இலங்கை தேர்தலில் வெற்றி.. அதிபராக பதவியேற்றார் அனுரா குமார திசநாயகே!
கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தேசிய மக்கள் சக்தி முன்னணியின் வேட்பாளரும் தேசிய மக்கள் சக்தி தலைவருமான அனுரா குமார திசநாயகே இன்று அதிபராக பதவியேற்றார். இலங்கையின் தலைமை நீதிபதி ஜெயந்த ஜெயசூர்யா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். கொழும்புவில் உள்ள அதிபர் மாளிகையில் எளிமையான முறையில் பதவியேற்பு விழா நடந்தது.
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான இலங்கையில் நேற்று முன் தினம் அதிபர் தேர்தல் நடைபெற்றது. கடந்த 2022-ல் ஏற்பட்ட மோசமான பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து போராட்டம் நடைபெற்றது. அதன்பிறகு ராஜபக்சே சகோதரர்கள் ஆட்சி அதிகாரத்தை இழந்த நிலையில், ரணில் விக்ரமசிங்கே புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டார். அவரது பதவிக்காலம் முடிவடைய இருக்கும் நிலையில், அங்கு தேர்தல் நடைபெற்றது.

இந்த அதிபர் ரணில் விக்ரமசிங்கே உள்பட 38 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். இருந்த போதிலும், சுயேச்சையாக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்கே, ஐக்கிய மக்கள் சக்தி முன்னணி சார்பில் களம் கண்ட எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா, பல்வேறு கட்சிகள் அடங்கிய தேசிய மக்கள் சக்தி முன்னணியின் வேட்பாளரான தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரா குமார திசநாயகே ஆகிய 3 பேருக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவியது.
வாக்குப்பதிவு முடிந்ததும் உடனடியாக வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. விடிய விடிய வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், தொடக்கத்தில் இருந்தே திசநாயகே முன்னிலை பெற்றார். எதிர்பார்த்தது போலவே இந்த தேர்தலில் அனுரா குமார திசநாயகே வெற்றி பெற்றார். வெற்றிக்கு தேவையான 50 % அதிகமான வாக்குகள் எந்த வேட்பாளருக்கும் கிடைக்கவில்லை. இதனால் 2-வது சுற்று வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
இந்த 2-வது சுற்று வாக்கு எண்ணிக்கையிலும் திசநாயகே முன்னிலை பெற்றார். இதையடுத்து, இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நிலையில், இன்று அந்நாட்டின் அதிபராக அனுர குமார திசநாயகே பதவியேற்றார். இன்று காலை 9.30 மணியளவில் திசநாயகே அதிபராக பதவியேற்றார். இலங்கையின் தலைமை நீதிபதி ஜெயந்த ஜெயசூர்யா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். கொழும்புவில் உள்ள அதிபர் மாளிகையில் எளிமையான முறையில் பதவியேற்பு விழா நடந்தது.
முன்னதாக, தேர்தல் வெற்றி குறித்து அனுரா குமார திசநாயகே கூறியதாவது:- நூற்றாண்டுகளாக நாம் கண்ட கனவு இறுதியில் நனவாகியிருக்கிறது. இந்தக் கனவு நனவாக உழைத்த பல்லாயிரக்கணக்கான மக்களின் முயற்சிக்கு பலன் கிடைத்துள்ளது. இதற்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். இந்த வெற்றி என்னுடைய முயற்சி மட்டுமல்ல, நம் எல்லோருடைய கூட்டுப் பணியும் ஆகும்.
இந்த வெற்றி நம் எல்லோருக்குமானது. நமது கனவை நனவாக்க, இந்த நிலத்திற்குப் புதிய தொடக்கம் தேவை. சிங்களர்கள், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களின் ஒற்றுமை, புதிய யுகத்தின் தொடக்கமாக இருக்கும். வாருங்கள் கை கோர்ப்போம். இவ்வாற் அவர் கூறினார். இலங்கையின் 9-வது அதிபராக திசநாயகே இன்று பதவியேற்றுள்ளார்.












Click it and Unblock the Notifications