அக்டோபர் 1 முதல்.. நாட்டில் நடைமுறைக்கு வரும் 5 முக்கிய மாற்றங்கள்!
டெல்லி: அக்டோபர் 1, 2025 முதல் நாடு முழுவதும் பல முக்கிய விதி மாற்றங்கள் அமலுக்கு வரவுள்ளன. இதனால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை, நிதி மற்றும் பயணத்துறையில் நேரடி தாக்கம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1. எல்.பி.ஜி விலைகள் மாற்றம்
சமையல் எரிவாயு சிலிண்டர்களின் (14 கிலோ, 19 கிலோ) விலைகள் ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் எண்ணெய் விற்பனை நிறுவனங்களால் திருத்தப்படுகின்றன. இதனால் வீட்டு செலவில் கூடுதல் சுமை ஏற்படும் வாய்ப்பு உண்டு. அதேநேரம், பீகார் தேர்தல் நடைபெற உள்ளதால் இப்போதைக்கு கேஸ் விலையில் கை வைக்க மாட்டார்கள் என்பது எதிர்பார்ப்பு. அதோடு விமான எரிபொருள் (ATF), சி.என்.ஜி (CNG), பி.என்.ஜி (PNG) விலைகளும் மாறக்கூடும்.
2. ரயில் டிக்கெட் ஆன்லைன் முன்பதிவுக்கு புதிய விதி
முறைகேடுகளைத் தடுக்க, முன்பதிவு திறந்த முதல் 15 நிமிடங்களில் ஆதார் சரிபார்ப்பு செய்யப்பட்ட IRCTC கணக்குகள் மூலமாக மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்ய அனுமதி வழங்கப்படும். இந்த விதி IRCTC வலைத்தளம் மற்றும் செயலிகளுக்கு மட்டும் பொருந்தும்; ரயில் நிலையங்களில் உள்ள கவுண்டர்களுக்கு பொருந்தாது.
3. ஓய்வூதியத் திட்டங்களில் மாற்றம்
தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) உள்ளிட்ட பல்வேறு பென்ஷன் திட்டங்களில் புதிய மாற்றங்கள் அமலாகின்றன. பங்குச் சந்தை முதலீட்டிற்கான வரம்பு இதுவரை இருந்தது. ஆனால், அக்டோபர் 1, 2025 முதல், அரசு சாரா துறையின் சந்தாதாரர்கள் பல திட்டக் கட்டமைப்பின் (Multiple Scheme Framework - MSF) கீழ் தங்கள் முதலீட்டில் 100% வரை பங்குச் சந்தை (Equity) விருப்பங்களில் முதலீடு செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
4. UPI விதிகளில் மாற்றம்
பாதுகாப்பை அதிகரிக்கும் நோக்கில், தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) UPI-இன் பீயர்-டு-பீயர் பரிவர்த்தனைகளில் உள்ள "கலெக்ட் ரிக்வெஸ்ட்" அல்லது "புல் டிரான்சாக்ஷன்" வசதி அக்டோபர் 1 முதல் நீக்கப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் புதிய நடைமுறைகள் உருவாகும். இந்த முடிவின் காரணமாக, அனைத்து உறுப்பினர் வங்கிகள் மற்றும் PhonePe, Google Pay, Paytm போன்ற அனைத்து UPI செயலிகளும் இனிமேல், அக்டோபர் 1-க்குப் பிறகு P2P பணத்தை கோரும் பரிவர்த்தனைகளைத் தொடங்கவோ, வழிநடத்தவோ அல்லது செயல்படுத்தவோ முடியாது.
இந்த மாற்றம் எதனால்?
- 'கலெக்ட் ரிக்வெஸ்ட்' அல்லது 'புல் டிரான்சாக்ஷன்' (Collect Request or Pull Transaction) அம்சம், ஒரு தனிநபர் மற்றொரு நபரிடம் UPI மூலம் பணம் கோருவதற்கு அனுமதித்தது.
- நண்பர்களுக்கு நிலுவையில் உள்ள கடனை நினைவூட்டுவது அல்லது பில்களைப் பிரிப்பது போன்ற வசதிக்காக ஆரம்பத்தில் வடிவமைக்கப்பட்ட இந்த அம்சம், அண்மைக் காலமாக மோசடி செய்பவர்களால் தவறாகப் பயன்படுத்தப்பட்டது.
- மோசடி செய்பவர்கள், முறையான தொடர்புகள் அல்லது அதிகாரிகளைப் போல நடித்து, ஏமாற்றும் கோரிக்கைகளை அனுப்புவார்கள். இதனை அறியாத பயனர்கள் அந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டவுடன், உடனடியாகப் பணம் அவர்களுடைய கணக்கிலிருந்து கழிக்கப்பட்டுவிடும்.
இந்த அபாயத்தைக் கருத்தில் கொண்டே NPCI இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளது.
5. வங்கிகளில் அக்டோபர் விடுமுறைகள்
அக்டோபர் மாதம் பண்டிகைகள் நிறைந்திருப்பதால், நாடு முழுவதும் வங்கிகளில் மொத்தம் 21 விடுமுறைகள் இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி ஜெயந்தி, துர்கா பூஜை, தசரா, தீபாவளி, சத் பூஜை உள்ளிட்ட பண்டிகைகளுடன் இரண்டாவது, நான்காவது சனிக்கிழமைகள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளும் அடங்கும். ஆனால், விடுமுறை நாட்கள் மாநிலங்களுக்கு ஏற்ப மாறுபடும்.
குறிப்பு: மேற்கண்ட தகவல்கள் ஊடக அறிக்கைகளின் அடிப்படையில் தொகுக்கப்பட்டவை. அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்காக தொடர்புடைய அரசுத் துறைகளின் இணையதளங்களை சரிபார்க்க வேண்டியது அவசியம்.


Click it and Unblock the Notifications
