பாங்காக்கில் "உளவு".. முன்பே போட்ட திட்டம்! உளவுத்துறை ஐஜி செந்தில்வேலன் யார்? ஸ்டாலின் பிளான் என்ன?
கடலூர்: கள்ளக்குறிச்சியில் கலவரத்தை தொடர்ந்து அடுத்தடுத்து பல டிரான்ஸ்பர்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் முக்கியமாக நேற்று உளவுத்துறை ஐஜி டிரான்ஸ்பர் செய்யப்பட்டார்.
Recommended Video
கள்ளக்குறிச்சியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கலவரம் நடந்ததில் இருந்தே உளவுத்துறை மீது பல்வேறு புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன. இந்த கலவரம் வாட்ஸ்ஆப் மூலம் திட்டமிடப்பட்டதாக கூறப்படுகிறது.
பக்கத்து மாநிலங்களில் இருந்து கூட ஆட்கள் கலவரம் செய்வதற்காக கள்ளக்குறிச்சி வந்ததாக கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 300 பேர் வாட்ஸ் ஆப் குழுக்களை உருவாக்கி அதில் திட்டங்களை தீட்டியதாகவும் கூறப்படுகிறது.

உளவுத்துறை
இவ்வளவு பெரிய போராட்டத்தை உளவுத்துறை கணிக்க தவறிவிட்டதாக புகார் வைக்கப்படுகிறது. அதே சமயம் உளவுத்துறை கணித்தது, ஆனால் மாவட்ட போலீஸ் நிர்வாகம் இதில் நடவடிக்கை எடுக்கவில்லை. சரியான போலீஸ் பாதுகாப்பை கொடுக்கவில்லை என்றும் ஒரு வாதம் வைக்கப்படுகிறது. இதையடுத்தே மாவட்ட எஸ்.பி, மாவட்ட ஆட்சியர் இருவரும் அடுத்தடுத்து மாற்றப்பட்டனர். தற்போது உளவுத்துறை ஐஜி மாற்றப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு காவல்
கடந்த ஜனவரி மாதம் 9ம் தேதி தமிழ்நாடு காவல்துறையில் உளவுத்துறை ஐஜியாக ஆசியம்மாள் நியமனம் செய்யப்பட்டார். உளவுத்துறையில் டிஐஜியாக இருந்தவர் ஐஜியாக பதவி உயர்வு பெற்றார்.உளவுத்துறையில் டிஐஜியாகவும் பின்னர் ஐஜியாகவும் முதல்முறை பொறுப்பேற்ற பெண் இவர்தான். இதனால் இவர் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் ஆசியம்மாள்.

நேர்மையான அதிகாரி
நேர்மையான அதிகாரி என்று பாராட்டப்பட்டவர். குரூப் 1 தேர்வு மூலம் டிஎஸ்பி ஆகி, ஐஜி அளவிற்கு உயர்ந்தவர். எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் அரசியல் சார்பற்று இருந்த காரணத்தால் தொடர்ச்சியாக இவருக்கு புரொமோஷன்கள் வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இப்போது திடீரென கள்ளக்குறிச்சி கலவரம் காரணமாக கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு திடீரென இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். இவரின் இடத்தில் ஐபிஎஸ் கே.ஏ.செந்தில்வேலன் நியமிக்கப்பட்டுள்ளார்.

செந்தில்வேலன்
தமிழ்நாட்டில்தான் முன்பு செந்தில்வேலன் இருந்தார். ஆசியம்மாள் ஐஜி ஆன அதே ஆர்டரில்தான் செந்தில் வேலனுக்கு கடந்த ஜனவரி 9ம் தேதி மத்திய அரசு பணிக்கு டிரான்ஸ்பர் வழங்கப்பட்டது. டிஐஜி இந்திய தூதரக பணி பாங்காக் என்ற பொறுப்பில் இவர் டிரான்ஸ்பர் செய்யப்பட்டார். அங்கும் இவர் உளவுப்பிரிவில்தான் பணியாற்றி வந்து இருக்கிறார். சர்வதேச அளவில் சில உளவு தகவல்களை திரட்டி மத்திய உள்துறைக்கு அனுப்பும் பணிகளை செய்து வந்துள்ளார்.

டிரான்ஸ்பர்
சில நாட்களுக்கு முன்னதாக அவர் மீண்டும் தமிழ்நாடு பிரிவிற்கு டிரான்ஸ்பர் செய்யப்பட்டார். அப்போதே இவருக்கு உளவுத்துறையில் முக்கிய பொறுப்பு வழங்கப்படலாம் என்று கூறப்பட்டது. இவருக்கு முக்கிய பொறுப்பு வழங்கும் விதமாகவே தமிழ்நாடு அரசு இவரை திருப்பி கேட்டதாகவும் ஒரு தகவல் வந்தது. ஏனென்றால் கள்ளக்குறிச்சி விவாகரத்திற்கு முன்பாகவே கடந்த மார்ச்சில் அரியலூர் மாணவி மரணத்தில் உளவுத்துறை சரியாக செயல்படவில்லை என்று புகார்கள் வைக்கப்பட்டன. இடையில் சில உளவுத்தகவல்கள் கசிந்ததாகவும் கூட கூறப்பட்டன.

ஆசியம்மாள்
இப்படிப்பட்ட நிலையில்தான் ஆசியம்மாள் மாற்றப்பட்டு செந்தில்வேலன் உள்ளே வந்துள்ளார். ஆசியம்மாள் தற்போது அமலாக்கப்பிரிவு ஐஜியாக மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. செந்தில்வேலன் மிகவும் திறமையான அதிகாரி என்று பெயர் பெற்றவர். உளவு பணியில் அனுபவம் கொண்டவர். இதுவரை பெரிய பிளாக் மார்க் எதுவும் இல்லாதவர். ஏற்கனவே பல முக்கிய வழக்குகளை இவர் நன்றாக கையாண்டு இருக்கிறார்.

ஸ்டாலின் பிளான்
முக்கியமாக பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் 2011ல் நடந்த போது அதை இவர் கையாண்ட விதம் கவனம் பெற்றது. இப்போது உளவுத்துறையை மீண்டும் சரியாக பாதைக்கு கொண்டு செல்லும் டாஸ்க் இவருக்கு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது உளவுத்தகவல்களை முறையாக கொடுப்பது, அதற்கு அழுத்தம் கொடுப்பது போன்ற பல மாற்றங்களை மேற்கொள்ளும் வகையில் முதல்வர் ஸ்டாலின், செந்தில் வேலனை களமிறக்கி உள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications