பெட்ரோல் விலையேற்றம்: பைக்-கார் வேண்டாம்! ஒரு சைக்கிளை ரூ.60,000 வாங்கி பயன்படுத்தும் இலங்கை மக்கள்
கொழும்பு: இலங்கை பொருளாதார நெருக்கடியால் பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு உள்ளது. இதனால் பொதுமக்கள் சைக்கிள் பயன்பாட்டை அதிகரித்துள்ளன. இதனால் சைக்கிளின் விலை ரூ.60 ஆயிரத்தை தொட்டுள்ளது.
இலங்கை சுதந்திர அடைந்த பிறகு தற்போது தான் மோசமான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதனால் அத்தியாசிய பொருட்களின் விலைகள் விண்ணை தொட்டுள்ளன. பெட்ரோல், டீசல், உணவு பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.
இதனால் அங்கு குழப்பமான அரசியல் சூழல் நிலவுகிறது. இந்நிலையில் கடந்த 9ம் தேதி மீண்டும் இலங்கையில் போராட்டம் வெடிக்க துவங்கியது. ஏராளமான பொதுமக்கள் கொழும்புவில் உள்ள அதிபர் மாளிகையை முற்றுகையிட்டனர். இதனால் உயிருக்கு பயந்து கோத்தபய ராஜபக்சே வெளியேறிவிட்டார்.

கோத்தபய ராஜபக்சே ராஜினாமா
கோத்தபய ராஜபக்சே தற்போது அவர் ரகசிய இடத்தில் உள்ளார். அவருக்கு ராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தான் அவர் தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார். இதற்கான கடிதத்தில் அவர் கையெழுத்திட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுபற்றி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் புதிய அதிபர் ஜூலை 20ல் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

சைக்கிள் பயன்பாடு அதிகரிப்பு
இது ஒருபுறம் இருக்க இலங்கையில் தற்போது பெட்ரோல், டீசல் என்பது பொதுமக்களுக்கு எட்டாக்கனியாக உள்ளது. 1 லிட்டர் பெட்ரோல் ரூ.470க்கும் , ஒரு லிட்டர் டீசல் ரூ.460க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இருப்பினும் கடும் தட்டுப்பாடு நிலவுவதால் பலமணிநேரம் காத்திருந்து எரிபொருள் கிடைக்காத நிலை உள்ளது. இதனால் இலங்கையில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதேநேரத்தில் சைக்கிள் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

சைக்கிள் விற்பனை அதிகரிப்பு
இதனால் சைக்கிள் கடைகளில் விற்பனை அதிகரிக்க துவங்கி உள்ளது. ஏராளமான மக்கள் பைக்குகளை கைவிட்டு சைக்கிள்களை வாங்க குவிந்து வருகின்றனர். பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் சைக்கிள்களின் விலை எகிறியது. இலங்கையில் ஒரு சாதாரண சைக்கிளின் ரூ.50 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலைவாசி உயர்வால் ஏழை மக்கள் புதிய சைக்கிள்களை வாங்காமல் பழைய சைக்கிள்களை பழுதுபார்த்து பயன்படுத்த துவங்கி உள்ளனர்.

30 மடங்கு வரை விலை அதிகரிப்பு
வாடிக்கையாளர்கள் அதிகம் வருவதன் காரணமாக தற்போது சைக்கிள்களின் விலை பல மடங்கு வரை அதிகரித்துள்ளது. இதற்கு முன்பு இலங்கை பணத்தில் ரூ.20 ஆயிரமாக இருந்த சைக்கிளின் விலை தற்போது ரூ.60 ஆயிரத்தை தொட்டுள்ளது. இயல்பாக ரூ.5 முதல் 6 ஆயிரத்துக்கு விற்ற சைக்கிள்கள் தற்போது ரூ.40 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரத்தை தொட்டுள்ளன. இருப்பினும் வேறு வழியின்றி மக்கள் வாங்கி செல்கின்றனர். இந்நிலையில் தான் சைக்கிளுக்கும் அங்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உள்ளது.

10 மடங்கு அதிகரிப்பு
இதுபற்றி சைக்கிள் கடை வைத்துள்ள விக்டர் பெரேரா கூறுடகையில், ‛‛மே மாதம் வரை மாதத்துக்கு 20 சைக்கிள் மட்டும் தான் விற்பனையாகும். தற்போது 10 மடங்கு அதிகமாக சைக்கிள் விற்பனையாகிறது. இதனால் சைக்கிள் தட்டுப்பாடு ஏற்படும் அவலம் உள்ளது. சைக்கிள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக வரும் நாட்களில் இன்னும் சைக்கிளின் தேவை அதிகரிக்கும் சூழல் உள்ளது'' என்றார்.

8 கிலோமீட்டர் பயணம்
இதுபற்றி தனியார் நிறுவனத்தில் எச்ஆர் பதவி வகித்து வரும் லோக்லின் என்பவர் கூறுகையில், ‛‛தற்போதைய சூழலில் பெட்ரோல் வாங்க முடியவில்லை. நீண்ட வரிசையில் காத்திருக்கவும் நேரமில்லை. மீறி வரிசையில் நின்றாலும் கூட ரூ.1500க்கு 3 லிட்டர் பெட்ரோல் மட்டுமே கிடைக்கும். ஆனால் அதுவும் உறுதியில்லை. இதனால் நாங்கள் சைக்கிள்களைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளோம். நான் தினமும் 8 கிலோமீட்டர் சைக்கிள் மிதித்து பணிக்கு சென்று வருகிறேன். என்னை போல் நிறையபேர் சைக்கிள் பயணத்தை தொடங்கி உள்ளனர்.'' என்றார்.
Recommended Video

விறகு-மண்அடுப்பு பயன்பாடு..
மேலும் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு, தட்டுப்பாடு ஆகியவற்றால் பலர் விறகு அடுப்பை பயன்படுத்த துவங்கி உள்ளனர். பல இடங்களில் ஓட்டல்களிலும் விறகை பயன்படுத்தி சமையல் செய்து வருகின்றனர். இதனால் விறகு விற்பனையும் சூடுபிடித்துள்ளது. அதோடு விறகை பயன்படுத்தும் வகையிலான மண்அடுப்பின் விற்பனையும் களை கட்ட துவங்கி உள்ளது.












Click it and Unblock the Notifications