தமிழ்நாட்டில் 29 தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் நிலுவையில் உள்ளன: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
டெல்லி: தமிழ்நாட்டில் 29 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் நிலுவையில் இருப்பதாக ராஜ்யசபாவில் கேள்வி ஒன்றுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பதிலளித்தார். மேலும் 2014-ம் ஆண்டு முதல், இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட திட்டங்களை நிறைவேற்ற ரூ. 3.77 லட்சம் கோடி அளவிற்கு கடன்களைப் பெற்றுள்ளதாகவும் அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
ராஜ்யசபாவில் நெடுஞ்சாலைத் திட்டம் தொடர்பான கேள்விகளுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அளித்த பதில்: கடந்த 2014, ஏப்ரல் 1 முதல் தொடங்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களில் 697 திட்டங்கள் நிலுவையில் உள்ளன. நிலம் கையகப்படுத்துதல், சட்டப்பூர்வ ஒப்புதல், அனுமதி, ஆக்கிரமிப்பு அகற்றம், சட்டம் ஒழுங்கு, ஒப்பந்ததாரரின் நிதி நெருக்கடி, ஒப்பந்ததாரரின் மோசமான செயல்பாடு, கொவிட்-19 பெருந்தொற்று, கனமழை, வெள்ளப்பெருக்கு, புயல், நிலச்சரிவு, பனிச்சரிவு போன்றவை இத்திட்டங்கள் நிறைவடைய தாமதமாவதற்கு காரணங்களாகும்.

திட்டங்கள் தாமதம் ஏன்?: தாமதமான அனைத்து திட்டங்களுக்கும் கூடுதல் நிதி தேவை ஒரு பிரச்சனையல்ல. தாமதத்திற்கு ஒப்பந்தகாரர் காரணமாக இல்லையெனில், ஒப்பந்த நிபந்தனைகளின்படி அதிகரித்த செலவுத்தொகை செலுத்தப்படுகிறது. கூடுதல் நிதி தேவைப்பட்டால் அரசு வழங்கும். தாமதத்திற்கு ஒப்பந்தக்காரர் காரணமாக இருந்தால், சேதத்திற்கான தொகை விதிக்கப்படுகிறது. தாமதம் காரணமாக கூடுதல் செலவு கிடையாது.
ரூ. 3.77 லட்சம் கோடி கடன்: 2014-ம் ஆண்டு முதல், இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட திட்டங்களை நிறைவேற்ற ரூ. 3.77 லட்சம் கோடி அளவிற்கு கடன்களைப் பெற்றுள்ளது.
தமிழ்நாட்டில் 29 திட்டங்கள்: தமிழ்நாட்டில் 29 தேசிய நெடுஞ்சாலைகள் திட்டங்களும், தெலுங்கானாவில் 24 தேசிய நெடுங்சாலைகள் திட்டங்களும், ஆந்திரப்பிரதேசத்தில் 36 தேசிய நெடுஞ்சாலைகள் திட்டங்களும், கர்நாடகாவில் 40 தேசிய நெடுஞ்சாலைகள் திட்டங்களும்,கேரளாவில் 11 தேசிய நெடுஞ்சாலைகள் திட்டங்களும் நிலுவையில் உள்ளன.
மின்னணு சுங்கக் கட்டண வசூல்: கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெங்களூரு - மைசூரு இடையேயான தேசிய நெடுஞ்சாலை எண் 275 மற்றும் ஹரியானாவில் உள்ள பானிபட் - ஹிஸார் இடையேயான தேசிய நெடுஞ்சாலை எண் 709 (பழைய எண் 71A) ஆகிய இரு நெடுஞ்சாலைப் பிரிவுகளில், ஜிஎன்எஸ்எஸ் எனப்படும் உலகளாவிய போக்குவரத்து செயற்கைக் கோள் நடைமுறை அடிப்படையிலான மின்னணு சுங்கக் கட்டண வசூல் முறை முன்னோடித் திட்டமாக செயல்படுத்தப்பட உள்ளது.
ஏற்கனவே நடைமுறையில் உள்ள ஃபாஸ்டேக் கட்டண வசூல் வசதியுடன் கூடுதலாக இந்தப் புதிய முறையை அமல்படுத்தப்பட உள்ளது.
