கடலூரில் தனியார் பள்ளி பேருந்து மோதி விபத்து.. 3 வயது சிறுவன் பலி! கண்ணீர் விட்டு கதறும் பெற்றோர்!
கடலூர்: தனியார் பள்ளி பஸ் மோதியதில் கடலூரில் மூன்று வயதுக் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இந்தச் சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் பள்ளி பேருந்துகளுக்கு என்று தனியாக விதிமுறைகள் உள்ளன. பள்ளி வாகனம் என்ற பெரிய எழுத்து வாகனத்தின் முன் மற்றும் பின்புறம் எழுதப்பட்டிருக்க வேண்டும் உட்பட பல விதிமுறைகள் உள்ளன.
மேலும், பள்ளி பேருந்து ஓட்டுநர்களுக்கும் பல நிபந்தனைகள் உள்ளன. இருப்பினும், இந்த விதிமுறைகளை பெரும்பாலான பள்ளிகள் பின்பற்றுவதில்லை என்று விமர்சனம் இருந்து கொண்டே இருக்கிறது.

கடலூர்
இதற்கிடையே கடலூரில் பள்ளி வாகனம் மோதியதில் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் மேற்கு ராமாபுரம் கிராமத்தில் தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. ராமபுரம் கிராமத்தைச் சேர்ந்த தம்பதி சீனிவாசன் - தீபா. இவர்களுக்கு தேஜேஸ்வரன் என்று மூன்று வயதில் ஆண் குழந்தை இருந்துள்ளார். மேலும், இவர்களுக்குச் சமீபத்தில் சில மாதங்களுக்கு முன்பு தான் பெண் குழந்தை ஒன்றும் பிறந்துள்ளது.

தனியார் பஸ் விபத்து
அவர்கள் கிழக்கு ராமாபுரத்தில் உள்ள பாட்டி வீட்டிற்குச் சென்றுள்ளனர். இன்று காலை சிறுவன் தேஜேஸ்வரன் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது அந்த சிறுவன் சாலைக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது யாரும் எதிர்பாராத விதமாகச் சிறுவன் மீது அந்த வழியாக வந்த தனியார் பள்ளி பேருந்து மோதியுள்ளது. சிறுவன் மீது பேருந்து மோதியதில் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

உயிரிழப்பு
மூன்று வயது சிறுவன் மீது வண்டியை மோதிய அந்த டிரைவரை அக்கம் பக்கத்தினர் பிடிக்க முயன்றுள்ளனர். இருப்பினும், அவர் உடனடியாக அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சிறுவன் தேஜேஸ்வரனின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காகக் கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் குழந்தையின் உடலைப் பார்த்துப் பெற்றோரும், கிராம மக்களும் கதறி அழுதனர்.

வழக்குப்பதிவு
இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார், தலைமறைவான ஓட்டுநரைத் தேடி வருகின்றனர். இதுபோல பேருந்து விபத்துகளைத் தவிர்க்கத் தமிழக அரசு பல்வேறு விதிமுறைகளை வெளியிட்டிருந்தது. அதாவது பள்ளி வாகனம் இயக்குபவர்கள் கனரக ஓட்டுநர் உரிமம் பெற்று, குறைந்தது 10 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். ஒவ்வொரு வாகனத்திற்கும் தகுதி வாய்ந்த உதவியாளர் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று விதிகள் தெளிவாகக் கூறுகிறது.

விதிமுறைகள்
மேலும், உதவியாளர் இல்லாமல், வாகனத்தை இயக்கக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு பள்ளி வாகனத்திலும், ஆசிரியர் நிலையில் ஒருவர் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் இருக்க வேண்டும் என்றும் வாகன ஒட்டுநரின் உரிமத்தினை பள்ளி நிர்வாகங்கள் அவ்வப்போது, சரிபார்த்து அவை காலாவதியாவதற்கு முன்பே உரிமத்தைப் புதுப்பிக்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த விதிகளைப் பல பள்ளிகள் முறையாகப் பின்பற்றுவதில்லை என்ற புகாரும் உள்ளது.












Click it and Unblock the Notifications