வேல்முருகனின் வெற்றி நிச்சயம் அசாத்தியமானது.. .பாமக-அதிமுகவின் பலத்தை மீறி வென்றது எப்படி?
கடலூர்: பண்ருட்டியில் வேல்முருகனின் வெற்றி சாதாரணமானது அல்ல. நிச்சயம் அசாத்தியமானது. பாமக, அதிமுகவின் கடும் பிரச்சாரங்களை மீறி வென்றுள்ளார். இதற்கு முக்கிய கதரணம் வேல்முருகன் உதய சூரியன் சின்னத்தில் நின்றது. இன்னொரு முக்கிய காரணம், வேல்முருகனுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இறங்கி வேலை செய்தது.
திருமாவளவன் வேல்முருகனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய வந்த போது, நானே இங்கு போட்டியிடுவதாக நினைத்து சிறுத்தைகள் களப்பணியாற்ற வேண்டும் என்று கோரியிருந்தார். நிச்சயம் அதன்படி தான் விடுதலை சிறுத்தைகள் அங்கு வேலை செய்திருக்கிறார்கள். அதனால் தான் பண்ருட்டியில் பாமக மற்றும் அதிமுகவின் பலத்தை மீறி வேல்முருகன் வென்றுள்ளார்.
தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், தமிழகத்தில் மிகவும் கவனிக்கத்தக்க அரசியல் தலைவராக உள்ளார். பாமகவில் இருந்தபோது, பண்ருட்டித் தொகுதியிலிருந்து 2001 மற்றும் 2006 ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலில் எம்எல்ஏவாக வென்றார். அதன்பின்னர் 2011 தேர்தலில், புதிதாக உருவாக்கப்பட்ட நெய்வேலி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு அதிமுகவின் எம்.பி.எஸ். சிவசுப்பிரமணியனிடம் 8,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

பண்ருட்டி
அதன். பின்னர் பாமக தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், 2012 ஆம் ஆண்டு தமிழக வாழ்வுரிமை கட்சியை வேல்முருகன் ஆரம்பித்தார். இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்ற அவர், நெய்வேலி தொகுதியைத் தருமாறு கேட்டார். ஆனால் அந்தத் தொகுதியில் திமுக 2016 தேர்தலில் வென்றிருந்தால் விட்டுத்தரவில்லை அதற்கு பதிலாக பண்ருட்டி தொகுதியை திமுக கொடுத்தது. அதுவும் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனையுடன்தான் வழங்கப்பட்டது.

அதிமுக 4 முறை வெற்றி
பண்ருட்டி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் ஒரு முறையும், 4 முறை அ.தி.மு.கவும், தி.மு.க மற்றும் பாமக தலா மூன்று முறையும், தே.மு.தி.க, ஒரு முறையும் வெற்றி பெற்றிருந்தன. 2016 தேர்தலில் அ.தி.மு.கவின் சத்யா பன்னீர்செல்வம் வெற்றிபெற்றார். இந்த முறை சத்யா பன்னீர்செல்வத்திற்கு சீட் தரப்படவில்லை. அதற்கு பதில் அதிமுகு சார்பில் முன்னாள் எம்எல்ஏ சொரத்தூர் ராஜேந்திரனுக்கு சீட் கொடுத்தது அதிமுக மேலிடம். மக்கள் நீதி மய்யம் சார்பில் ஜெயலாணி, நாம் தமிழர் கட்சி சார்பில் சுபாஷினி மற்றும் அமமுக சார்பில் பி.சிவகொழுந்து ஆகியோர் போட்டியிட்டனர்.

விசிக வேலை செய்தது
பண்ருட்டி தொகுதியை பொறுத்தவரை வன்னியர்களும், தலித் மக்களும் சம அளவில் உள்ள தொகுதியாகும். இங்கு வேல்முருகன் உதய சூரியன் சின்னத்தில் நின்றது வெற்றிக்கு காரணம் என்றால், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தீவிரமாக வேலை செய்தது மற்றொரு காரணம் ஆகும். அதிமுக வேட்பாளருக்கு பாமக ஆதரவு மிகப்பெரிய பலமாக இருந்ததால் போட்டி கடுமையாகவே காணப்பட்டது. வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு கொண்டு வந்ததும் அதிமுகவிற்கு பெரும்பலமாக இருந்தது.

அசாத்தியமானது
வாக்கு எண்ணிக்கையில் ஆரம்பத்தில் பின்னடைவை சந்தித்திருந்தாலும், வேல்முருகன் படிபடியாக முன்னிலை வகிக்கத் துவங்கினார் வேல்முருகன். இருப்பினும் வாக்கு வித்தியாசம் பெரிய அளவில் இல்லை. இருவரும் மாறி மாறி முன்னிலை வகித்தனர். இறுதியில் வேல்முருகன் 4,355 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுகவின் ராஜேந்திரனை தோற்கடித்து வெற்றி பெற்றார். இந்த வெற்றி உண்மையில் சாதாரணமானது அல்ல. பாமக அதிமுகவின் கடும் பிரச்சாரங்களை மீறி வேல்முருகன் வென்றுள்ளார்












Click it and Unblock the Notifications