2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லுமா செல்லாதா? மக்கள் மத்தியில் குழப்பம்.. விளக்கம் இதோ!
டெல்லி: 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்து நீக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி வெளியிட்டு இருக்கும் இந்த அறிவிப்பால் மக்கள் மத்தியில் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லுமா? செல்லாதா என்ற குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது. இதற்கான விளக்கத்தை இங்கே பார்க்கலாம்.
இந்தியாவில் கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதாவது அப்போது புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. மக்கள் தங்களிடம் இருக்கும் பணத்தை வங்கியில் செலுத்திக் கொள்ளலாம் என்றும் வெளியில் புழக்கத்தில் இந்த ரூபாய் தாள்கள் செல்லாது என்றும் அறிவிப்பு வெளியானது.

இதனால், தங்கள் கைகளில் வைத்திருந்த பணத்தை வங்கிகளில் டெபாசிட் செய்ய மக்கள் குவிந்தனர். வங்கிகளில் நீண்ட தொலைவிற்கு மக்கள் காத்திருக்க வேண்டிய நிலையும் இருந்தது. பழைய ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்போடு புதிய ரூ.500 தாள்களும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களும் அறிமுகம் செய்யப்பட்டது.
துவக்கத்தில் மக்கள் மத்தியில் அதிகம் புழங்கிய ரூ.2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் புழக்கம் தற்போது கணிசமாக குறைந்துள்ளது. தற்போது 500 ரூபாய், 200 ரூபாய் மற்றும் 100 ரூபாய் புழக்கத்தில் பெரும்பாலும் உள்ளது. 2000 ரூபாய் நோட்டுகள் ஏடிஎம்களிலும் சரி மக்கள் புழக்கத்திலும் காண்பதே அரிதாகிவிட்டது.
இந்த நிலையில், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்து நீக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெற ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. ஆகவே ரூ.2,000 நோட்டுகளை வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு இனி விநியோகம் செய்யக்கூடாது.
பொதுமக்கள் தங்கள் கைவசம் இருக்கும் 2,000 ரூபாய் நோட்டுகளை வரும் 23-ம் தேதி முதல் வங்கிகளில் கொடுத்து கணக்கில் வரவு வைத்துக்கொள்ள முடியும். அப்படி இல்லையென்றால் வேறு ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொள்ளலாம். ஒரு நேரத்தில் அதிகபட்சம் 20,000 ரூபாய் வரை வங்கிகளில் மாற்றிக்கொள்ள முடியும். அனைத்து வங்கி கிளையிலும் பணத்தை மாற்றிக்கொள்ள முடியும்.
வரும் செப்டம்பர் 30-ம் தேதி வரை வங்கிகளில் மாற்றிக்கொள்ள முடியும். இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் பணமதிப்பிழப்பு செய்யப்படவில்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி வெளியிட்டு இருக்கும் இந்த அறிவிப்பால் மக்கள் மத்தியில் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லுமா? செல்லாதா என்ற குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது. எனினும் இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டு இருந்த அறிக்கையில் கூறப்பட்டு இருக்கிறது.

அதாவது, தற்போது புழக்கத்தில் இருக்கும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் சட்டப்பூர்வமாக செல்லத்தக்கது. மக்கள் அதை பரிமாற்றத்திற்கு பயன்படுத்திக்கொள்ளலாம். அதேவேளையில் வங்கிகளில் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 20 ஆயிரம் வரை மாற்றிக்கொள்ளலாம் என்பது போக இதற்கு எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. இதனால், ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பால் மக்களுக்கு உடனடியாக எந்த பாதிப்பும் இல்லை. எனினும், செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு பிறகு ரூ.2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற நிலை தானாகவே வந்து விடும் என்பது பொருளாதார வல்லுனர்கள் சொல்லும் கருத்தாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications