கடலூர் சரோஜா.. ஜெயிலுள்ள மகனுக்காக சென்னை கோர்ட்டுக்கு ஓடிய அம்மா.. நீதிபதி கேட்ட கேள்வி? என்னாகுமோ
கடலூர்: கடலூரை சேர்ந்த சரோஜா என்பவர், முக்கிய மனு ஒன்றினை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.. இது தொடர்பாக நீதிபதிகள் என்ன உத்தரவு பிறப்பிக்கப் போகிறார்களோ? என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டு வருகிறது.
கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அப்துல் ரஹீம். இவர் கடந்த 2006-ல் சவுதி அரேபியா சென்று, அங்கு ஒரு குடும்பத்தினரிடம் டிரைவராக வேலை பார்த்தார்..

மரண தண்டனை: ஆனால் அந்த குடும்பத்தினருடன் ஏற்பட்ட பிரச்சனையில் அப்துல் ரஹீம், தன்னுடைய முதலாளியின் மாற்றுத்திறனாளி மகனின் உடலில் பொருத்தப்பட்டிருந்த சுவாசக் கருவியை துண்டித்துவிட்டார்..
இதில், அந்த சிறுவன் இறந்துவிட்டான். எனவே, போலீசார் அப்துல் ரஹீமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.. இறுதியில், அந்நாட்டு நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது. இதனிடையே, சிறுவனின் இறப்புக்கு ஈடாக 34 கோடி ரூபாயைப் பெற்றுக் கொள்ள சிறுவனின் குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்தனர்.
எனவே, "சேவ் அப்துல் ரஹீம்" என்ற செல்போன் செயலியையும் நிறுவி கூட்டு நிதி திரட்டும் பணியில் அவரது நண்பர்கள் ஈடுபட்டார்கள்.. அத்துடன், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வணிகர்கள், தொழிலதிபர்கள் என ஏராளமானோர் நிதி அளித்தனர். இறுதியில், கடந்த வாரம், ரூ.34 கோடியையும் தாண்டி அதிகமாகவே நிதி சேர்ந்துவிட்டது.
பினராயி விஜயன்: 18 ஆண்டுகளுக்குப் பிறகு தன்னுடைய மகன் வருகைக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் எனறு அப்துலின் அம்மா மகிழ்ந்து கூறுகிறார்.. முதல்வர் பினராயி விஜயனும் ஒரு ட்வீட் பதிவிட்டிருந்தார். "கேரளாவின் மக்கள் மற்றும் மதிப்புகள் மீதான அர்ப்பணிப்பு தெளிவாக உள்ளது, பிளவுபடுத்தும் பொய்களை உடைக்கிறது. இந்த மனிதாபிமானத்திற்காக கைகோர்த்த அனைவருக்கும் நன்றி" என்று முதலமைச்சர் பதிவிட்டிருந்தார்.
இதேபோன்ற ஒரு வழக்கு, இதே சவுதி அரேபியாவில் நடந்துள்ளது.. இதுபோலவே, கடலூரை சேர்ந்த இளைஞருக்கு மரண தண்டனை கிடைத்திருக்கிறது.. எனவே, சென்னை உயர்நீதிமன்றத்தில், கடலூர் மாவட்டம் பெரியகோட்டுமுளையைச் சேர்ந்த சரோஜா என்பவர் மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் உள்ளதாவது:
பரிசீலனை: "கொலை வழக்கில், என் மகன் பரதன் பாண்டுரங்கன் என்பவருக்கு, சவுதி அரேபியா நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. அவர், 16 ஆண்டுகளுக்கும் மேலாக, சவுதி சிறையில் உள்ளார். பொது மன்னிப்பு திட்டத்தில், 2015ல் அவரது விடுதலை குறித்து பரிசீலிக்கப்பட்டது. சவுதி அரேபியா நீதிமன்ற தீர்ப்பின்படி, உயிரிழந்தவரின் வாரிசுகள் மன்னித்தால், என் மகனை காப்பாற்றலாம். ஆனால், உயிரிழந்தவரின் குடும்பம் கேரளாவில் உள்ளது.
சட்ட உதவி வழங்க, என் மகனுக்கு யாரும் இல்லை. 16 ஆண்டுகளாக சிறையில் இருப்பதால் மகனை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, மத்திய, மாநில அரசுகளுக்கு, கடந்த மார்ச்சில் மனு அனுப்பினேன். எந்த நடவடிக்கையும் இல்லை. மனு மீது நடவடிக்கை எடுக்க, மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்" என்று அந்த மனுவில் கேட்டுக் கொண்டிருந்தார்.
விசாரணை: இந்த மனுவானது, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சிவஞானம் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர்கள் ராதாகிருஷ்ணன், புகழேந்தி ஆஜராகினர்.
நீதிபதிகள் தங்கள் உத்தரவில் சொல்லும்போது, "சவுதி அரேபிய நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், அங்கு சிறையில் உள்ளார். இந்த நீதிமன்றம் எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும்"? கைதியை இங்கே கொண்டுவர, 2 நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் உள்ளதா? என்பதையெல்லாம் பார்க்க வேண்டும்.. இதுகுறித்து மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலின் உதவியை பெறலாம்" என்றனர்.
எதிர்பார்ப்பு: இதையடுத்து, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலுக்கு, நோட்டீஸ்' வழங்க, மனுதாரர் தரப்புக்கு அனுமதி அளித்து, விசாரணையை நாளைக்கு, நீதிபதிகள் தள்ளி வைத்துள்ளனர்.. இதனால் இந்த வழக்கின் முடிவு என்ன ஆகப்போகிறதோ? என்ற எதிர்பார்ப்பு எகிறி வருகிறது.












Click it and Unblock the Notifications