ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் புகுந்த வெள்ளம்.. 3 மாணவர்கள் பலியான சோகம்! மேலும் 5 பேர் கைது
டெல்லி: டெல்லியில் இயங்கி வந்த ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் தரை தளத்தில் மழை நீர் புகுந்ததில் 3 மாணவர்கள் வெளியே வரமுடியாமல் சிக்கி உயிரிழந்தனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில் சக மாணவர்கள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்தனர். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக மேலும் 5 பேர் இன்று கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
கடந்த சில நாட்களாக வட மாநிலங்களில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக டெல்லியில் பெய்த மழை தாழ்வான இடங்களில் வெள்ளத்தை ஏற்படுத்தியிருந்தது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தது. அதேபோல தாழ்வான பகுதிகளில் வசித்த மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டனர். இந்நிலையில் ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் வெள்ளம் புகுந்ததில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர் மழை காரணமாக டெல்லி பழைய ராஜிந்தர் நகரில் இயங்கிவரும் ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் தண்ணீர் புகுந்ததால் நேற்று 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளே சிக்கிக்கொண்டனர். இதற்கிடையில், 3 மாணவர்களை தவிர மற்ற மாணவர்கள், வெளியில் இருந்த மாணவர்களின் உதவியுடன் வெளியேறியதாக தெரிகிறது. இதற்கிடையில் வெளியேற முடியாத இரு மாணவிகள் ஒரு மாணவர் என 3 மாணவர்களின் உடல்களும் பலமணி நேர தேடுதலுக்கு பிறகு மீட்கப்பட்டது.
இரு வாரங்களுக்கு முன்பாகவே இந்த கட்டடத்தில் வடிகால் அமைப்பு மோசமாக உள்ளதாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாணவர்கள் புகாரளித்ததாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து டெல்லியில் உள்ள அனைத்து பயற்சி மையத்தையும் ஆய்வு செய்ய உத்தர விடப்பட்டுள்ளது.
உயிரிழந்த மூன்று மாணவர்கள், உத்தர பிரதேச மாநிலம் அம்பேத்கர் நகர் மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரேயா யாதவ், தெலுங்கானாவை சேர்ந்த தன்யா சோனி மற்றும் கேரளாவின் எர்ணாகுளத்தை சேர்ந்த நிவின் டால்வின் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதே சமயம் இந்த சம்பவத்திற்கு நீதி கேட்டு டெல்லி கரோல் பாக் மெட்ரோ ரயில் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். மேலும் அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் டெல்லியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் தற்பொழுது டெல்லியின் மேயர் ஷெல்லி ஓப்ராயின் இல்லத்தை முற்றுகையிட்டு ஏபிவிபி மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்கு வந்த போலீசார் தடியடி நடத்தி மாணவர்களை கலைக்க முயன்ற வருகின்றனர். இதனால் டெல்லியில் பதற்றம் தொற்றியுள்ளது.
சம்பவம் நடந்த பகுதிக்கு டெல்லி மேயர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். ஆனால், டெல்லி ஆணையர் சம்பவ இடத்திற்கு வரவில்லை என மாணவர் அமைப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர். எனவே போராட்டம் நீடித்து வருகிறது. போராட்டத்தை கைவிடக்கோரி காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாணவர் உயிரிழப்பு தொடர்பான வழக்கில் நேற்று, பயிற்சி மையத்தின் உரிமையாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் என 2 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இதனை தொடர்ந்து இன்று 5 பேரை காவல்துறை கைது செய்துள்ளது. மேலும் விதிகளை பின்பற்றாத 13 பயிற்சி மையங்களுக்கு சீல் வைக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications