கடல் நடுவே சீனா கட்டிய நகரம்! 15 பில்லியன் டாலர் செலவு: இலங்கைக்குள் ஒரு குட்டி துபாய்
கொழும்பு: இலங்கை மக்களை வியப்பில் ஆழ்த்தும் விதமாக மாறி இருக்கிறது கொழும்பு கடலுக்குள் செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ள போர்ட் சிட்டி. அங்கே என்ன இருக்கிறது? இதன் சிறப்பு என்ன?
ஒருகாலத்தில் இலங்கையில் கடல் பகுதியாகப் பரந்து விரிந்து கிடந்த நிலப்பரப்பில் கற்களையும் லாரி லாரியாக மணலையும் கொட்டி நிரப்பி ஒரு செயற்கையான நகரத்தையே உருவாக்கி இருக்கிறது சீனா. இதற்குப் பெயர்தான் போர்ட் சிட்டி. இது இலங்கை கொழும்பு கடற்கரை பகுதியில்தான் உருவாக்கப்பட்டுள்ளது. இதை இரண்டாவது துபாய் என்கிறார்கள். பன்னாட்டு நிறுவனங்கள் இங்கே கால்பதிக்கக் காத்திருக்கின்றன. இது இலங்கையில் புதியதாக உருவாக்கப்பட்ட சிறப்புப் பொருளாதார மண்டலம். இதை 90% நிதியைச் செலவிட்டு முழுமையாக உருவாக்கி இருக்கிறது சீனா.

இதன் மூலம் தெற்காசியாவின் வர்த்தகப் பாதையின் மையமாக இருக்கும் இடத்தை கைப்பற்றி இருக்கிறது. இது பிற்காலத்தில் இந்தியாவுக்கு ஒரு நெருக்கடியாக மாறும் என்ற எதிர்ப்புக் குரல்கள் பல ஆண்டுகள் முன்னர் எழுந்தன. கடலுக்குத் துறைமுகப் பகுதியாக இருந்த நிலத்தை நிலப்பரப்பாக மாற்ற வேண்டும் என்றால் அது எளிதான காரியம் இல்லை. அதற்குப் பல லட்சக்கணக்கான கோடிகளைச் செலவு செய்ய வேண்டும். அதைச் சீனா செய்து செயற்கையாக ஒரு நகரத்தைக் கடல் நடுவே உருவாக்கி உள்ளது. பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்தக் கட்டுமான பணிகள் முடிவடைந்து இப்போது மக்கள் அங்கே போகத் தொடங்கி உள்ளனர்.
இலங்கையைச் சேர்ந்த விலக்கர் தவகரன் மற்றும் சங்கவி ஜோடி இந்த போர்ட் சிட்டியை சுற்றிப் பார்த்து முழு வீடியோவை வெளியிட்டுள்ளனர். கடல் நடுவே கட்டப்பட்டுள்ள பாலம், அழகான நடைபாதைகள், வானத்தைத் தொட்டுவிடும் அளவுக்கு உயர்ந்து நிற்கும் உயர் கோபுர கட்டடங்கள் என இந்த செயற்கை நகரத்தைப் பார்க்க இரண்டு கண்கள் போதாது என்பதைப் போல் இயற்கை அழகு தலைவிரித்தாடுகிறது. 2கே கிட்ஸ் பாஷையில் சொன்னால் வேற லெவல்.
அதேபோல் இந்த செயற்கை கடற்கரைக்குள் செல்வதற்கு தார்ச்சாலைகள் உலகத் தரத்தில் போடப்பட்டுள்ளது. இந்தக் கடலுக்குள் வரும் சுற்றுலாப் பயணிகள் தங்களின் வாகனத்தை பார்க்கிங் செய்வதற்காக ஒரு மிகப்பெரிய நிலப்பரப்பும் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த செயற்கை கடல் நகரத்திற்கு உள்ளாகவே உணவகங்கள், திரையரங்குகள், ஷாப்பிங் மால்கள். பொழுதுபோக்கு கூடங்கள் எனப் பல வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஒரு வருடம் முன்பாக இதன் கட்டுமான வேலைகள் நடைபெற்று வரும்போது காரில் மட்டுமே செல்ல முடியும். இப்போது பைக் மற்றும் ஆட்டோ வசதிகள் கூடச் செய்யப்பட்டுள்ளன. அதனால் சாமானிய மக்கள் கூட உள்ளே வரக் கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதை இந்த ஜோடி வெளியிட்டுள்ள வீடியோவில் தெளிவாக விளக்கியுள்ளனர்.
இங்கே நடைபாதையாக அமைக்கப்பட்டுள்ள இடங்கள் எல்லாம் சீனாவை நிவைவு படுத்துகிறதைப் போலச் சிகப்புக் கம்பளம் வண்ணத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த போர்ட் சிட்டிக்கு கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகை வழியே அமைந்துள்ள சாலை வழியாகத்தான் செல்ல வேண்டும். இந்த நகரத்தின் முகப்பு வாயிலில் வர்த்தக மையம், இந்தியாவில் ரிசர்வ் பேங்க் என்று சொல்வதைப் போல பிஓசி எனும் இலங்கை வங்கியின் தலைமையகம் இங்கேதான் உள்ளது. இது தவிர ஒரு நட்சத்திர ஹோட்டலும் முகப்பில் உள்ளது. இவை எல்லாம் பழமையானவை. இதைத் தாண்டிதான் செயற்கை நகரமான போர்ட் சிட்டிக்கு 4 கிமீட்டர் போக வேண்டும். இந்த வர்த்தக நகரத்தை உருவாக்க 15 பில்லியன் அமெரிக்க டாலர் செலவிடப்பட்டுள்ளது. 2018 ஜனவரியில் இதற்காக நிலங்களைக் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கி டிசம்பர் மாதம் முடிந்தது.
இதைப் பற்றி தவகரன் பேசுகையில், “நாங்கள் சில ஆண்டுகள் முன்பாகத்தின் கொழும்பு வந்தோம். அப்போது இந்த சிட்டியைக் கட்டிக் கொண்டிருந்தார்கள். பெரிய அளவுக்கு மணல்களைக் கொட்டி இதை உருவாக்கி வந்தார்கள். வேலைகள் எல்லாம் முடிந்த பிற்பாடு காணும்போது இது ஒரு துபாய் போல் இருக்கிறது. சில இடங்களைப் பார்த்தால் 'ஆடு ஜீவிதம்’ படத்தில் வரும் பாலைவனம் போல் தெரிகிறது.
இங்கே குளிப்பதற்காகவே தனி கடற்கரை அமைத்திருக்கிறார். நகரத்தில் நடந்தே போக சிகப்பு பாதை அழகாக இருக்கிறது. கடல் நடுவே ஒரு தொங்கு பாலமும் அழகாக இருக்கிறது. இரவில் இந்தப் பாலத்தில் எரியும் வண்ண விளக்குகளைக் காண ரம்மியமாக இருக்கிறது. இந்த சிட்டி 3 கிமீட்டர் தூரம் சுற்றளவு உள்ளது. நாங்கள் இதுவரை மூன்று முறை வந்துள்ளோம். இந்த முறை வரும்போது பல விசயங்கள் வியப்பாக உள்ளன. இரவு நேரத்தில் இந்த நகரத்தின் வீயூ பார்க்கவே கண்கொள்ளக் காட்சியாக இருக்கிறது" என்கிறார்.












Click it and Unblock the Notifications