சுவாமி சகஜானந்தா பிறந்தநாள்.. ஆளுநர் ரவி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சிதம்பரத்தில் கருப்புக்கொடி!
கடலூர்: கல்வித்தந்தை சகஜானந்தாவின் பிறந்தநாள் விழா கூட்டத்துக்கு வரும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து சிதம்பரத்தில் திமுக, சிபிஐஎம், சிபிஐ, விசிக உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சியினர் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 100 ஆண்டுகளுக்கு முன் சிதம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் திண்ணை பள்ளிகளை ஆரம்பித்து ஏழை மக்களுக்குக் கல்வியை கற்பித்து சமூக மாற்றத்திற்கு போராடியவர் சுவாமி சகஜானந்தா. அப்பகுதி மக்களிடம் யாசகம் பெற்று கல்வி கற்க வரும் மாணவர்களுக்கு உணவு வழங்கி கல்வியை வழங்கி வந்தார்.

பின்னர் 1916-ஆம் ஆண்டு சிதம்பரம் அருகே ஆதிதிராவிடர் சமூக நாயன்மார்களில் ஒருவரான நந்தனார் பெயரில் ஓமக்குளத்தில் தொடக்க பள்ளியைத் தொடங்கினார். அதனைத் தொடர்ந்து அரசு நந்தனார் பெயரில் மேல்நிலைப்பள்ளி கட்டப்பட்டது. தமிழகத்தின் தலைசிறந்த கல்வி நிறுவனமாகத் திகழும் இந்தப் பள்ளியில் அனைத்து சமூகத்தைச் சார்ந்த பல்வேறு அரசியல் தலைவர்கள், பல லட்சம் பட்டதாரிகள் உருவாகியுள்ளனர்.
இந்நிலையில், சுவாமி சகஜானந்தாவின் 135வது பிறந்தநாள் விழா இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, சுவாமி சகஜானந்தா பிறந்தநாள் விழா கூட்டத்தில் பங்கேற்க இன்று சிதம்பரம் வருகை தருகிறார். இதற்கு சிபிஐஎம், சிபிஐ, விசிக, மதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.
சனாதன கொள்கையை உயர்த்தி பிடிக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அனைத்து சமூக மக்களோடும் இணக்கமாகவும் அவர்களின் கல்வி உயர்வுக்காகவும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்விக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்த சுவாமி சகஜானந்தா அவர்களை களவாட முயற்சிப்பது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது என நேற்று சிதம்பரத்தில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்வி உரிமைகளை வழங்காத சனாதன சக்திகளின் குரலாக ஒலிக்கின்ற ஆளுநர் ஆ.என் ரவி, சிதம்பரத்தில் நடைபெறும் சுவாமி சகஜானந்தாவின் பிறந்தநாள் விழா கூட்டத்திற்கு வருகை தருவதை அனைத்துக் கட்சிகள் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம் எனத் தெரிவித்தனர்.
இந்நிலையில், ஆளுநரை கண்டித்து சிதம்பரம் காந்தி சிலை அருகில் இன்று இந்தியா கூட்டணிக் கட்சிகளின் சார்பில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆளுநருக்கு எதிராக முழக்கமிட்டு, தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications