கோவை ஆனைமலை மாசாணி அம்மன் கோயிலில் யாருங்க அந்த 'வள்ளி'.. பழரசத்தில் இருக்கு விஷயமே
கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆனைமலை மாசாணி அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட வந்த பெண்ணிடம் 20 பவுன் நகை திருடிய பெங்களூர் பெண் கைது செய்யப்பட்டார். பழ ரசத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து கைவரிசை காட்டி வந்த அந்த பெண் குறித்து போலீசார் பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
மதுரையை சேர்ந்த 65வயதாகும் நாகம்மாள்(வயது 65) திண்டுக்கல் மாவட்டம் கணக்கம்பட்டியில் உள்ள ஒரு கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றிருக்கிறார். அங்கு கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த 55 வயதாகும் வள்ளி(55) என்பவரும் சென்றுள்ளார். இந்நிலையில் நாகம்மாளிடம் நைசாக பேசி நட்பு ஏற்படுத்தி உள்ளார் வள்ளி.

இந்நிலையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆனைமலையில் உள்ள மாசாணி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு வரலாம் என்று வள்ளி நாகம்மாளை அழைத்தார். அவரும் வள்ளியுடன் சம்பவத்தன்று மாசாணி அம்மன் கோவிலுக்கு போயிருக்கிறார்.
மாசாணி அம்மன் கோவிலில் அவர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு இரவு நேரம் ஆனதால் கோவில் வளாகத்தில் படுத்து தூங்கி உள்ளார்கள் அதற்கு முன்பாக நாகம்மாள் தான் அணிந்திருந்த 19½ பவுன் நகைகளை வள்ளி கூறியதின்பேரில் கழற்றி ஒரு பையில் வைத்து இருக்கிறார். பின்னர் வள்ளி வாங்கி கொடுத்த பழரசம் வாங்கி குடித்துள்ளார் நாகம்மாள்.
அதன்பின்னர் மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது, வள்ளியையும், நகை வைத்திருந்த பையும் மாயமாகி இருக்கிறது. இதை கண்டு கதறி அழுத நாகம்மாள் பதறி அடித்தபடி ஆனைமலை போலீசிடம் போய் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் வள்ளியை தேடி வந்தார்கள். மேலும் வள்ளியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
போலீசார் பெங்களூருவில் வள்ளி தங்கியிருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்த பெங்களூர் சென்ற தனிப்படை போலீசார் வள்ளியை கைது செய்தனர். அவரிடம் இருந்து திருட்டு போன நகைகள் மீட்கப்பட்டன. அவர், ஏற்கனவே ஆனைமலை தர்மராஜா காலனியில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்து, அதன் உரிமையாளர் வீட்டில் 7 பவுன் நகைகளை திருடியதும் தெரியவந்துள்ளது.
இதேபோல் சென்னை, காஞ்சிபுரத்திலும் வள்ளி கைவரிசை காட்டி இருக்கிறார். மேலும் நாகம்மாளிடம் நகை திருடும் முன்பாக பழ ரசத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து அவரை தூங்க வைத்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்து உள்ளது. தொடர்ந்து வள்ளியிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications