இலங்கையில் அண்ணாமலை- இன்று மலையகம்- நாளை யாழ்ப்பாணம்- தமிழ்த் தலைவர்களுடன் ஆலோசனை!
கொழும்பு: இலங்கை சென்றுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று இந்திய வம்சாவளித் தமிழர்கள் வசிக்கும் மலையகப் பகுதியில் மே தின நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதனைத் தொடர்ந்து ஈழத் தமிழர்கள் வசிக்கும் யாழ்ப்பாணத்துக்கு நாளை செல்லும் அண்ணாமலை, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களையும் சந்தித்து பேச உள்ளார்.
இலங்கையில் பொருளாதார நிலைமை மிக மோசமாக வீழ்ச்சி அடைந்துள்ளது. பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களைப் பெற முடியாமல் கடும் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர். இதனால் கொந்தளித்துப் போன பொதுமக்கள் கடந்த 3 வார காலமாக தலைநகர் கொழும்பு உள்ளிட்ட இடங்களில் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கொழும்பு காலிமுகத் திடலில் கடந்த 22 நாட்களாக இரவும் பகலுமாக பொதுமக்கள் முகாமிட்டுப் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் இந்தியா உள்ளிட்ட நாடுகள் உதவிக் கரம் நீட்டியுள்ளன. இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு அரசும் இலங்கையில் அனைத்து தரப்பு மக்களுக்கும் நிவாரணப் பொருட்களை மத்திய அரசு மூலம் அனுப்ப முடிவு செய்துள்ளது. இது தொடர்பான தனிநபர் தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திடீரென இலங்கைக்கு பயணம் மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. 4 நாட்கள் பயணமாக இலங்கை வருகை தந்த அண்ணாமலையை இந்திய வம்சாவளித் தமிழர்களின் கட்சியான இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட தலைவர் திருக்கேசு செல்லச்சாமி, நிர்வாகிகள் ரகு, கோபி ஆகியோர் கொழும்பு விமான நிலையத்தில் வரவேற்றனர்.

இதனைத் தொடர்ந்து இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லேவை அண்ணாமலை சந்தித்து பேசினார். இதனைத் தொடர்ந்து அங்கிருந்து கொட்டக்கலைக்கு அண்ணாமலை சென்றார். முன்னதாக நுவரெலியாவில் இந்திய வம்சாவளித் தமிழ் தலைவர்களான செந்தில் தொண்டமான், ராஜதுரை, வேலு யோகராஜா உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர் சீதை கோவிலில் வழிபாடு செய்தார் அண்ணாமலை. இன்று மலையகத்தில் முகாமிடும் அண்ணாமலை இந்திய வம்சாவாளித் தமிழர்களின் நிலைமையை ஆய்வு செய்கிறார். மேலும் மே-1 தொழிலாளர் தின நிகழ்ச்சியிலும் அண்ணாமலை பங்கேற்கிறார்.
Recommended Video
இதன்பின்னர் நாளை ஈழத் தமிழர்களின் தாயகப் பகுதியான யாழ்ப்பாணம் செல்லும் அண்ணாமலை அங்கு நல்லூர் கந்தசுவாமி கோவிலில் வழிபாடு நடத்துகிறார். பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களை அண்ணாமலை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications