கடலூரில் போலீசாரையே அரிவாளால் வெட்டிய போதை கும்பல்.. சுட்டுப்பிடித்த காவல்துறை.. பரபர தகவல்
கடலூர்: கடலூரில் போதை கும்பல் 3 பேர் காவலாளி ஒருவரை அடித்து தாக்கி இன்ஸ்டாவில் வீடியோவாக எடுத்து வெளியிட்டதோடு, அடுத்தடுத்து பல இடங்களில் தகராறு செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து தனிப்படை அமைத்து போதை கும்பலை போலீசார் தேடி வந்தனர். இதில் அந்த கும்பல் போலீசாரையும் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓட முயன்றதால் போலீசார் துப்பாக்கியால் காலில் சுட்டு பிடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் போதை கும்பல் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருவதாக தொடர்ந்து போலீசுக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. மூன்று பேர் கொண்ட கும்பல் கடைகள், தனியாக இருப்பவர்களை தாக்கி ரவுடித்தனம் செய்து வருவதாக புகார்கள் வந்தன.

கடலூர் விருத்தாசலம் பழமலைநாதர் நகரை சேர்ந்த 45 வயது நபர் கார்த்திக். இவர் அருகே உள்ள திருமண மண்டபத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன் தினம் அவர் பணியில் இருந்தபோது, திடீரென மூன்று பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக தாக்கியது. மேலும் கடப்பாறை உள்ளிட்ட ஆயுதங்களால் கார்த்திக்கையை தாக்கி, இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ்-ஆக பதிவு செய்து வெளியிட்டனர்.
கார்த்திக் ரத்த வெள்ளத்தில் படுகாயத்துடன் கிடந்தபோதும் அந்த கும்பல் விடாமல் தாக்கினர். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் ஓடி வந்த நிலையில் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. படுகாயமடைந்த கார்த்திக் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதையடுத்து அங்கிருந்து சென்ற கும்பல், அந்த வழியாக சென்ற ஆம்புலன்சை பின்தொடர்ந்தனர். அப்போது மருத்துவமனைக்குள் செல்ல விடாமல் தடுத்த காவலாளிகளிடமும் தகராறில் ஈடுபட்டனர். பின்னர் அங்கிருந்து சென்று அருகில் உள்ள பெட்டிக்கடை வைத்திருந்த நபரிடம் தகராறு செய்து, அந்த கடையில் இருந்த பொருட்களை சேதப்படுத்தினர்.
மேலும், கடை உரிமையாளர் சுந்தரமூர்த்தியை தாக்கியதுடன், அதனை தடுக்க வந்த மற்றொரு வியாபாரி ராஜேந்திரனையும் தாக்கி, அவரது கடையை சூறையாடினர். இதோடு மட்டும் இல்லாமல், கள்ளக்குறிச்சியில் இருந்து விருத்தாசலத்துக்கு சென்ற அரசு பஸ்சில் ஏறிய அந்த கும்பலினர், பஸ் டிரைவரை தாக்கினர். சின்னசேலத்தை சேர்ந்த பஸ் டிரைவர் கணேசனை தாக்கி, அவரது தலையில் பீர் பாட்டிலை உடைத்து படுகாயமடையச் செய்தனர்.
தொடர்ந்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. இதில் படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது தொடர்பாக விருத்தாசலம் போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார் அந்த மூன்று பேர் கும்பலை கண்டுபிடித்தனர். இதில் பழமலைநாதர் நகரை சேர்ந்த கந்தவேல் (21), சிவா என்கிற விக்னேஷ் (21), பாலாஜி ஆகியோர் என்பது தெரியவந்தது.
இது குறித்து கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவர் தனிப்படை அமைத்து போதை கும்பலை பிடிக்க உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது மூன்று பேர் கும்பலும் பெரியகண்டியாங்குப்பம் ரயில்வே கேட் அருகே பதுங்கி இருப்பது தெரியவந்தது.
அங்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார் அவர்களை மடக்கிப் பிடிக்க முயற்சித்தனர். ஆனால் அந்த கும்பலினர் போலீஸ்காரர் வீரமணி மற்றும் வேல்முருகன் ஆகியோரை கையில் அரிவாளால் வெட்டி விட்டுத் தப்பி ஓட முயன்றனர். இதனால் தற்காப்புக்காக போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு, துப்பாக்கியால் கந்தவேலின் காலில் சுட்டார். இதில் காலில் குண்டு பாய்ந்து அவர் அங்கேயே சுருண்டு விழுந்தார்.
மேலும் ஒருவர் ரயில்வே கேட்டை கடக்க முயன்றபோது காயமடைந்து போலீசில் சிக்கிக்கொண்டார். இன்னொருவர் தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து காயமடைந்தவர்களை போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர். போதை கும்பல் செய்த இந்த கொடூர தாக்குதல் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications