தீட்சிதர்கள் எதிர்ப்புக்கிடையே.. சிதம்பரம் நடராஜர் கோவில் நகைகளை ஆய்வு செய்யும் அறநிலைய அதிகாரிகள்
கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் குழு ஆய்வு மேற்கொண்டுள்ளனர். தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஜோதி தலைமையில் இன்று நகைகளைக் கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது.
Recommended Video
சிதம்பரம் நடராஜர் கோவிலின் கணக்குகளை ஆய்வு செய்ய இந்து அறநிலையத்துறை முடிவு எடுத்தபோது, கோவில் தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு குறித்து பொதுமக்களிடம் கேட்ட கருத்துகளின் அடிப்படையில் விளக்கம் அளிக்கக்கோரி தீட்சிதர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இந்நிலையில், விளக்கம் தர கேட்கப்பட்ட 27 கேள்விகளுக்கும் சிதம்பரம் நடராஜர் கோவிலின் பொது தீட்சிதர்கள் விரிவான விளக்கமளித்து பதில் அனுப்பியுள்ளனர். அதில், சிதம்பரம் கோவில் நிதி முறையாக பயன்படுத்தப்படுவதாகவும், கோவில் நிதியை பயன்படுத்தி இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் சட்டவிரோதமாக செயல்படுவதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு ஆதரவாக வரப்பெற்ற ஆயிரக்கணக்கான கடிதங்களை இந்து சமய அறநிலையத்துறை வெளியிட வேண்டும் என தீட்சிதர்கள் வலியுறுத்தியுள்ளனர். வருகிற 22 ஆம் தேதி நகை சரிபார்ப்பு ஆய்வுக்கு வரும் அதிகாரிகளுக்கு சிதம்பரம் நடராஜர் கோவில் சார்பாக முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் எனவும் பொது தீட்சிதர்கள் சார்பாக இந்து சமய அறநிலையத்துறைக்கு பதில் அனுப்பியிருந்தனர்.
இந்த நிலையில் இன்று சிதம்பரம் நடராஜர் கோவில் நகைகளை ஆய்வு செய்ய ஆறு பேர் கொண்ட குழுவினர் கோவிலுக்கு வந்துள்ளனர். திருவண்ணாமலை இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் குமரேசன், கடலூர் துணை ஆணையர் ஜோதி, விழுப்புரம் துணை ஆணையர் சிவலிங்கம் தலைமையில் நகை மதிப்பீட்டாளர்கள் தர்மராஜன், குமார், குரு மூர்த்தி ஆகிய மூவரும் வந்துள்ளனர்.
பாதுகாப்பு காரணங்களுக்காக கோவிலில் நகைகளை வைத்திருக்கும் அறைக்கு அருகே யாரையும் அனுமதிக்கவில்லை. தீட்சிதர்கள், நகைகளை கணக்கெடுக்க வந்துள்ள அறநிலையத்துறை அதிகாரிகளை மட்டுமே அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கோவில் பாதுகாப்பு குழுவில் உள்ள 20 பேரிடம் 20 சாவிகள் உள்ளன. அந்த சாவிகளைக் கொண்டு நகைகள் வைத்திருக்கும் அறையை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சற்று நேரத்தில் நகைகளை கணக்கெடுக்கும் பணி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிதம்பரம் நடராஜர் கேவிலில் கடந்த 2005ஆம் ஆண்டு நகைகள் மதிப்பிடப்பட்டன. 17 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் நகைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications