அடுத்தவர் மனைவியை பெண் கேட்ட இளைஞர்.. தலையில் ஒரே வெட்டு வெட்டிய பெண்ணின் தாய்.. கோவையில் அதிர்ச்சி
கோவை: கோவையில் அடுத்தவர் மனைவியை பெண் கேட்டு சென்ற இளைஞரை அவரது தாய் அரிவாளால் வெட்டியதால் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் பெண்ணின் தாயையும் தந்தையையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.
கோவை ராமநாதபுரத்தை சேர்ந்தவர் வீரக்குமார். இவர் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு மேடை அலங்காரம் செய்யும் பணியை செய்து வருகிறார். இவர் கடந்த 2017ஆம் ஆண்டு அந்த பகுதியில் ஒரு காதணி விழாவுக்கு மேடை அலங்காரம் செய்ய சென்றார்.

மேடை அலங்காரம் எப்படி இருக்க வேண்டும், என்னென்ன செய்ய வேண்டும் என்பது முதல் வீரக்குமாருக்கு விழாவுக்கான பணம் கொடுப்பது, பேரம் பேசியது வரை காதணி விழா நடத்திய 30 வயது திருமணமான பெண்தான் பார்த்துக் கொண்டார்.
தனது மகளின் காதணி விழாவுக்காக வீரக்குமாருடன் பேசிய போது அந்த பெண்ணுக்கும் அவருக்கும் தகாத உறவு ஏற்பட்டதாக தெரிகிறது. அந்த பெண்ணுக்கு 11 வயதில் மகள் இருக்கிறார். இந்த நிலையில் இந்த கள்ளக்காதல் விவகாரம் அந்த பெண்ணின் கணவருக்கு தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த கணவர்,மனைவிக்கு புத்திமதி சொல்லியதுடன் கண்டித்தும் உள்ளார். இதனால் அந்த பெண் வீரக்குமாருடன் பேசுவதை நிறுத்திக் கொண்டார். இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு வீரக்குமாருக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்தது. எனினும் அவர் அந்த 30 வயது பெண்ணுடன் மீண்டும் தொடர்பில் இருந்தார்.
இதை அறிந்த அந்த பெண்ணின் கணவர் மீண்டும் கண்டித்துள்ளார். ஆனாலும் அந்த பெண் இந்த முறை கணவர் பேச்சை கேட்காமல் வீரக்குமாருடனான கள்ளக்காதலை தொடர்ந்தார். இந்த நிலையில் இவர்களுடைய கள்ளக்காதல் வீரக்குமாரின் மனைவிக்கு தெரியவந்தது. இதனால் அவர் தனது கணவரை கண்டித்தார். ஆனாலும் அவர் கேட்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் அவர் கணவருடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதையடுத்து இரு மாதங்களுக்கு முன்பு வீரக்குமாரிடம் கோபித்துக் கொண்டு அவருடைய மனைவி தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். அதே போல் 30 வயது பெண்ணும் தனது கணவருடன் சண்டையிட்டுக் கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். கடந்த இரு மாதங்களாக அந்த பெண் வடவள்ளி அருகே ஆண்டிபாளையத்தில் உள்ள தனது தாய் வீட்டில் குழந்தையுடன் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் வீட்டில் தனது தாயிடம் வீரக்குமாரை திருமணம செய்து வைக்குமாறு கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் தாய் அதெல்லாம் தவறு, உனக்கென குடும்பம், குழந்தை என இருக்கும் போது நீ தகாத வகையில் நடந்துக் கொள்ள கூடாது. அது உன் பெண் குழந்தையின் எதிர்காலத்தை பாதிக்கும் என அறிவுரை கூறி கணவருடன் வாழ்வதே நல்லது என தெரிவித்துள்ளனர்.
இதனால் அந்த 30 வயது பெண் வீரக்குமாரை தொடர்பு கொண்டு நீ என் வீட்டில் வந்து பெண் கேள் என கொம்பு சீவி விட்டுள்ளார். வீரக்குமாரும் திருமணமான பெண்ணை அவரது வீட்டிற்கே சென்று பெண் கேட்கிறோமே என்ற கூச்சமே இல்லாமல் தனது இரு நண்பர்களை அழைத்துக் கொண்டு போய் பெண் கேட்டுள்ளார். அப்போது இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது.
இந்த வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த அந்த பெண்ணின் தாயும் தந்தையும் வீட்டில் இருந்த அரிவாள் மனையால் வெட்டியதாக தெரிகிறது. இதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்த வீரக்குமாரை அவருடன் வந்த நண்பர்கள் மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து புகாரின் பேரில் அந்த பெண்ணின் தாய், தந்தையை வடவள்ளி போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications