தமிழகம் முழுவதும் 7 லட்சம் கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி...கடலூரில் தொடக்கி வைத்த உதயநிதி
கர்ப்பிணி பெண்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமினை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சட்டமன்ற மதிப்பீட்டு குழு உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
கடலூர்: தமிழகத்தில் கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்கியது. மாநிலம் முழுவதும் 7லட்சத்து 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.
நாடு முழுவதும் கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியதுடன், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது. அதன்படி கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடும் சுகாதார ஊழியர்களுக்கு பயிற்சி மற்றும் கவுன்சிலிங் வழங்க வேண்டும் என்றும், தடுப்பூசி எடுத்துக்கொள்வதன் பயன் மற்றும் அதனால் ஏற்படும் நன்மை உள்ளிட்ட தடுப்பூசி தொடர்பான அனைத்து தகவல்களையும் கர்ப்பிணிகளுக்கு கவுன்சிலிங் மூலம் தெரிவிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.

மேலும் கர்ப்பிணிகள் சம்மதம் தெரிவித்தால் மட்டுமே அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. மேலும், தடுப்பூசி செலுத்திக் கொண்ட கர்ப்பிணிகளை சிறப்பு கவனம் செலுத்தி கண்காணிக்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி போட மத்திய சுகாதார அமைச்சகம் அனுமதி அளித்ததின் பேரில் தமிழ்நாட்டில் இன்று முதல் கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மொத்தம் 7 லட்சத்து 38 ஆயிரத்து 583 கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலர் டாக்டர் ராதகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கர்ப்பிணி பெண்கள் அவரவர் வசிக்கும் பகுதியில் உள்ள சிறப்பு முகாம்களுக்கு சென்றால் முன்னுரிமை அடிப்படையில் அவர்களுக்கு தடுப்பூசி போட சிறப்பு ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கர்ப்பிணி பெண்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமினை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சட்டமன்ற மதிப்பீட்டு குழு உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த விழா வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மா.சுப்பிரமணியன், கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்த அனுமதி கிடைத்த நிலையில், குறுகிய காலத்தில் மிக விரைவாக சிறப்பு முகாம் நடத்தி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். கடலூரில் 26 ஆயிரத்து 917 பேர் உட்பட, தமிழகம் முழுவதும் 7லட்சத்து 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications