அமைச்சர் பதவி எனக்கு முக்கியமில்லை! நீட் விலக்கு விவகாரத்தில் உறுதியாக நிற்கும் உதயநிதி ஸ்டாலின்!
கடலூர்: அமைச்சர் பதவி தனக்கு முக்கியமில்லை என்றும் நீட் தேர்வு விலக்குக்காக தொடர்ந்து போராடுவேன் எனவும் உதயநிதி ஸ்டாலின் பேசியிருக்கிறார்.
நீட் தேர்விலிருந்து விலக்கு பெற ஒரு உதயநிதி போராடினால் போதாது இளைஞரணியில் உள்ள ஒவ்வொரு நிர்வாகியும் உதயநிதியாக மாறி போராட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். கடலூரில் திமுக இளைஞரணி நிர்வாகிகள் மத்தியில் பேசும் போது இவ்வாறு கூறியுள்ளார்.

நீட் தேர்விலிருந்து விலக்கு கோரி திமுக சார்பில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்ற போது பலரும் நீங்கள் பங்கேற்றால் உங்கள் பதவிக்கு சிக்கல் வரும் எனக் கூறியதாகவும் ஆனால் பதவியை பற்றி தாம் பொருட்படுத்தவே இல்லை எனவும் தெரிவித்தார்.
மாணவர்களின் உயிர் தான் தனக்கு முக்கியம் என்றும் இந்த அமைச்சர் பதவி பறிபோய்விடுமோ என்ற அச்சப்படக் கூடிய ஆள் தாமில்லை எனவும் போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்துள்ளார். இதன் மூலம் நீட் விலக்கு கோரி அடுத்தடுத்த போராட்டங்களை திமுக முன்னெடுக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே நீட் தேர்விலிருந்து விலக்கு கோரும் விவகாரத்தில் தாம் இன்னும் உறுதியாக உள்ளதை உணர்த்தியுள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். கடந்த தேர்தலின் போது நீட் விலக்கு குறித்த வாக்குறுதியை அளித்ததால் அதனை நிறைவேற்ற வேண்டும் என்பதில் உதயநிதி உறுதியாக உள்ளார்.
நீட் தேர்வில் விலக்கு கோரி விரைவில் திமுக சார்பில் டெல்லியில் உண்ணாவிரத போராட்டம் நடந்தாலும் ஆச்சரியப்பட எதுவுமில்லை.












Click it and Unblock the Notifications