கடலூர் பெரிய குப்பத்தில் அத்துமீறிய இளைஞர்கள்.. என்ன நடந்தது? செய்தியாளர்களிடம் விளக்கம் தந்த பெண்
கடலூர்: கடலூர் மாவட்டம் பெரிய குப்பத்தில் கடலில் குளித்துக் கொண்டிருந்த பெண்களிடம் போதையில் அத்துமீறியதாக மூன்று இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் பெரிய குப்பத்தில் கடலில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது போதையில் வந்த இளைஞர்கள்,கேலி கிண்டல் செய்ததுடன், தட்டிக்கேட்ட ஆண்களையும், பெண்களையும் தாக்கியதாக புகார் எழுந்தது. இதையடுத்து அந்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே புதுச்சத்திரம் அடுத்து உள்ளது பெரியக்குப்பம் கடற்கரை. இந்த கடற்கரை கடலூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலம் ஆகும். சிதம்பரத்தை சுற்றியுள்ள பகுதியில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்து செல்வது வழக்கமாக உள்ளது. அப்படி வருபவர்களில் பலர் கடலில் இறங்கி குளித்து மகிழ்வது உண்டு.

அதன்படி நேற்று முன்தினம் மாலை குறிஞ்சிப்பாடி பகுதியை சேர்ந்த முத்து, இவரது உறவினர் சத்தியமூர்த்தி ஆகியோர் மனைவி குழந்தைகளுடனும், சிதம்பரத்தை சேர்ந்த திருநங்கை யாழினி ஆகியோரும் கடற்கரைக்கு வந்துள்ளார்கள். அங்கு முத்து மனைவி பவானி, சத்தியமூர்த்தி மனைவி ஜஸ்வர்யா, திருநங்கை யாழினி ஆகியோர் கடலில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தனர். முத்து, சத்தியமூர்த்தி மற்றும் குழந்தைகள் கடற்கரையில் அமர்ந்திருக்கிறார்கள்.
அப்போது அங்கு மதுபோதையில் வந்த தியாகவல்லி லெனின்நகர் பகுதியை சேர்ந்த மாணிக்கவேல் (வயது 24), தினேஷ் (21), சரவணன் (22), பிரவீன் (24) உள்ளிட்ட சிலர் திடீரென கடலில் குளித்துக்கொண்டிருந்த பவானி, ஐஸ்வர்யா, யாழினி ஆகியோரிடம், வம்விழுத்து அத்துமீற முயன்றதுடன், கிண்டல் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதைக்கண்ட குழந்தைகள் கூச்சலிட்டார்கள்.
உடனே அங்கிருந்த முத்து, சத்தியமூர்த்தி ஆகிய இருவரும் ஓடிச்சென்று அந்த வாலிபர்களை கேள்வி கேட்டுள்ளனர். ஆனால் அவர்களை வாலிபர்கள் தாக்கினார்களாம். விலக்கிவிட வந்த பெண்களையும் தாக்கினார்களாம்..அதன்பின்னர் சண்டை தீவிரமான நிலையில், உள்ளூர் மக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போதை இளைஞர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
பின்னர் இது குறித்து பவானியின் கணவர் முத்து புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் மாணிக்கவேல் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் தினேஷ், மாணிக்கவேல் மற்றும் சரவணன் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் பெரியகுப்பம் கடற்கரையில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே கடலில் குளித்த போது என்ன நடந்தது என்பதுகு குறித்த குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த பவானி என்ற பெண் கூறுகையில், குறிஞ்சிப்பாடி அண்ணா நகரில் இருந்து வந்தோம். குழந்தைகளுக்கு நேற்று விடுமுறை என்பதால் பெரிய குப்பம் பீச்சில் குளிப்பதற்காக ஏழு பேர் வந்தோம்.. நாங்கள் குளித்துக் கொண்டிருந்த போதுதான் அவர்கள் குடித்துவிட்டு வந்தார்கள்..
அவர்கள் குளிக்க வருகிறார்களே என்று நாங்கள் வேகமாக மேலே வந்துவிட்டோம். அப்போது அவர்கள் நாங்கள் மேலே செல்வதை பார்த்து இன்னும் கிண்டல் செய்து கொண்டே இருந்தார்கள்.. இதனால் அவர்களிடம் இருந்து விலகியபடியே சென்றோம்.. ஒரு கட்டத்தில் எங்கள் வீட்டு ஆண்கள் அதை கேட்டனர். அவர்கள் ஏன் இப்படி கிண்டல் செய்கிறீர்கள் என்று கேட்க போனார்கள்.. அப்போது அந்த இளைஞர்கள் எங்களை தாக்க தொடங்கினார்கள்.. எங்கள் வீட்டு ஆண்களை அடிக்கிறார்களே என்று நாங்கள் விலக்கித்தான் விட்டோம்.. ஆனால் தாக்கினார்கள்" என்றார்.


Click it and Unblock the Notifications
