முந்திரி தொழிற்சாலை ஊழியர் கொலை : கடலூர் திமுக எம்பி ரமேசுக்கு 13ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல்
முந்திரி தொழிற்சாலை ஊழியர் கொலை வழக்கில் பண்ருட்டி நீதிமன்றத்தில் சரணடைந்த திமுக எம்.பி ரமேஷை 13ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க பண்ருட்டி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடலூர்: முந்திரி தொழிற்சாலை ஊழியர் அடித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த திமுக எம்.பி ரமேஷ் பண்ருட்டி நீதிமன்றத்தில் சரணமடைந்தார். அக்டோபர் 13ஆம் தேதி வரைக்கும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க பண்ருட்டி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் மேல்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர், பணிக்கன் குப்பம் கிரமத்தில் திமுக கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷுக்கு சொந்தமான டிவிஆர் முந்திரி தொழிற்சாலையில் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வந்தார். கடந்த மாதம் 19ஆம் தேதி வேலைக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து கோவிந்தராஜின் மகனுக்கு தொலைபேசி மூலமாக, கோவிந்தராஜ் உயிரிழந்து விட்டதாகவும் அவரது உடல் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் உள்ளதாகவும் ரமேஷின் உதவியாளர் தெரிவித்துள்ளார்.
சந்தேகமடைந்த அவரது மகன் மற்றும் உறவினர்கள் கோவிந்தராஜின் உடலை பார்த்துள்ளனர். அப்போது அவர் உடல் முழுவதும் காயங்கள் இருந்ததால் காடாம்புலியூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும். அதுவரை உடலை வாங்க மாட்டோம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தனது தந்தை கொலை செய்யப்பட்டதாகவும், இது தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோவிந்தராஜின் மகன் செந்தில்வேல் கோரிக்கை விடுத்தார்.

உடலில் காயங்கள்
இது தொடர்பாக பல்வேறு போராட்டங்களும் நடைபெற்றன. கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய மனு அளித்ததோடு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அதில், கடந்த 19ஆம் தேதி வேலைக்குச் சென்ற எனது தந்தை வீடு திரும்பவில்லை. அவர் விஷம் குடித்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது. மருத்துவமனைக்குச் சென்று பார்த்தபோது, அவரது உடலில் ரத்தக் காயங்கள் மற்றும் அடித்து துன்புறுத்தியதற்கான அடையாளங்கள் இருந்தது. எனவே, எனது தந்தை அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது.

நீதிமன்றம் உத்தரவு
அவரது மரணம் குறித்து காடாம்புலியூர் போலீசார் உரிய முறையில் விசாரிக்கவில்லை. எனவே, எனது தந்தையின் உடலை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்களைக் கொண்டு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும். அத்துடன் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.
சென்னை நீதிமன்ற உத்தரவின்படி விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைத்திருந்த கோவிந்தராஜூவின் உடலை ஜிப்மர் மருத்துவர்களைக் கொண்டு பிரேத பரிசோதனை செய்தனர்.

விஷம் கொடுத்து கொலை
கோவிந்தராசு மர்ம மரண வழக்கு விசாரணையை சிபிசிஐடி காவல்துறைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது.
விழுப்புரம் சிபிசிஐடி கூடுதல் எஸ்.பி கோமதி, இன்ஸ்பெக்டர் சுந்தரராஜ் ஆகியோர் பண்ருட்டி மற்றும் பணிக்கன்குப்பத்தில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கோவிந்தராஜ் அடித்து துன்புறத்தப்பட்டதாக அங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் வாக்குமூலம் அளித்தனர். இதனையடுத்து, கோவிந்தராஜை அடித்து, விஷம் கொடுத்து கொலை செய்தது அம்பலமானது.

சிபிசிஐடி வழக்குப் பதிவு
கோவிந்தராசு அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து கோவிந்தராசுவின் மர்ம மரண வழக்கை சிபிசிஐடி காவல்துறையினர் கொலை வழக்காக மாற்றி உள்ளனர். கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ். மற்றும் அவரது தொழிற்சாலையில் உள்ள நடராஜ், அல்லா பிச்சை, சுந்தர், வினோத், கந்தவேல் உள்ளிட்ட 6 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதில், நாடாளுமன்ற உறுப்பினரைத் தவிர மற்ற 5 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

திமுக எம்.பி சரண்
தலைமறைவாக இருந்த கடலூர் திமுக எம்பி ரமேஷ் விரைவில் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று பண்ருட்டி நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எதிர்கட்சிகள் குற்றம் சுமத்துவதாகவும், என் மீதான குற்றச்சாட்டை பொய் என நிரூப்பிபேன் என்றும் ரமேஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தவறான பிரச்சாரம்
என்னுடைய முந்திரித் தொழிற்சாலையில் பணிபுரிந்த திரு கோவிந்தராஜ் என்பவரது மரணம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி என் மீது பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையினை அடிப்படையாக வைத்து. திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது சில அரசியல் கட்சிகள் தங்களுக்கே உரித்தான அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் தவறான பிரச்சாரத்தை மேற்கொண்டிருப்பது என் மனதிற்கு நெருடலாகவும், இந்த இயக்கத்தின் தொண்டர்களில் ஒருவனாக இருக்கும் எனக்கு மிகுந்த வேதனையும் அளிக்கிறது.

ஆதாரமற்ற புகார்
நான் உயிரினும் போற்றும் என் தலைவர் அவர்களின் நல்லாட்சியின் மீது விண்பழி சுமத்துபவர்களுக்கு மேலும் இடம் கொடுத்திட வேண்டாம் எனக் கருதி சி.பி.சி.ஐ.டி. பதிவு செய்துள்ள வழக்கில் நான் நீதிமன்றத்தில் சரணடைகிறேன். என் மீது சுமத்தப்பட்டுள்ள புகார் ஆதாரமற்றது என்பதை சட்டத்தின் முன்பு உரிய ஆதாரங்களுடன் நிரூபித்து வெளியே வருவேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.

நீதிமன்றக்காவல்
பண்ருட்டி நீதிமன்றத்தில் சரணடைந்த எம்.பி ரமேஷ் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வரும் 13ஆம் தேதி நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கொலை வழக்கில் சிக்கியுள்ள ரமேஷ் திமுகவில் நீக்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications