இலங்கை ஷாக்: பொதுமக்கள் தாக்குதலுக்கு அஞ்சி ராஜபக்சே ஆதரவு எம்.பி அமரகீர்த்தி அத்துகோரள தற்கொலை?
கொழும்பு: இலங்கையில் வன்முறையில் ஈடுபட்ட முன்னாள் எம்.பி. மகிந்த ராஜபக்சேவின் ஆதரவாளரான அமரகீர்த்தி அத்துகோரள எம்.பி, போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார் என முதலில் செய்திகள் வெளியாகின. ஆனால் பொதுமக்களின் தாக்குதலுக்கு அஞ்சி தப்பி ஓடி அமரகீர்த்தி அத்துகோரள தற்கொலை செய்து கொண்டதாக சில இலங்கை ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
இலங்கை தலைநகர் போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது மகிந்த ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதல் முறியடிக்கப்பட்டு ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். பின்னர் மகிந்த ராஜபக்சே, பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.

கோபமும் கொந்தளிப்பும்
இருப்பினும் இலங்கை மக்களின் கோபம் தணியவில்லை. இலங்கையின் பல நகரங்களில் அரசியல்வாதிகளின் கார்கள் மற்றும் உள்ளூர் அரசியல்வாதிகளின் வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டு வருகின்றன. நிட்டம்புவ, கடவத்தை மற்றும் மினுவாங்கோவில் பேருந்துகள் மற்றும் சொகுசு கார்கள் பலத்த சேதம் அடைந்து உள்ளன.புலத்சிங்கள பிரதேச சபை தவிசாளரும் மொறட்டுவ மேயருமான சமன்லாலின் வீட்டிற்கு ஒரு குழுவினர் தீ வைத்தனர். இந்த தீயை அணைக்க வந்தவர்களுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டோருக்கும் இடையே மோதல் வெடித்தது.

ராஜபக்சே ஆதரவு எம்.பி மரணம்
இதனிடையே நிட்டம்புவ என்ற இடத்தில் வன்முறையில் ஈடுபட்ட ராஜபக்சே ஆதரவாளர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் பொலன்னறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள சுட்டுக் கொல்லப்பட்டதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் பொதுமக்களின் தாக்குதலுக்கு அஞ்சி அமரகீர்த்தி தப்பி ஓடி பதுங்கியதாகவும் பின்னர் அதே இடத்தில் கைத்துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார் என்றும் சில இலங்கை ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. இதனால் அமரகீர்த்தி எப்படி உயிரிழந்தார் என்பது குறித்த குழப்பம் தொடருகிறது.

தாக்குதல் நீடிப்பு
மேலும் முன்னாள் அமைச்சர் ஜோன்சன் பெர்னாண்டோவின் குருநாகலிலுள்ள கட்சி அலுவலகம் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கொழும்பில் உள்ள மகிந்த ராஜபக்சேவின் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அலுவலகத்துக்கு தீவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன்
மறு அறிவிப்பு வரும் வரை அனைத்து ரயில் சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மதுபான கடைகளும் இலங்கையில் மூடப்பட்டுள்ளன
Recommended Video

ராணுவ தளபதி வாகனம்
இலங்கை இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவின் பாதுகாப்புப் படையினருக்குச் சொந்தமான வாகனம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது என்று சிங்கள இணையம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கொழும்பு தேசிய மருத்துவனைக்கு முன்பாகவே ஆர்ப்பாட்டக்காரர்களால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
|
மேலும் ஒரு எம்.பி. வீட்டுக்கு தீ வைப்பு
இதேபோல் கொழும்பு காலிமுகத்திடல் வன்முறைக்காக ஆட்களை அனுப்பியதாக கூறப்படும் ராஜபக்சே ஆதரவு எம்.பி. சனத் நிசாந்தவின் வீடும் தீ வைத்து பொதுமக்களால் எரிக்கப்பட்டது. இதில் சனந்த் நிசாந்தாவின் வீடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. தீயை அணைக்கமுடியாமல் தீயணைப்பு வீரர்கள் தவித்து வந்தனர். முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேவின் அலுவலகம் மீதும் போராட்டக்காரர்கள் தற்போது கற்களை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.மகிந்தானந்த அளுத்கமகேவின் அலுவலகத்திற்கும் காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications