட்டது. மீட்டர் கேஜ் ரயில் பாதையாக இருக்கும் போது கோவையில் இருந்து தூத்துக்குடி, மதுரை, ராமேசுவரம், திண்டுக்கல்லுக்கு ரயில்கள் இயக்கப்பட்டன.
இதற்கிடையில் மீட்டர் கேஜ் ரயில் பாதையை அகலரயில் பாதையாக மாற்றுவதற்கு கடந்த 2009-ம் ஆண்டு மே மாதம் 14-ந்தேதி திண்டுக்கல்லில் இருந்து பொள்ளாச்சி, போத்தனூர் வரையிலான ரயில் பாதையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ரூ.750 கோடி செலவில் அகலரயில் பாதை பணிகள் நடந்தது. இந்த பணிகள் முடிந்து கடந்த 2015-ம் ஆண்டு முதல் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தற்போது ரூ.36 கோடியே 37 லட்சம் செலவில் மின் மயமாக்கப்பட்டு உள்ளது. ஆனால் பொள்ளாச்சி-போத்தனூர் ரயில் பாதையில் கூடுதலாக ரயில்களை இயக்காததால் கோடிக்கணக்கில் செலவு செய்து அகலரயில் பாதை, மின் மயமாக்கப்பட்டும் எந்த பயனும் இல்லாத நிலை இருக்கிறது.
இதுகுறித்து பொள்ளாச்சி ரயில் பயணிகள் நலச்சங்கத்தினர் கூறும் போது, பொள்ளாச்சி-போத்தனூர் ரயில் பாதையில் தற்போது கோவை-மதுரை, கோவை-பொள்ளாச்சி ஆகிய 2 தினசரி ரயில்களும், வாராந்திர ரயில்களாக மேட்டுப்பாளையம்-நெல்லை, மேட்டுப்பாளையம்-தூத்துக்குடி ரயில்கள் இயக்கப்படுகிறது. இதை தவிர சரக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. பொள்ளாச்சியில் இருந்து கோவை வழியாக சென்னை, பெங்களூருவுக்கு, தென்மாவட்டங்களுக்கு தினசரி இரவு நேர ரயில் சேவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் கிடப்பில் இருக்கிறது.
மீட்டர் கேஜ் ரயில் பாதையாக இருக்கும் போது கோவையில் இருந்து பொள்ளாச்சி வழியாக தனுஷ்கோடிக்கு 100 ஆண்டுகளுக்கு மேலாக ரயில் இயக்கப்பட்டு வந்தது. அகலரயில் பாதைக்கு பிறகு அந்த ரயில் இன்னும் இயக்கப்படாமல் உள்ளது. மீட்டர் கேஜ் ரயில் பாதையில் இருந்து அகல ரயில் பாதையாக மாற்றப்படுவதால் ரயிலின் வேகத்தை அதிகரிக்கலாம். மேலும் கூடுதலாக ரயில்களை இயக்கவும் முடியும். ஒரு ரயில் பாதையில் அதிகமாக வருமானம் இருந்தால் மட்டுமே அகல ரயில் பாதையாக மாற்றப்படும். பொள்ளாச்சி-போத்தனூர் இடையே மீட்டர்கேஜ் ரயில் பாதையாக இருக்கும் போது கூடுதலாக ரயில்கள் இயக்கப்பட்டன. இதனால் ரயில்வேக்கும் அதிக வருமானம் வந்தது.
இதன் காரணமாகவே அகல ரயில் பாதைகளை உருவாக்கினார்கள். மீட்டர்கேஜ் ரயில் பாதையாக இருக்கும் போது பொள்ளாச்சி, கிணத்துக்கடவு ரயில் நிலையங்கள் மதுரை கோட்டத்துடன் இருந்தது. இதனால் கோவையில் இருந்து தினமும் 5 ரயில்கள் வரை இயக்கப்பட்டன. திண்டுக்கல்-போத்தனூர் ரயில் பாதையில் கோவை மாவட்டத்தில் உள்ள கோமங்கலம் ரயில் நிலையம் மதுரை கோட்டத்திலும், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு ரயில் நிலையங்கள் பாலக்காடு கோட்டத்திலும், போத்தனூர் ரயில் நிலையம் சேலம் கோட்டத்திலும் வருகிறது
பொள்ளாச்சி-போத்தனூர் ரயில் பாதையில் புதிய ரயில்களை இயக்குவதற்கு மதுரை, சேலம், பாலக்காடு கோட்ட அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டியுள்ளதாம். இதுபோன்ற நடைமுறை சிக்கல்களால் தாமதம் ஏற்பட்டு புதிய ரயில்களை இயக்க முடிவதில்லை என்று கூறப்படுகிறது. எனவே பொள்ளாச்சி, கிணத்துக்கடவு ரயில் நிலையங்கள் உள்ளிட்ட தமிழக பகுதிகளை சேலம் அல்லது மதுரை ஆகிய ஏதாவது ஒரு கோட்டத்துடன் இணைத்து பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்" இவ்வாறு பொள்ளாச்சி ரயில் பயணிகள் நலச்சங்கத்தினர் கூறினார்கள்.


Click it and Unblock the Notifications