மரக்கன்றுகள்: நாடு முழுவதும் உள்ள நெடுஞ்சாலைகளை பசுமை நெடுஞ்சாலைகளாக மாற்றும் விதமாக, சாலையோரங்களில் இதுவரை 402.28 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில், சாலையோரங்கள் மற்றும் சாலை நடுவில் உள்ள தடுப்புகளில் இதுவரை 21.67 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.
ஓடும் வாகனங்களில் தீ விபத்துகள்: மின்சார வாகனங்களில் தீ விபத்து சம்பவங்களை அடுத்து, மின்சார வாகனங்களில் பேட்டரி மற்றும் அதன் கூறுகள், பிஎம்எஸ் (பேட்டரி மேலாண்மை அமைப்பு) மற்றும் தொடர்புடைய அமைப்புகளுக்கான பாதுகாப்பு தரங்களை உருவாக்க பரிந்துரைக்க சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் ஒரு நிபுணர் குழுவை அமைத்துள்ளது. இக்குழுவின் அறிக்கையின் அடிப்படையில், மின்கலம் மற்றும் மின்சார வாகனங்களின் தொடர்புடைய பாகங்களுக்கான பாதுகாப்பு தரங்கள் மற்றும் மின்கல பேக்குகளுக்கான தொழில்நுட்ப தேவைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. மின்சார வாகன உற்பத்தியாளர்கள் பின்பற்றுவதற்கான தரங்களை இந்த அமைச்சகம் அறிவிக்கை செய்துள்ளது. மேலும், இதுபோன்ற சம்பவங்களை அடுத்து ஸ்லீப்பர் பெட்டிகள் (ஏஐஎஸ் 119) தொடர்பான தரங்களும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. வாகனங்களில் ஏற்படும் தீ விபத்துகளைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
பாலங்கள் சீரமைப்பு: நாட்டில் உள்ள ஒட்டுமொத்த தேசிய நெடுஞ்சாலை கட்டமைப்பில் உள்ள பாலங்கள் மற்றும் பிற கட்டமைப்புகளை கண்காணிக்கவும் பராமரிக்கவும் இந்திய பால மேலாண்மை அமைப்புக்கு நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. பாலங்கள், கட்டுமானங்கள் உள்ளிட்ட தேசிய நெடுஞ்சாலைகளின் பராமரிப்பு மற்றும் பராமரிப்பு பல்வேறு முறைகளில் மேற்கொள்ளப்படுகிறது. பொறியியல் கொள்முதல் மற்றும் கட்டுமான ஒப்பந்தங்களில், ஒப்பந்தக்காரர்கள் கட்டுமான காலத்திலும் அதன் பின்னர் குறைபாடுகள் பொறுப்பு காலம் மற்றும் பராமரிப்பு காலத்திலும் சாலையை பராமரிக்கின்றனர். வடிவமைப்பு, உருவாக்கம், நிதி, இயக்குதல் மற்றும் ஒப்படைத்தல் / அரசு,தனியார் பங்களிப்பு ஒப்பந்தங்களில், சலுகையாளர்கள் கட்டுமான காலத்திலும் அதன் பின்னர் சலுகை காலம் முடியும் வரையிலும் சாலையை பராமரிக்கின்றனர். டோல் ஆபரேட்டிங் மற்றும் டிரான்ஸ்ஃபர் (TOT) / சிறப்பு நோக்க அமைப்புகள் சலுகை காலத்தில் சாலையை பராமரிக்கின்றன. மீதமுள்ள தேசிய நெடுஞ்சாலை பகுதிகள் பொதுவாக செயல்திறன் அடிப்படையிலான பராமரிப்பு ஒப்பந்தம் மற்றும் குறுகிய கால பராமரிப்பு ஒப்பந்ததாரர்களால் பராமரிக்கப்படுகின்றன. பாலங்கள் உள்ளிட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் பார்வை மற்றும் கருவிகள் அடிப்படையிலான ஆய்வு, மதிப்பீடு மற்றும் கண்காணிப்பு ஆகியவை தேசிய நெடுஞ்சாலைகளின் பல்வேறு கூறுகளின் உறுதித்தன்மையை உரிய நேரத்தில் பழுது பார்த்தல் / புனரமைத்தல் மூலம் பராமரிக்கப்படுவதை உறுதி செய்ய கடமையாக்கப்பட்டுள்ளது. சில முக்கியமான பாலங்களின் கட்டமைப்பு நிலைமைகளை அவ்வப்போது கண்காணிக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications