2ஜி வழக்கில் ஆ.ராசா உள்ளிட்டோரை விடுவித்தது அப்பட்டமான சட்டவிரோதம்.. டெல்லி ஐகோர்ட்டில் சிபிஐ வாதம்!
டெல்லி : 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் திமுக எம்.பி ஆ.ராசா உள்ளிட்டோரை விடுவித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு அப்பட்டமான சட்ட விதிமீறல் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ வாதத்தை முன்வைத்துள்ளது.
காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக சிபிஐ, அமலாக்கத்துறை ஆகியவை தனித்தனியாக வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்குகளில், முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா, தி.மு.க எம்.பி கனிமொழி உள்ளிட்ட 14 பேரையும் விடுவித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம், கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து, கடந்த 2018ஆம் ஆண்டில் சிபிஐ தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி தினேஷ் குமார் சர்மா முன்னிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நீரஜ் ஜெயின், ஆ.ராசா உள்ளிட்டோரை விடுவித்த விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பில் அப்பட்டமான சட்டவிதி மீற; இருப்பதாகவும், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் சிபிஐ தரப்பில் அளித்த சாட்சியங்களை நிராகரித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருப்பதாகவும் முறையிட்டார்.
ஆ.ராசா உள்ளிட்டோரை விடுவித்த சிறப்பு நீதிமன்றத் தீர்ப்பு பிழையானது என்றும், அவற்றில் உள்ள சட்ட முரண்களை முன்வைக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். சிபிஐ தரப்பின் வாதங்களை கேட்ட நீதிபதி தினேஷ் குமார் ஷர்மா, வழக்கின் விசாரணையை வரும் 29ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
2ஜி முறைகேட்டில் பணமோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுவித்ததற்கு எதிராக அமலாக்கத்துறை இயக்குநரகம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications