கோத்தபாய ராஜபக்சே தப்பி ஓட இந்தியா உதவவில்லை- இலங்கைக்கான இந்திய தூதரகம் விளக்கம்
கொழும்பு: இலங்கை ஜனாதிபதி பதவியில் இருந்து விலகிய கோத்தபாய ராஜபக்சே, நாட்டை விட்டு தப்ப இந்தியா உதவவில்லை என்று இலங்கைக்கான இந்திய தூதரகம் விளக்கம் அளித்துள்ளது.
Recommended Video
இலங்கையில் மக்கள் தன்னெழுச்சிப் போராட்டங்கள் அதிதீவிரமடைந்ததால் ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவதாக கோத்தபாய ராஜபக்சே அறிவித்தார். தமது பதவி விலகல் கடிதத்தில் கோத்தபாய ராஜபக்சே கையெழுத்திட்டிருந்தாலும் அவர் பதவி விலகமாட்டார் என்றே கூறப்பட்டு வந்தது.

இதனிடையே கோத்தபாய ராஜபக்சே, நேற்றே நாட்டைவிட்டு ஓட முயற்சித்தார் என தகவல்கள் வெளியாகின. அமெரிக்கா விசா வழங்க மறுத்தது, இந்தியா அடைக்கலம் தர மறுத்தது என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில் இன்று அதிகாலை மாலத்தீவுக்கு கோத்தபாய ராஜபக்சே தப்பி ஓடிவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனை இலங்கை விமானப் படையும் இலங்கை பிரதமர் அலுவலகமும் உறுதி செய்தது. அதேநேரத்தில் கோத்தபாய ராஜபக்சே தப்பி ஓடுவதற்கு இந்தியா உதவியதாகவும் சில ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன.

இதனை இலங்கைக்கான இந்திய தூதரகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: கோத்தபாய ராஜபக்சே. பசில் ராஜபக்சே ஆகியோர் இலங்கையைவிட்டு வெளியேறுவதற்கு இந்தியா உதவியதாக ஆதாரங்களின்றியும் ஊகங்களின் அடிப்படையிலும் வெளியாகியிருக்கும் செய்திகளை உயர் ஸ்தானிகராலயம் முற்றாக நிராகரிக்கின்றது. ஜனநாயகபெறுமானங்கள் மற்றும் விழுமியங்கள்,நிறுவனமயப்படுத்தப்பட்ட ஜனநாயகஅமைப்புகள் மற்றும் அரசியலமைப்புரீதியான கட்டமைப்பு ஆகியவற்றின் ஊடாக செழுமை மற்றும் முன்னேற்றத்தினை நனவாக்க எதிர்பார்த்திருக்கும் இலங்கைமக்களுக்கு இந்தியா தொடர்ந்தும் ஆதரவளிக்குமென மீண்டும் வலியுறுத்தப்படுகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications