"மனிதாபிமானத்துடன் மீனவர் பிரச்சனையை அணுகுவோம்" இலங்கையில் பிரதமர் மோடி சொன்ன வார்த்தை!
கொழும்பு: மீனவர் விவகாரத்தில் இரு நாடுகளும் மனிதாபிமானத்துடன் அணுக ஒப்புக் கொண்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் மீனவர்களை உடனே விடுவிக்கவும், அவர்களின் படகுகளை ஒப்படைக்கவும் வலியுறுத்தியதாக கூறிய மோடி, மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்பான பிரச்சனைகள் குறித்து பேசியதாக தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி 3 நாட்கள் பயணமாக இலங்கைக்கு சென்றுள்ளார். பிரதமர் மோடியின் பயணத்திற்கு முன்பாக மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக தமிழ்நாட்டில் பல்வேறு கோரிக்கைகள் எழுந்தன. மீனவர்களுக்கு நிரந்தர முடிவு எடுக்கும் வகையில் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்தினர்.

இலங்கையில் மோடி
இந்த நிலையில் நேற்றிரவு பிரதமர் மோடி இலங்கைக்கு சென்றடைந்தார். அவருக்கு மூத்த அமைச்சர்கள் அடங்கிய குழு வரவேற்பு அளித்தது. இதனைத் தொடர்ந்து இன்று காலை இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக்கவை சந்தித்தார். பிரதமர் மோடி மற்றும் இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக்க ஆகியோரின் பேச்சுவார்த்தைக்கு பின் இரு நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தம் கையெழுத்தாகியது.
மோடி விருது
இந்தியா - இலங்கை இடையே டிஜிட்டல், பாதுகாப்பு, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியது. இதனிடையே பிரதமர் நரேந்திர மோடிக்கு இலங்கையின் உயரிய விருதான மித்ர விபூஷணா விருது வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், இலங்கை இக்கட்டான சூழலில் இருந்த போது இந்தியா பல உதவிகளை செய்திருக்கிறது.
இந்தியா செய்த உதவி
இலங்கையில் நடந்த தீவிரவாத தாக்குதல்களின் போதும், கொரோனா பரவலின் போதும் உதவியாக இருந்திருக்கிறோம். அதேபோல் பொருளாதார நெருக்கடியில் இருந்த போதும் இந்தியா இலங்கைக்கு துணையாக இருந்தது. இலங்கைக்கு அளிக்கப்பட்ட கடன்களுக்கான வட்டி குறைக்கப்படும். இலங்கை அதிபராக அநுர குமார திசநாயக்க பதவியேற்ற பின், முதல் வெளிநாடு பயணமாக இந்தியாவுக்கு வந்தார்.
தமிழ் மக்களின் கோரிக்கை
அதேபோல் இலங்கையில் உள்ள தமிழர்களுக்காக இந்தியா 10 ஆயிரம் வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இலங்கையில் உள்ள 3 கோயில்களையும் சீரமைக்க இந்தியா உதவும் என்று உறுதி அளிக்கிறேன். இரு நாடுகளுக்கு இடையில் வரலாற்று ரீதியாக பிணைப்பு இருக்கிறது. அதேபோல் இந்தியாவில் உள்ள தமிழ் மக்களின் கோரிக்கைகளையும் இலங்கை பூர்த்தி செய்யும் என்று நம்புகிறேன்.
மீனவர் பிரச்சனை
மீனவர்கள் விவகாரத்தில் மனிதாபிமானத்துடன் அணுக இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளது. மீனவர்களை உடனே விடுவிக்கவும், அவர்களின் படகுகளை ஒப்படைக்கவும் வலியுறுத்தினேன். மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்பான பிரச்சனைகள் குறித்து பேசினோம் என்று தெரிவித்துள்ளார். இருப்பினும் கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக மோடி பேசாதது ஏமாற்றத்தை அளிப்பதாக மீனவர் சங்கங்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications