இலங்கை குண்டுவெடிப்பு.. வர்த்தக அமைச்சரின் சகோதரரை கைது செய்த போலீஸ்.. நிபந்தனையுடன் விடுதலை!
இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக அந்நாட்டு ஆளும் கட்சியை சேர்ந்த இலங்கை வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியூதின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு: இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக அந்நாட்டு ஆளும் கட்சியை சேர்ந்த இலங்கை வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியூதின் சகோதரர் கைது செய்யப்பட்டு பின் விடுதலை செய்யப்பட்டார்.
கடந்த ஞாயிறு அன்று இலங்கையில் வரிசையாக குண்டு வெடிப்பு தாக்குதல் நடந்தது. அங்கு அடுத்தடுத்து 3 தேவாலயங்கள் உட்பட 8 இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்து உள்ளது. இலங்கையில் நடந்த மிகப்பெரிய தாக்குதல் இது என்று கூறப்படுகிறது.

இந்த குண்டுவெடிப்பில் 350க்கும் அதிகமானோர் பலியானார்கள். 450க்கும் அதிகமானோர் இதில் காயம் அடைந்தனர். இதில் இன்னும் பலர் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கிறார்கள்.
கொச்சிக்கடாவில் உள்ள புனித ஆண்டனி சர்ச், நீர் கொழும்பில் உள்ள கத்துவாபித்தியா பகுதியில் ஒரு சர்ச், மட்டக்களப்பு சர்ச், சின்னமன் கிராண்ட் ஹோட்டல், ஷங்கிரி லா ஹோட்டல், கிங்ஸ்பெரி ஹோட்டல்களில் குண்டுவெடித்து இருக்கிறது.
இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டது. இது தொடர்பாக அவர்கள் வீடியோவும் வெளியிட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின் இந்த குண்டுவெடிப்பில் தொடர்புடைய முகமது யூசுப் இப்ராஹிம் என்பவரின் குடும்பம் விசாரிக்கப்பட்டது.
இவரின் மகன்கள் இன்சாப் அஹமது இப்ராஹிம் மற்றும் இல்ஹாம் அஹமது இப்ராஹிம் ஆகியோர் குண்டுவெடிப்பு தாக்குதலில் ஈடுப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக ஆளும் கட்சியை சேர்ந்த இலங்கை வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியூதின் சகோதரர் கைது செய்யப்பட்டார்.
இவருக்கும் குண்டு வெடிப்பிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது. போலீசார் இவரை கைது செய்து விசாரித்தனர். சுமார் 3 மணி நேரம் இவரின் விசாரணை நடந்தது.
அதன்பின் இவரின் வாக்குமூலம் வாங்கப்பட்டது. பின் நிபந்தனையின் பெயரில் இவர் விடுதலை செய்யப்பட்டார். இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக இதுவரை 32 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.











Click it and Unblock the Notifications