லிப்ட்டில் சிக்கிய காங்கிரஸ் எம்பி விஷ்ணு பிரசாத்.. கடலூரில் 2 நிர்வாகிகள் மயக்கம்.. என்ன நடந்தது?
கடலூர்: கடலூரில் காங்கிரஸ் கட்சியின் கிராம கமிட்டி கூட்டத்தில் பங்கேற்க சென்ற காங்கிரஸ் எம்பி விஷ்ணு பிரசாத் உள்பட 6 நிர்வாகிகள் லிப்ட்டில் சிக்கி கொண்டனர். பாதி வழியில் லிப்ட் நின்றதால் அவர்கர் வெளியே வர முடியாமல் தவித்தனர்.
கடலூர் லோக்சபா தொகுதி காங்கிரஸ் எம்பியாக இருப்பவர் விஷ்ணு பிரசாத். இந்நிலையில் தான் கடலூர் மாவட்டம் வடலூரில் இன்று காங்கிரஸ் கட்சியின் கிராம கமிட்டி கூட்டம் நடந்தது. இந்த கூட்டம் என்பது வடலூரியில் உள்ள தனியார் விடுதியில் நடந்தது.

கூட்டத்தில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் எம்பி விஷ்ணு பிரசாத் தனியார் விடுதிக்கு வந்தார். 2வது தளத்தில் உள்ள அரங்கில் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதனால் எம்பி விஷ்ணு பிரசாத் உள்பட 6 நிர்வாகிகள் லிப்ட்டில் 2வது தளத்துக்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென்று பாதிவழியில் லிப்ட் நின்றது. இதனால் விஷ்ணு பிரசாத் எம்பி உள்பட 6 பேர் லிப்ட்டுக்குள் சிக்கி கொண்டனர். லிப்ட்டின் கதவை திறக்க முயன்றனர். ஆனால் லிப்ட் கதவு திறக்கவில்லை. இதனால் அவர்களால் வெளியே வரமுடியவில்லை. இதுபற்றி அறிந்த விடுதி ஊழியர்கள் அவர்கள் 6 பேரையும் மீட்கும் வகையில் லிப்ட்டில் ஏற்பட்ட பிரச்சனையை சரிசெய்ய முயன்றனர். இது கைக்கொடுக்கவில்லை.
இதையடுத்து உடனடியாக குறிஞ்சிபாடி, நெய்வேலி தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து லிப்ட்டில் சிக்கியவர்களை மீட்கும் பணியை தொடங்கினர். லிப்ட்டை இயக்க முயன்றனர். ஆனால் லிப்ட் செயல்படவே இல்லை. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் லிப்ட்டின் கதவை உடைத்து உள்ளே சிக்கிய விஷ்ணு பிரசாத் எம்பி உள்பட 6 பேரை மீட்டனர்.
அப்போது லிப்ட்டில் சிக்கிய 2 காங்கிரஸ் நிர்வாகிகள் மயங்கிய நிலையில் இருந்தனர். உடனடியாக அவர்கள் அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மற்றபடி விஷ்ணு பிரசாத் எம்பி உள்பட 4 பேருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. முதற்கட்ட விசாரணையில் அந்த விடுதியில் உள்ள லிப்ட் என்பதுஅளவில் மிகவும் சிறியது.
ஒரே நேரத்தில் லிப்ட்டில் 3 பேர் மட்டுமே செல்ல வேண்டும். ஆனால் விஷ்ணு பிரசாத் எம்பி உள்பட 6 பேர் இன்று லிப்ட்டில் சென்றனர். இந்த அதிக எடையின் காரணமாக லிப்ட் பழுதாகி பாதி வழியில் நின்றது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அந்த தனியார் விடுதியில் சிறிது நேரம் பரபரப்பு தொற்றி கொண்டது.












Click it and Unblock the Notifications