கடலூரில் இன்று தேமுதிக மாநாடு..மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 பிளான் இதுதான்! வேப்பூர் பிரம்மாண்டம்
கடலூர்: கடலூரில் தேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில், தேமுதிக எந்த அணியுடன் கூட்டணி அறிவிப்பை பிரேமலதா விஜயகாந்த் வெளியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இன்றைய மாநாட்டுக்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடந்து, வேப்பூர் பகுதியே கோலாகலமாக காணப்படுகிறது.
தற்போதைய சூழலில் தேமுதிக, அதிமுக - பாஜக தலைமையிலான கூட்டணியை நோக்கி செல்லும் வாய்ப்புகளே அதிகமாக இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

சீட் பகிர்வு, தேர்தல் செலவுகள், பிரச்சார வேலைப்பாடுகள் என பல அம்சங்களில் அந்த கூட்டணி தேமுதிகவுக்கு ஒப்பீட்டளவில் எளிதாக இருக்கும் என்ற கணக்கே இதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
இப்படிப்பட்ட சூழலில்தான் 2 நாட்களுக்கு முன்பு தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது, இதில் மாவட்ட செயலாளர்களிடம், யாருடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பது குறித்து ஒரு படிவம் கொடுக்கப்பட்டு, அதில் திமுக, அதிமுக, தவெக, மற்றவை என ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டு அதில் ஒன்றை தேர்வு செய்து அதற்கான காரணத்தையும் குறிப்பிட்டு சமர்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
அதன்படியே, மாவட்ட செயலாளர்களின் கருத்து தெரிவிப்பு படிவங்கள் அனைத்தும் ஒரு பெட்டியில் பெறப்பட்டது.. மாவட்ட செயலாளர்களிடம் துண்டு சீட்டு கொடுத்து கருத்து கேட்டதில், தேமுதிக மாவட்ட செயலாளர்களில் 60% திமுக கூட்டணிக்கு போகலாம் என்றும் 40% அதிமுக கூட்டணிக்கு போகலாம் என்றும் கூறியிருந்தார்களாம்.
கடலூரில் தேமுதிக கூட்டம்
அவர்களின் கருத்து அந்தந்த மாவட்ட மக்களின் கருத்து. அதன்படியே கூட்டணி குறித்து முடிவு செய்து 9 ஆம் தேதி கடலூர் மாநாட்டில் அறிவிக்க போவதாக கூறியிருந்தார்,
சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், கடலூரில் இன்று தேமுதிக மாநாட்டை நடத்துகிறது... வேப்பூர் அருகே உள்ள பாசார் கிராமத்தில் இந்த மாநாடு நடைபெற உள்ளது.. இந்த மாநாட்டில் தேமுதிக கூட்டணி குறித்து அறிவிக்க வாய்ப்பு உள்ளதால், இந்த மாநாடு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மாநாட்டிற்கான ஏற்பாடுகள் துரிதமாக நடந்து, சுமார் 150 ஏக்கரில் மாநாட்டு பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டிற்கு கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை தாங்கி, சிறப்புரையாற்றுகிறார்.
இன்று மாலை கட்சி கொடி ஏற்றம்
மாநாட்டின் நிகழ்ச்சி நிரலை தேமுதிக தலைமை கழகம் வெளியிட்டது... அதில், இன்று மதியம் 2.45 மணிக்கு மாநாட்டு திடலில் தேமுதிக கட்சி கொடி ஏற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது. கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மாநாட்டு திடலில் கட்சி கொடியை ஏற்றி வைக்கிறார்
மாலை 3.23 மணிக்கு பரத நாட்டியம் (டாக்டர் சுகந்தி), மாலை 3.28 மணிக்கு கேப்டனை பற்றிய கவிதை (மோனிகா ஸ்ரீ), மாலை 3.40 மணிக்கு கேப்டனின் சாதனை இன்னும் நிலைத்து இருக்க காரணம் சினிமாவா? அரசியலா? (பட்டிமன்றம்), மாலை 4.40 மணி கலை குழு நாராயணன் நடனம், மாலை 4.45 மணி பரத நாட்டியம் குழு (ஜெகதீஸ்வரி சசிதரன்), மாலை 4.55 மணி கிராமிய கலைமணி கே.பி.தங்கவேல் தப்பாட்டக் கலைக்குழு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
தொடர்ந்து மாலை 5.10 மணி கானா பாலா பாடும் பாடல், மாலை 5.20 மணி கலை குழு நாராயணன் நடனம். மாலை 5.25 பவித்ரா பாடல், மாலை 5.30 மணி கலை குழு நாராயணன் நடனம், மாலை 5.35 மணி செந்தில் ராஜலெட்சுமி பாடல் கச்சேரி, மாலை 5.55 மணி பொட்டு வச்ச தங்கக்குடம் நடனம் பாடல் (கலை குழு நாராயணன்), மாலை 6 மணி கேப்டன் தோற்றம் போல் நடனம் (கலை குழு நாராயணன்) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டணி யாருடன்
இதன்பிறகே மாலை 6 மணிக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் மாநாடு தொடங்குகிறது. இந்த மாநாட்டில் அரசியல் நிலவரம், தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. அதன்பிறகு பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதுடன், வர இருக்கும் சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு வெளியிடுவார் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications