"கருங்காலி" ஓபிஎஸ் செய்த துரோகம் இருக்கே.. தொண்டர்கள் விட மாட்டார்கள்! டென்ஷனான சிவி.சண்முகம் தாக்கு
கடலூர்: அதிமுக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், ஓபிஎஸ் குறித்து மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
அதிமுக பொன் விழா நிறைவு விழா மற்றும் 51ஆவது ஆண்டு தொடக்க விழா தமிழ்நாடு முழுக்க நடைபெற்று வருகிறது. அதன்படி கடலூர் வானொலி திடலில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
சுமார் 3,000க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்ட இந்த கூட்டம் புவனகிரி எம்எல்ஏ அருண்மொழித் தேவன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்குச் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும் சி.வி சண்முகம் எம்பி கலந்து கொண்டார்.

சிவி சண்முகம்
இந்த நிகழ்ச்சியில் பேசிய ராஜ்யசபா எம்பி சிவி சண்முகம் பேசுகையில், "திமுக என்ற தீய சக்தியை ஒழிக்கவே அதிமுக என்ற இயக்கம் தொடங்கப்பட்டது. தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம் தான் அதிமுக.. 50 ஆண்டுக்கால வரலாற்றில், 32 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த இயக்கமாக அதிமுக உள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் அதிமுக இயக்கத்தைப் பிளவு படுத்தி விடலாம் எனக் கனவு காண்கிறார்.

அழிக்க முடியாது
அது ஒருபோதும் நடக்காது. அதிமுக இயக்கத்தில் உருவான கருங்காலி ஓபிஎஸ்.. அவர் இப்போது திமுக உடன் இணைந்து, அதிமுகவையே அழித்துவிடலாம் என நினைக்கிறார். இது தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம். யாராலும் அதிமுகவை அழிக்க முடியாது. தற்போது ஆட்சிக் கட்டிலில் உள்ள ஸ்டாலினைப் போல், அதிமுக ஆட்சியில் இருந்த போது ஜெயலலிதா நினைத்து இருந்தால், திமுக என்றோ அழிந்து போய் இருக்கும்.

கருங்காலி
ஓபிஎஸை முதலமைச்சர் ஆக்கியது அதிமுக தான். அப்படிப்பட்ட அதிமுக தொண்டர்களுக்குக் கோயிலாக இருக்கும் தலைமைக் கழகத்தை, திமுகவுடன் இணைந்து, போலீஸ் துணையுடன் உள்ளே புகுந்து, சூறையாடிச் சென்ற ஓபிஎஸ் ஒரு கருங்காலி.. ஒரு துரோகி! திமுகவிடம் இணைந்து அதிமுகவை முடக்கி விடலாம் என நினைத்தால் அதெல்லாம் நடக்கவே நடக்காது.. திமுக ஆட்சி முடிய 5 ஆண்டுகள் எல்லாம் காத்திருக்கத் தேவையில்லை.

திமுக மீது தாக்கு
திமுக ஆட்சி எப்போது முடியும் என்று திமுகவினரே புலம்பி வருகின்றனர். திமுக ஆட்சியில் ஒரே குடும்பம் தான் கொள்ளையடித்துக் கொண்டு இருக்கிறது. அவர்களுக்கே அடுத்த அதிமுக ஆட்சி தான் அமையும் என்று தெரிந்து இருக்கிறது. திமுக தலைவர் ஸ்டாலின் விளம்பரத்திலேயே குறியாக இருக்கிறார். அவருக்கு நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரிவதில்லை. இந்தளவுக்கு ஒரு நிர்வாகத் திறனற்ற முதலமைச்சரைத் தமிழ்நாடு பார்த்து இல்லை. ஸ்டாலின் ஒரு செயலற்ற முதல்வராகவே உள்ளார்..

வாக்குறுதி
உண்மையில் தமிழ்நாட்டை அவரது குடும்பம் தான் ஆண்டு கொண்டு இருக்கிறது. அவர்கள் மனைவி, மகன் தான் ஆட்சி செய்து வருகின்றனர். ஸ்டாலின் மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்கவில்லை.. தேர்தலில் கொடுத்த 525 வாக்குறுதிகளில் ஒன்றைக் கூடச் செய்யவில்லை.. வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றாலும் பரவாயில்லை. 10 ஆண்டுக்கால அதிமுக திட்டத்தைத் தொடர்ந்தாலே போதும். அதையும் செய்ய மறுக்கிறார். திமுக அமைச்சர்களைக் கண்டே பயந்து முதல்வர் தூக்கமின்றி தவிக்கிறார். இதை அவரே சொல்லியுள்ளார்.

அடுத்து பஸ் கட்டண உயர்வு?
அதிமுக ஆட்சியில் 46 லட்சம் பேருக்கு முதியோர் ஓய்வூதியம் கொடுக்கப்பட்ட நிலையில், இப்போது 5 லட்சம் பேருக்கு ஓய்வூதியத்தை நிறுத்தி உள்ளனர். இந்த விடியா ஆட்சியில் கட்டுமான பொருட்கள் விண்ணை முட்டும் அளவில் உயர்ந்துள்ளது.. மின்சார கட்டணம், கிராமப்புறங்களில் வீடுகளுக்கான சொத்து வரியும் உயர்த்தப்பட்டது.. அடுத்த பரிசாக பஸ் கட்டண உயர உள்ளது. பலாத்கார சம்பவங்கள் அதிகரித்து உள்ளன. பெண்களுக்கு இங்குப் பாதுகாப்பும் இல்லை.

விரைவில் தேர்தல்
தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் மருந்துகள் அதிகமாக உள்ளது. உயிர் காக்கும் மருந்துகள் கூட அரசு மருத்துவமனையில் இல்லை.. ஏழை எளிய மக்களுக்கான மருந்தைக் கொள்முதல் செய்வதை விடச் சுகாதாரத் துறை அமைச்சருக்கு வேறு என்ன வேலை உள்ளது.. அரசு மீது மக்களுக்கு உள்ள கோபத்தை மறைக்கவே இந்தி திணிப்பு போராட்டத்தைக் கையில் எடுத்து உள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் உடன் சட்டசபைத் தேர்தல் வரும் அப்போது மீண்டும் இங்கு அதிமுகவின் பொற்கால ஆட்சி அமையும்" என்று சிவி சண்முகம் சூளுரைத்தார்.












Click it and Unblock the Notifications