லோக்சபா சம்பவம் நெ.2 : தற்காலிக துணை சபாநாயகர் பொறுப்புக்கான அழைப்பை நிராகரித்த டிஆர் பாலு, சுரேஷ்!
டெல்லி: மத்தியில் ஆட்சி அமைத்துள்ள பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிர்க்கட்சியான "இந்தியா" கூட்டணி முதல் நெருக்கடியை கொடுத்துள்ளது. 18-வது லோக்சபா கூட்டத் தொடர் தொடங்கும் நிலையில் தற்காலிக துணை சபாநாயகர் பொறுப்பை "இந்தியா" கூட்டணி கட்சி எம்பிக்கள் புறக்கணித்துள்ளனர். பிரதமர் மோடிக்கு அடுத்ததாக பதவியேற்க அழைத்ததை காங்கிரஸின் கொடிக்குன்னில் சுரேஷ், திமுகவின் டிஆர் பாலு நிராகரித்தனர்.
18-வது லோக்சபாவின் முதல் கூட்டத் தொடர் இன்று முற்பகல் 11 மணிக்கு தொடங்குகிறது. முன்னதாக ஜனாதிபதி மாளிகையில் ஒடிஷா பாஜகவைச் சேர்ந்த 7 முறை எம்பியான தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மகதாப்புக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இதனையடுத்து 18-வது லோக்சபா கூட்டத் தொடரை தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மகதாப் நடத்தினார். இன்றும் நாளையும் புதிய எம்பிக்கள் பதவியேற்பர். ஜூன் 26-ந் தேதிதான் புதிய சபாநாயகர் தேர்தல் நடைபெறும்.
18-வது லோக்சபா கூட்டம்: சம்பவம் நெ.1.. அரசியல் சாசனத்துடன் "இந்தியா" கூட்டணி எம்பிக்கள் போராட்டம்!
இன்றும் நாளையும் எம்பிக்கள் பதவியேற்பு நிகழ்வுக்காக தற்காலிக சபாநாயகருக்கு உதவ- தற்காலிக துணை சபாநாயகர்களாக கொடிக்குன்னில் சுரேஷ்(காங்கிரஸ்), டிஆர். பாலு(திமுக), ராதா மோகன் சிங்(பாஜக),பகன்சிங் குலஸ்தே(பாஜக) சுதிப் பந்தோபாத்யாய் (திரிணாமுல் காங்கிரஸ்) ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
மோடி எம்பியாக பதவியேற்ற போது அரசியல் சாசன புத்தகத்தை உயர்த்தி காட்டி 'இந்தியா' எம்பிக்கள் முழக்கம்!
ஆனால் தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மகதாப் நியமனத்துக்கு "இந்தியா" கூட்டணி கட்சிகள் ஏற்கனவே கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. 8 முறை எம்பியான கொடிக்குன்னில் சுரேஷ்தான் நாடாளுமன்ற மரபுப்படி தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டிருக்க வேண்டும்; இந்த மரபை மத்திய பாஜக கூட்டணி அரசு மீறிவிட்டது. கொடிக்குன்னில் சுரேஷ் தலித் என்பதாலேயே அவரை புறக்கணித்துவிட்டது மத்திய அரசு என்பது "இந்தியா" கூட்டணிக் கட்சிகளின் குற்றச்சாட்டு.
மேலும் பாஜகவிலேயே 7 முறை எம்பியாக இருக்கும் ரமேஷ் சந்தப்பா ஜிகஜினகியின் பெயரையும் கூட தலித் என்பதாலேயே தற்காலிக சபாநாயகர் பதவிக்கு பரிசீலனை செய்யவில்லை என மூத்த காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டியிருக்கிறார்.
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் எம்பிக்கள் பதவியேற்பு இந்திய ஜனநாயகத்தின் புதிய தொடக்கம்- மோடி பெருமிதம்
ஆனால் பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் இந்த குற்றச்சாட்டுக்கு முக்கியத்துவமும் விளக்கமும் தராமல் கடந்து செல்கின்றன.
இதனால் இன்று லோக்சபாவில் தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் தற்காலிக துணை சபாநாயகர் பொறுப்பை "இந்தியா" கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், திமுக புறக்கணித்தன. லோக்சபாவில் பிரதமர் மோடி எம்பியாக பதவியேற்ற பின்னர் மரபுப் படி சீனியர் எம்பிக்களான, தற்காலிக துணை சபாநாயகர்களான கொடிக்குன்னில் சுரேஷ், டிஆர் பாலு ஆகியோரை தற்காலிக சபாநாயகர் பதவியேற்க அழைத்தார். ஆனால் இந்த அழைப்பை இருவரும் ஏற்க மறுத்து பதவியேற்கவில்லை.
முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் 'இந்தியா' கூட்டணி எம்பிக்கள் காந்தி சிலை இடம் மாற்றம் செய்யப்பட்டதற்கு எதிராக அரசியல் சாசனப் புத்தகத்துடன் போராட்டம் நடத்தினர். லோக்சபாவில் பிரதமர் மோடி எம்பியாக பதவியேற்ற போதும் அரசியல் சாசனப் புத்தகத்தை உயர்த்திக் காட்டி முழக்கமிட்டனர்.












Click it and Unblock the Notifications