சமூக வலைத்தளத்தில் அறிமுகம்..சீன பெண்ணை கரம் பிடித்த கடலூர் இளைஞர்..தமிழ் முறைப்படி நடந்த டும் டும்!
கடலூர்: கடலூரை சேர்ந்த இளைஞர் ஒருவர் சீன பெண்ணை காதலித்து கரம்பிடித்துள்ளார். சமூக வலைத்தளம் மூலம் கிடைத்த அறிமுகத்தினால் நட்பாக பழகி பின்னர் காதலித்துள்ளனர். இவர்களது திருமணம் தமிழ் கலாசாரப்படி நடந்தது.
சமூக வலைத்தளங்கள் மூலம் தற்போது உலகில் எந்த மூலையில் இருக்கும் நபர்களுடனும் எளிதில் தொடர்பு வைத்துக் கொள்ள முடிகிறது.

முன்பின் தெரியாதவர்களிடம் கூட சில நேரங்களில் பழக்கம் ஏற்பட்டு நேரில் பழகும் அளவுக்கு நட்பை வளர்த்து கொள்கிறார்கள்.
காதலாக மாறிய நட்பு:சில நேரங்களில் சமூக வலைத்தளங்களின் மூலம் பழகியவர்கள் நெருக்கமாகி காதலர்களாக மாறி திருமணம் செய்து கொள்ளும் சம்பவங்கள் கூட அவ்வப்போது நடப்பதை கேள்வி பட்டு இருக்கிறோம். அதே போன்ற ஒரு சுவாரசிய நிகழ்வுதான் கடலூரில் நடைபெற்றுள்ளது. கடலூரை சேர்ந்த இளைஞர் ஒருவர் சீன பெண்ணை சமூக வலைத்தளம் மூலம் காதலித்து பின் கரம் பிடித்துள்ளார்.
தமிழ் பாரம்பரிய முறைப்படி இந்த திருமணம் நடைபெற்றுள்ளது. கடல் கடந்த இந்தக் காதல் குறித்த விவரம் வருமாறு: - கடலூர் மாவட்டம் மஞ்சக் குப்பம் மேற்கு வேணுகோபாலபுரம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மகனான பாலசந்தர் வணிக மேலான்மை படிப்பை முடித்து விட்டு நியூசிலந்து நாட்டில் தொழில் முனைவோராக இருக்கிறார். இவருக்கும் சீனாவை சேர்ந்த யீஜியோ என்பவருக்கும் சமூக வலைத்தளம் மூலம் பழக்கம் ஏற்பட்டது.

அடிக்கடி பேசி வந்த இவர்கள் நல்ல நண்பர்களும் ஆகினர். நாளைடைவில் நட்பு காதலாக மாறியது. தொடர்ந்து இருவரும் நேரிலும் சந்தித்து பேசினர். அதன்பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என்று இருவருமே முடிவு செய்து தங்கள் பெற்றோரிடம் தங்கள் விருப்பத்தை தெரிவித்தனர். பெற்றோரும் இந்த தேசம் கடந்த காதலுக்கு சம்மதம் தெரிவித்தனர்.
தமிழ் கலாசாரப்படி நடந்த திருமணம்:தமிழ் கலாசார முறைப்படி தனது திருமணம் நடைபெற வேண்டும் என்று சீனாவை சேர்ந்த மணப்பெண் யீஜியோ விரும்பினார். தனது காதலியின் விருப்பத்தை பாஸ்கரும் ஏற்றுக்கொண்டார். இதன்படி, இந்த காதல் ஜோடியின் திருமணம் கடலூர் முதுநகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
சீன நாட்டை சேர்ந்த மணமகள் யீஜியோ தமிழ் கலாசார படி, பட்டுசேலை, நகைகள் அணிந்து வந்திருந்தார். மணமேடையில் வேத மந்திரங்கள் முழங்க மணமகன் மணப்பெண்ணின் கழுத்தில் மூன்று முடிச்சி போட்டார். திருமணத்தில் கலந்து கொண்ட உற்றார், உறவினர்கள் மணமக்களை வாழ்த்தினர்.

இந்த திருமணம் குறித்து மணமகன் பாலசந்தர் கூறுகையில், "நியூசிலாந்து நாட்டில் தொழில்முனைவோராக இருக்கிறேன். சமூக வலைத்தளம் மூலமாக யீஜியோவின் அறிமுகம் எனக்கு கிடைத்தது. பின்னர் சீனாவிற்கு சென்று அவரை சந்தித்து பேசினேன். எங்களுக்குள் நல்ல புரிதல் இருந்ததால் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தோம்" என்றார்.












Click it and Unblock the Notifications