நான்தான் பிரதமர்.. மறுத்தால் இடைக்கால அரசாங்கமே கிடையாது.. மிரட்டும் மகிந்த ராஜபக்சே
கொழும்பு: இலங்கையில் கொந்தளிப்பான நிலைமை நீடித்து வரும் நிலையில் போராட்டக்காரர்களின் கோரிக்கையை ஏற்று இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டாலும் தாமே பிரதமர் என்று மகிந்த ராஜபக்சே அறிவித்திருப்பதால் அந்நாட்டில் குழப்ப நிலை நீடிக்கிறது.
இலங்கையில் பொருளாதார நிலைமை மிகவும் மோசமான வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளது. அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இந்த அத்தியாவசியப் பொருட்களுக்கும் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.

இதனையடுத்து பொருளாதார நிலைமையை சரி செய்யாத ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலகக் கோரி கடந்த ஒரு மாத காலமாக இலங்கையில் பெரும் போராட்டங்கள் வெடித்துள்ளன. முதலில் சிங்களர் வசிக்கும் தென்னிலங்கையில் ராஜபக்சேக்களுக்கு எதிராக வெடித்த போராட்டம் தமிழர்களின் தாயக பிரதேசமாக வடக்கு கிழக்கிலும் தொடருகிறது. மேலும் ஈழத் தமிழர்கள் தமிழகத்துக்கும் அகதிகளாக வரத் தொடங்கி உள்ளனர். மேலும் போராட்டகாரர்கள் மீது சிங்கள ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்துகிறது. இதனால் இலங்கையில் கொந்தளிப்பான நிலை தொடருகிறது.
இதனிடையே இலங்கையில் ஆளும் பொதுஜன பெரமுன கூட்டணியில் இருந்து 40 எம்.பி.க்கள் விலகி உள்ளனர். அத்துடன் அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய இடைக்கால அரசாங்கத்தை அமைக்க வேண்டும் எனவும் எனவும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த பிரதமர் மகிந்த ராஜபக்சே, எனது தலைமையில்தான் இடைக்கால அரசு ஒன்று அமைக்கப்பட வேண்டும். அப்படி அமைக்கப்படாவிட்டால் தாம் பிரதமர் பதவியை விட்டு விலக முடியாது. என்னை பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும் என யாருமே வலியுறுத்தவில்லை. அப்படி வலியுறுத்துகிறவர்கள் வரலாறு தெரியாதவர்கள். போராடுகிற பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த எனது வீட்டின் கதவுகள் திறந்தே இருக்கின்றன என்றார்.












Click it and Unblock the Notifications