ஒரு சிறுத்தைக்காக 2 சிங்கங்கள் களத்தில்.. சிதம்பரத்தில் அமைச்சர்களை புகழ்ந்த ஸ்டாலின்!
கடலூர்: சிதம்பரத்தில் இன்று திருமாவளவனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த முதலமைச்சர் ஸ்டாலின், "ஒரு சிறுத்தைக்காக இரண்டு சிங்கங்களை களத்தில் இறக்கி விட்டுள்ளேன்" எனப் பேசினார்.
சிதம்பரத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பரப்புரை க்கூட்டத்தில் சிதம்பரம் தொகுதி வேட்பாளரும், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவருமான தொல் திருமாவளவன் மற்றும் மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வழக்கறிஞர் சுதா ஆகியோருக்கு வாக்கு சேகரித்து உரையாற்றினார் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின். அப்போது பேசிய ஸ்டாலின், அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், எஸ் எஸ் சிவசங்கர் ஆகியோரை சிங்கங்கள் எனக் குறிப்பிட்டு பேசினார்.

திருமா பற்றி ஸ்டாலின்: முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், "சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும், தலைவர் கலைஞரின் நெஞ்சுக்கினிய நண்பர், என் பாசமிகு சகோதரர், வெற்றி வேட்பாளர், எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் தி.மு.க.வில் பயின்று, வி.சி.க என்ற இயக்கமாக இன்று வளர்ந்திருக்கிறார். அவர் மட்டும் வளரவில்லை, இயக்கத்தில் இருக்கும் ஒவ்வொரு சகோதர சகோதரிகளையும் முன்னேற்றப் பாதையில் வழிநடத்திச் செல்கிறார். அதனால்தான், தலைவர் கருணாநிதி, சகோதரர் திருமாவளவனை 'மேஜர் ஜெனரல்' என்று பாராட்டினார்.
ஒரு சிறுத்தைக்காக இரண்டு சிங்கங்கள்: நாடாளுமன்றத்தில் ஒலிக்கும் அவரின் குரல்; தமிழ்நாட்டின் உரிமைக்குரல்! மொழிக்கும், இனத்துக்கும், நாட்டுக்கும், மக்களுக்கும் ஒரு ஆபத்து என்றால், களத்திற்கு முதலில் வரும் சகோதரர் திருமா அவர்களுக்குப் பானை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். திருமாவை வெற்றி பெற வைக்க, வேங்கையின் மைந்தன் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தையும், அரியலூர் அரிமா எஸ்.எஸ்.சிவசங்கரையும் களத்தில் இறக்கிவிட்டுள்ளேன். ஒரு சிறுத்தைக்காக இரண்டு சிங்கங்கள் களத்தில் இருக்கின்றன.
மயிலை - சுதா: அதேபோல், மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் வழக்கறிஞர் சுதா அவர்களுக்குக் கை சின்னத்தில் உங்களின் வாக்குகளை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
வழக்கறிஞர் சுதா, தொலைக்காட்சி விவாதங்களில் வாதாடுவதைப் பார்த்திருப்பீர்கள்! மக்களுக்காகவும் - இந்திய ஒற்றுமைக்காகவும் ஆணித்தரமான கருத்துகளால் எதிரிகளை நிலைகுலையச் செய்யும் ஆற்றல் பெற்றவர்! அவரின் வாதத்திறமை, நாடாளுமன்றத்திலும் ஒலிக்க, வழக்கறிஞர் சுதா அவர்களுக்கு, மயிலாடுதுறை தொகுதி மக்கள் கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்." என்றார்.
நீங்க எம்.பி தான் போய் உட்காருங்க: மேலும் பேசிய ஸ்டாலின், "தயாராகிவிட்டீர்களா? நீங்கள் மட்டுமல்ல, இந்த ஸ்டாலினின் தூதுவர்களாக, உங்கள் பகுதியில் இருக்கும் மக்களிடமும் இந்தியா கூட்டணிக்கு மாபெரும் ஆதரவைத் திரட்ட வேண்டும்! அதன்மூலம், சகோதரர் திருமா அவர்களையும், சகோதரி சுதா அவர்களையும் வெற்றி பெற வைக்க வேண்டும்! வெற்றி பெற வைப்பீர்களா? இதற்குப் பிறகு என்ன? வேட்பாளர்கள் எம்.பி. ஆகிவிடுவீர்கள், இப்போது உட்காருங்கள்!" என்று பேசினார் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications