கொள்ளையனை சுட்டுப் பிடித்த சிதம்பரம் போலீஸ்.. கடந்த 24 மணி நேரத்தில் 6 பேர் சுட்டுப்பிடிப்பு!
கடலூர்: கடலுார் மாவட்டம் சிதம்பரம் சத்திரப்பாடியில் போலீசாரை கத்தியால் தாக்கிவிட்டு தப்ப முயன்ற குமரி மாவட்ட கொள்ளையன் ஸ்டீபன் சுட்டுப் பிடிக்கப்பட்டார். திருட்டு குறித்து விசாரிக்கச் சென்றபோது இச்சம்பவம் நடந்துள்ளது. இவர் மீது 25-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கடலுார் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை நகரில் நடைபெற்ற திருட்டு சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரிக்கச் சென்றுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்டீபன் என்ற கொள்ளையன் சிதம்பரம் அருகே 10 சவரன் நகை, லேப்டாப், ரூ.50 ஆயிரம் ரொக்கத்தை திருடி உள்ளார். திருடப்பட்ட நகைகளை சித்தாலபாடி சாலையோரம் முட்புதரில் பதுக்கி வைத்துள்ளார்.

நகைகளை மீட்கச் சென்ற போலீசாரை தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தாக்கி விட்டு கொள்ளையன் ஸ்டீபன் தப்பி ஓட முயற்சி செய்துள்ளார். அப்போது போலீசார் திருடனை துப்பாக்கியால் காலில் சுட்டுப் பிடித்தனர். இதில் ஸ்டீபனின் கால் முட்டியில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது.
ஸ்டீபன் மீது கன்னியாகுமரி, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் 25க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. கொள்ளையன் சுட்டுப் பிடிக்கப்பட்ட சம்பவம் சிதம்பரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று முதல் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும், குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் சுட்டுப் பிடிக்கப்பட்டு வருகின்றனர். ஈரோட்டில் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் காலில் சுட்டுப் பிடித்தனர். அதேபோல நெல்லையில் ஓய்வு பெற்ற எஸ்.ஐ வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் முக்கிய குற்றவாளி சுட்டுப் பிடிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழக காவல்துறையினர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 6 பேரை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications