கடலூரில் 80 வயது மூதாட்டி கூட்டு பாலியல் பலாத்காரம்.. போலீசாரிடம் இருந்து தப்ப முயன்ற வாலிபர் சுட்டுப்பிடிப்பு
கடலூர்: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே 80 வயது மூதாட்டியை மர்ம நபர்கள் சிலர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில் அவரது உடல்நிலை மோசமடைந்த நிலையில் அவர் அணிந்திருந்த கம்மல், மூக்குத்தியையும் அவர்கள் திருடி சென்றுள்ளனர். இந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய ஒருவர் போலீசார் பிடியில் இருந்து தப்ப முயன்றபோது சுட்டுப்பிடிக்கப்பட்டுள்ளார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மூதாட்டி காட்டுக்குள் பலாத்காரம் செய்யப்பட்டு கிடந்த நிலையில், அப்பகுதியில் நடந்து சென்றவர்கள் மூதாட்டியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தோப்புக்குள் தூக்கி சென்று
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள கிராமத்தில் வசித்து வந்த 80 வயது மூதாட்டி, நேற்று மதியம் 3 மணியளவில் வெளியில் சென்றிருக்கிறார். அங்குள்ள சவுக்கு தோப்பு பகுதியில் மூதாட்டி நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த வாலிபர்கள் 4 பேர் திடீரென மூதாட்டியை மறைவான இடத்துக்கு தூக்கி சென்றுள்ளனர்.
பின்னர் அவர்கள் மூதாட்டியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதில் மூதாட்டியின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. முன்னதாக மூதாட்டி கத்தி சத்தமிட்டதால், அவரது சத்தம் வெளியில் கேக்காமல் இருப்பதற்கு வாயில் மண்னை அள்ளி போட்டதாகவும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து மூதாட்டி அணிந்திருந்த தங்க நகைகளை அந்த நபர்கள் பறித்துக்கொண்டு தப்பி ஓடினர். காதில் அணிந்திருந்த கம்மல், மூக்குத்தி உள்ளிட்ட முக்கால் சவரன்ன் நகைகளை திருடிச் சென்றதாக கூறப்படுகிறது.
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
மூதாட்டி நடு காட்டில் மயக்க நிலையில் கிடந்துள்ளார். அப்போது அந்த வழியாக சென்ற சிலர், மூதாட்டி காயமடைந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். இதையடுத்து அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து நகைகளை திருடிய நபர்களை பிடிக்க தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடையதாக சுந்தரவேல் என்பவரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
சுட்டுப் பிடித்த போலீசார்
அப்போது அவர் போலீசாரின் பிடியில் இருந்து தப்ப முயன்றுள்ளார். இதையடுத்து போலீசார் அவரை துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதில் பெரும் பரபரப்பு நிலவியது.
சமீப நாட்களாக பாலியல் வன்கொடுமை, திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் தரப்பில் தொடர்ந்து குற்றச்சாட்டு கூறி வரும் நிலையில் இந்த சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications