ஆளுநர் ரவிக்கு “கருப்புக்கொடி” காட்டிய மார்க்சிஸ்ட்! சிதம்பரம் நடராஜர் கோவில் அருகே பரபர
சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கம்யூனிஸ்டு தலைவர் கார்ல் மார்க்ஸ் குறித்த அவரது கருத்தை கண்டித்து அவர்கள் முழக்கம் எழுப்பினர்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று சென்னையிலிருந்து புறப்பட்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சிதம்பரம் சென்றார். நேற்று நாட்டியாஞ்சலி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அவர், இன்று காலை சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சென்றார்.
காலை 7 மணியளவில் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றார். ஆளுநர் வருகையை முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் கோயில் சுற்றுவட்டாரத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

கருப்புக் கொடி போராட்டம்
இந்த நிலையில் ஆளுநர் ரவி கோயிலுக்கு வரும்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆளுநர் ஆர்.என்.ரவி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏராளமான கட்சி நிர்வாகிகளில் மார்க்ஸ் குறித்த ஆளுநரின் கருத்தை கண்டித்து பதாகைகளையும், கருப்புக் கொடி மற்றும் கட்சிக் கொடிகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

என்ன பேசினார் ஆளுநர்?
75 ஆண்டுகளுக்கு பிறகும் பலர் இந்தியாவில் ஏழைகளாக உள்ளதற்கும் மேற்கத்திய கலாச்சாரம் மற்றும் மேற்கத்திய மனநிலையை பின்பற்றுவதே காரணம். கடந்த சில நாட்களுக்கு முன் ஆளுநர் ரவி பேசுகையில், "இந்தியாவின் சமூக கோட்பாடுகளை சிதைக்க வேண்டும் என கார்ல் மார்க்ஸ் கட்டுரை எழுதியுள்ளார். இந்தியாவை கார்ல் மார்க்ஸின் சிந்தனை சிதைத்தது. இன்று மார்க்ஸின் தத்துவம் புறந்தள்ளப்பட்டு உள்ளது என்று தெரிவித்தார்.

கே.பாலகிருஷ்ணன் கண்டனம்
இதுகுறித்து ட்விட்டரில் கண்டனம் தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், "ஆளுநரின் அடாவடித்தனமான பேச்சு! ஆர்.என். ரவி செல்லுமிடம் எல்லாம் கருப்புக் கொடி காட்டும் போராட்டம். முதல் கட்டமாக பிப்ரவரி 28 அன்று ஆளுநர் மாளிகை முன்பு கருப்புக் கொடி போராட்டம்.

மார்சை கடிக்க ஆரம்பித்துள்ளார்
தமிழ்நாட்டில் ஆளுநராக ஆர்.என். ரவி பதவியேற்றதிலிருந்து மாநில உருவாக்கத்தை கடித்து, மாநிலத்தின் பெயரைக் கடித்து, அரசமைப்புச் சட்டத்தின் விழுமியங்களைக் கடித்து, இப்போது மார்க்சையும், டார்வினையும் கடிக்க ஆரம்பித்திருக்கிறார். செக்கு என்றும், சிவன் என்றும் தெரியாமல் நடந்து கொள்வதைப் போல ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் மார்க்சையும், மார்க்சியத்தையும் சாடியிருக்கிறார்.

ஞானபீடம்
அறிவில் அந்நிய அறிவு, உள்ளூர் அறிவு என்றும் கிடையாது. சொல்லப்போனால் ஆர்.என்.ரவி அவர்களின் ஞான பீடம் ஒரே கொடி, ஒரே தலைவர், ஒரே நாடு என்கிற உதவாக்கரை தத்துவத்தையும், சாகாவையும் பாசிஸ்ட் முசோலினியிடமிருந்தும், கொடி வணக்கம், மார்பில் கை வைத்து வணங்கும் முறை, சுவஸ்திக் ஆகியவற்றை ஹிட்லிரிடமிருந்தும் கடன்பெற்றுக் கொண்ட அமைப்பு. இன அழிப்புக் கொள்கைக்கு ஹிட்லரை முன்னோடியாக கொள்ள வேண்டும் என ஜெர்மன் நாஜியை குருவாக ஏற்றுக்கொண்ட அமைப்பு.

ஆர்எஸ்எஸ் சார்ந்த ஆர்.என்.ரவி
தத்துவம், நடைமுறை என அனைத்தையும் ஐரோப்பாவிலிருந்து கடன் வாங்கிக் கொண்ட ஆர்எஸ்எஸ் சார்ந்த ஆர்.என்.ரவி மார்க்சியத்தை அந்நிய தத்துவம் என்று பேசுவது அறியாமையையே காட்டுகிறது. மனித குல வரலாற்றில் ஆளும் வர்க்கத்தின் சுரண்டல், ஒடுக்குமுறை கொடுமைகளில் இருந்து உழைப்பாளி வர்க்கத்தை மீட்டு சுரண்டலற்ற பொதுவுடமை சமூகத்தை அமைக்க வழிவகுக்கும் மார்க்சிய சித்தாந்தத்தை விமர்சிப்பதன் மூலம் ஆளுநர் ரவி தான் ஆளும் வர்க்கத்தின் ஏஜெண்ட் என்பதையே வெளிப்படுத்தியுள்ளார்.

தடுப்பு மருந்து
மார்க்சியம் இந்தியாவை சிதைத்து விட்டது என்று பேசுகிறார். பெருநோய்களை சிதைக்கும் தடுப்பு மருந்துகளை தவறானது என்று யாரும் பேச மாட்டார்கள். உலகத்தை அதன் அனைத்து விதமான கோரங்களிலிருந்தும் மீட்டெடுத்து அனைவருக்குமான பூமியாக மாற்றுவதே மார்க்சியத்தின் நோக்கம். அது சிதைக்கும் தத்துவமல்ல. அது செதுக்கும் தத்துவம். அறிவுச் சிதைவு ஏற்பட்டவர் மட்டுமே அதை சிதைக்கும் தத்துவமாக கருதுபவர்கள்.

அடாவடித்தனம்
ஆர்.என். ரவி அரசு அதிகாரத்தை பயன்படுத்திக் கொண்டு அடாவடித் தனமாகவும், பொருத்தமற்ற முறையிலும் பேசுவதை கண்டித்தும், மார்க்சியம் குறித்து அவதூறாக பேசியதற்கு வருத்தம் தெரிவிக்க வலியுறுத்தியும் அவர் செல்லுமிடம் எல்லாம் கருப்புக் கொடி ஏந்தி எதிர்ப்பை தெரிவிப்பது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது." என்று பதிவிட்டு இருந்தார்.












Click it and Unblock the Notifications