தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிப்பு.. ஜெய்பீம், சூரரை போற்று படங்களுக்கு எதிர்பார்ப்பு
டெல்லி: இந்தியாவில் 68 வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட உள்ளது. இதில் நடிகர் சூர்யாவின் சூரரைபோற்று, ஜெய்பீம் உள்பட பிற தமிழ் படங்களுக்கு விருதுகள் கிடைக்கலாம் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. நாட்டில் பல்வேறு மொழிகளில் வெளியான திரைப்படங்களில் சிறந்தவற்றை தேர்வு செய்து விருதுகள் வழங்கப்படுகிறது.
சிறந்த திரைப்படங்கள், சிறந்த நடிகர், நடிகைகள் உள்பட பல்வேறு கலைகளில் சிறப்பாக திரைப்படங்களுக்கு பங்காற்றிய கலைஞர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படும்.

இன்று விருதுகள் அறிவிப்பு
அதன்படி நாட்டின் 68வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட உள்ளது. இந்த விருதுகள் இன்று மாலை 4 மணிக்கு டெல்லியில் அறிவிக்கப்பட உள்ளது. கடந்த முறை தமிழ் சினிமாவுக்கு ஏராளமான பிரிவுகளில் விருதுகள் கிடைத்ததால் இந்த முறையும் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

எதிர்ப்பார்ப்பு என்ன?
குறிப்பாக நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகி ஆஸ்கார் வரை சென்ற சூரரை போற்று மற்றும் ஜெய் பீம் படங்களுக்கு விருதுகள் கிடைக்கலாம் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதுபோல் மேலும் பல தமிழ் திரைப்படங்களை மேற்கொள் காட்டி ரசிகர்கள் தங்களின் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். இதனால் இன்றைய தேசிய திரைப்பட விருது அறிவிப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கடந்த ஆண்டு விருதுகள்
கடந்த முறை அசுரன் திரைப்படத்திற்கு தேசிய விருது வழங்கப்பட்டது. இயக்குநர் வெற்றிமாறன் பெற்று கொண்டார். படத்தில் சிறப்பாக நடித்ததற்காக நடிகர் தனுஷ்க்கு விருது வழங்கப்பட்டது.தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் சூப்பர் டீலக்ஸ் படத்தில் விஜய் சேதுபதி திருநங்கையாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக சிறந்த துணை நடிகருக்கான விருது வழங்கப்பட்டது.

டி இமான்- ஆர் பார்த்திபன்
விஸ்வாசம் திரைப்படத்தில் இடம் பெற்ற கண்ணான கண்ணே பாடலுக்காக டி.இமான் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதையும், நடிகர் ஆர்.பார்த்திபன், ஒத்த செருப்பு சைஸ் 7 படத்துக்காக சிறந்த ஜூரி விருதையும், கேடி (எ) கருப்பு துரை என்ற தமிழ் படத்தில் நடித்த நாகவிஷால் சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருதும் வழங்கப்பட்டது. இதனால் தான் இந்த முறையும் தமிழ் சினிமாக்களுக்கு விருதுகள் அதிகம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications